Friday, 30 July 2010

நான் ஜாகிங் போனேன்.. நான் ஜாகிங் போனேன்..


பொதுவா சின்ன வயசுல நடந்த சம்பவம் எல்லாம் வளர வளர மறந்துடும். ஆனா மறக்க முடியாத சில விசயங்களும் இருக்கும். அது சோகமாவும் இருக்கலாம், சுவாரஸ்யமாவும் இருக்கலாம்.


என்னோட சின்ன வயசுல நா நிறைய சினிமா பாக்குறதுண்டு.. நானும் என்னோட பெரியப்பா பொண்ணும் ரொம்ப நல்ல தோழிகள். படத்துல வர்ற ஹீரோயின் எப்படி ஜடை போட்ருக்கா, எப்படி தோடு போட்ருக்கா, எப்படி செருப்பு போட்ருக்கானு பாத்து பாத்து அதே மாதிரி வேணும்னு அடம் பிடிச்சு வாங்குவோம். அப்புறம் அந்தந்த படத்துல அவங்க நடக்கிறது மாதிரி ஸ்டைலா நடந்து பாப்போம். இப்படி தான் ஒரு படத்துல (என்ன படம்னு மறந்து போச்சு) ஹீரோயின் white and white பேண்ட் ஷர்ட் போட்டுட்டு காலங்காத்தால ஜாகிங் போற காட்சியைப் பார்த்தோம். உடனே எங்களுக்கு அதே மாதிரி ஜாகிங் போகணும்னு ஆசை வந்திடுச்சு..
அதுவும் அதே மாதிரி white and white dress போட்டுக்கிட்டு ஜாகிங் பண்ணனும்னு முடிவு பண்ணினோம். நா அவளோட அம்மா கிட்ட போய் dressக்கு கெஞ்சினேன்.. அவ என் அம்மாகிட்ட வந்து கெஞ்சினா. பல நாள் கெஞ்சலுக்கு அப்புறம் ஒரு வழியா ரெண்டு பேருக்கும் வாங்கி குடுத்தாங்க. ஒரு நல்ல நாள் பாத்து ஜாகிங் பண்ண முடிவெடுத்தோம். ட்ரெஸ்க்கு மேட்ச்சா வளையல் தோடு பாசினு எல்லாமே வாங்கினோம். குதிரை வால் தான் போடணும், அப்ப தான் நாம ஓடும்போது முடி அழகா இருக்கும்னு அவ சொன்னா. அப்டினா அதுக்கு வெள்ளை ஹேர் பேண்ட் தான் வைக்கணும்ன்னு அதையும் வாங்கினோம். ஒரு வழியா எல்லாமே லிஸ்ட் போட்டு வாங்கிட்டு மறுநாள் ஜாகிங் ஆரம்பிக்கலாம்னு ப்ளான் போட்டோம். காலங்காத்தால தான் எல்லாரும் ஜாகிங் பண்ணுவாங்க, நாம எல்லார விடவும் முதல் ஆளா ஆரம்பிக்கணும்னு நா ஐடியா குடுத்தேன். அதுக்கு அவகிட்ட இருந்து எனக்கு பாராட்டு வேற கெடச்சது.. காலேல நாலரைக்கு எந்திரிக்கலாம், முதல் நாள் போறதுனால குளிச்சு, சாமி கும்பிட்டுட்டு கெளம்பலாம்னு அவ சொன்னா. சரின்னு சொல்லி நாலரைக்கு அலாரம் வச்சுட்டு படுத்தோம். சந்தோசத்துல நைட் முழுசும் தூக்கமே வரல. அந்த ஹீரோயின் மாதிரி நாமளும் ஜாகிங் போகப் போறோம்னு நெனைக்கும்போது உற்சாகமா இருந்துச்சு.
மறுநாள் காலேல அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடியே எந்திரிசுட்டோம். வேகவேகமா குளிச்சுட்டு புது வெள்ளை டிரஸ் போட்டோம்.
அதுக்கு மேட்சா வாங்கி வச்சிருந்த எல்லாத்தையும் போட்டுக்கிட்டு பக்தியா சாமி கும்பிட்டோம். எல்லாரும் தூங்கிகிட்டு இருக்கும்போது நாம தான் சுறுசுறுப்பா ஜாகிங் போகபோறோம், எல்லாரும் சோம்பேறிங்கனு எங்களுக்கு நாங்களே சொல்லிக்கிட்டு வீரமா வெளில வந்தோம்.
அவ்ளோ நேரம் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு. ஆனா வெளில கருங்கும்முனு இருட்டா இருந்தத பாத்ததும் என்னனு தெரில.. உள்ளுக்குள்ள போகலாமா வேணாமானு ஒரு ஓரத்துல சின்னதா கேள்வி எழும்புச்சு.. ஆனா ஒருத்தருக்கொருத்தர் வெளில காட்டிக்காம சிரிச்சு மலுப்பிகிட்டோம். இங்க இருந்தே ஓட வேணாம். வீட்ல இருந்து கொஞ்சம் தள்ளி ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லி நடந்தோம். தெரு முக்கு தாண்டி ஒரு playground இருக்கும். அங்க ஆரம்பிச்சு ஒரு ரவுண்டு அடிச்சு திரும்பி வீடு வரைக்கும் ஓடி வரலாம்னு முடிவு பண்ணி groundக்கு நடந்தோம்.
மெதுவா தான் ஓடனும், வேகமா ஓடகூடாதுன்னு ரூல்ஸ் எல்லாம் சொல்லி வச்சிருந்தோம். அதனால மெதுவா ஸ்டார்ட் பண்ணி ஓட ஆரம்பிச்சோம்.
விடிய ஆரம்பிச்சுகிட்டு இருந்த நேரங்குரதுனால கொஞ்சம் வெளிச்சம் தெரிஞ்சுது. சந்தோசமா ஓடிகிட்டு இருந்தோம்..

திடீர்னு தூரத்துல நாய் ஒன்னு கொலைக்கிற சத்தம் கேட்டுச்சு. தூரமா தான கேக்குதுன்னு நம்ம்ம்பி ஓடினோம். நேரம் ஆக ஆக அது பக்கத்துல கேக்க ஆரம்பிச்சது. அதுவும் ஒரு நாய் இல்ல, மூணு நாயோட சத்தம். எங்களுக்கு பயம் வந்திடுச்சு.. உடனே வீட்டுக்கு போய்டலாம்னு கொஞ்சம் வேகமா ஓட ஆரம்பிச்சோம். ஏதோ திருடன் தான் ஓடுறான்னு நெனச்சிருச்சு போல.. மூணும் சேந்து எங்கள விரட்ட ஆரம்பிச்சிடுச்சு. அவ்வளவுதான்..
நாங்க ஓட.. நாய் விரட்ட.. நாய் விரட்ட.. நாங்க ஓடனு ரணக்கலாமாய்டுச்சு..பின்னங்கால் பிடரியில அடிக்கிற மாதிரின்னு சொல்லி கேள்விப்பட்ருக்கோம் . ஆனா அப்பதான் அதோட அர்த்தத்த புரிஞ்சுகிட்டோம்.
உயிருக்கு பயந்து ஓடினதுல, கீழ விழுந்து வெள்ளை கலர் டிரஸ் brown கலர் ஆகி அங்கங்க ரத்த காயம் ஆனது எல்லாம் பெரிய கதை.. வீட்டுக்கு வந்து சேந்தா போதும்னு உயிரை வெறுத்துகிட்டு ஓடினதுல கடைசில நாங்க ஜெயிச்சுட்டோம், நாய் தோத்துப்போய் பாதில நின்னுடுச்சு.
நாய் கிட்ட ஜெயிச்சுட்டாலும் அம்மாகிட்ட மாட்டிகிட்டோம். மூச்சு திணறத் திணற அடிச்சாங்க.. அதுக்கப்புறம் இனிமே ஜாகிங் மட்டுமில்ல வாக்கிங் கூட போக மாட்டோம்னு ஒருத்தருக்கொருத்தர் சத்தியம் பண்ணிகிட்டோம்..
இன்னைக்கு வரைக்கும் ரோட்ல ஜாகிங் போறவங்கள பாத்தா எங்கள விரட்டுன அந்த மூணு நாய்ங்க தான் எனக்கு ஞாபகம் வருது..

Friday, 23 July 2010

ஊடலுக்காகக் காத்திருக்கிறேன்என்னுடன் நீ பேச மாட்டாயாமே..
அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா?
பிடித்ததை கண்சிமிட்டியும்
பிடிக்காததை புருவம் உயர்த்தியும்
எனக்குத் தெரிவிக்கிறதே..

சமாதானமாக நான் பேசும்போதெல்லாம்
செவிகளை எனக்கும்
விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய்..

அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது..
என்னிடமிருந்து 'லவ் யூ'வும்
உன்னிடமிருந்து 'ஹேட் யூ'வும்
பரிமாறப்படுகிறது..

பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்..

'சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.

பின்கூட்டி அணைக்கிறேன்..
பிடிக்காதது போல உதறுகிறாய்..
இறுக்காத பிடியிலும் கூட
இறுகியதாய் தடுமாறுகிறாய்..
ஏனோ தெரிவதில்லை..
உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில்
நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன்..

உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி
உன்னை வெறுப்பெற்றுகிறேன்..
பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய்..
தொலைக்காட்சியை..

எனது சேஷ்டைகளைப்
போலியாக வெறுக்கும்
உன் நடிப்பு
ஆஸ்கரையும் மிஞ்சும்..

உன் குழந்தைத் தனமான கோபங்களில்
அவ்வப்போது கரைந்து தான் போய்விடுகிறேன்..

என்னென்னவோ கோமாளித்தனங்கள் செய்து
ஒருவழியாக உன் மௌனத்தை கலைத்துவிட்டேன்..
'பழம்' என்று சிறுவர்கள் விரல் நீட்டி சொல்வது போல..

ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக..

Tuesday, 20 July 2010

ஏதாவது உருப்படியா செய்யணும்ல..


வணக்கம் வணக்கம் வணக்கம்..
இந்த விருது வழங்கும் விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும்
என் நன்றிகள்..
முதல் முறையாக நான் இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறேன்..
ஏதாவது குற்றம் இருந்தால் மன்னித்துவிடுங்கள்..

இப்போது விருதுகளை அள்ளி வழங்க ஆரம்பிக்கிறேன்...

இதோ முதல் விருது..


கவிதை காதலன்
பிற மொழிப் படங்கள்.. தமிழில்..

அடுத்த விருது
பனித்துளி சங்கர்
ஜில்தண்ணி
எங்கே செல்லும் இந்தப் பாதை

அடுத்த விருது..

(அடிக்கடி வெளியே சென்றுவிடுவதால்)சைவகொத்துபரோட்டா
மங்குனி அமைச்சர்
வாழ்க்கைப் பயணம்

அடுத்ததாக வாங்குபவர்கள்..


ஸ்டார்ட் மியூசிக்
ஜெய்லானி
ப்ரியமுடன் வசந்த்

இறுதியாக கொடுக்கப்படும் விருது..குப்பைத்தொட்டி
கொஞ்சம் வெட்டிப் பேச்சு
பட்டாபட்டி

ஏதோ எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நான் விருது குடுத்துருக்கேன்..
காமெடி பண்ணிருந்தா மன்னிச்சுகங்க ..
நான் தற்போது தான் பதிவுலகில் உலவுகிறேன்.... நெறைய பதிவாளர்கள் எனக்கு தெரியாது..
அதுத்த முறை நிறைய பேர்களை தெரிஞ்சுகிட்டு விருது கொடுக்குறேன்..

விழாவுல கலந்துகிட்ட உங்களுக்கு என்னால முடிஞ்சுது..
இந்தாங்க..
சாப்ட்டு தெம்பா போங்க..

Monday, 5 July 2010

வயிற்றினுள் ஒரு இதயம்உருவானது உறுதியானதும்
துவங்கிவிட்டது..
உன்மீதான என் கற்பனைகள்.
உடலைக் கருவாக்கி, உதிரத்தை உணவாக்கி
உன்னை உலகிற்கும், உலகை உனக்கும்
அறிமுகப்படுத்தத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

உனது பேரிலிருந்து, பெரும் எதிர்காலம் வரை
விரிவடைந்தது எனது சிந்தனைகள்..
உன் ஒவ்வொரு அசைவினையும்
அனுபவிக்க ஆயத்தமானேன்..
உணவு முதல் உறக்கம் வரை
உனக்கேற்றதைப் பழகிக்கொண்டேன்.
உனக்கான பொருட்களை சேகரிப்பதே
என் முழு வேலையாகிப் போனது..
இனிய இசையும் எனது உரையாடல்களையும்
எப்போதும் உனக்குப் பரிசளித்தேன்.

கால்களின் வீக்கம் குறைய பார்லி காஞ்சி குடி
- பாட்டி சொன்னாள்
சூடு தணிக்க விளக்கெண்ணை தடவு
- அம்மா சொன்னாள்
குடல் சுற்றாமல் இருக்க உறங்கும் பயிற்சிகொள்
- அக்கா சொன்னாள்
குனிந்து நிமிர வீட்டுப்பணி செய்
- அத்தை சொன்னாள்
இவற்றோடு நடை பயிற்சியும் செய்
- தோழி சொன்னாள்
மாத்திரைகளை தவறாமல் சாப்பிடு
- இது மருத்துவர்
அனைத்தும் செய்தேன் உன் ஜனனம் சுகப்பட..
குமட்டல்களும் மயக்கங்களும்
சகித்துக்கொண்டேன் - உன் வளர்ச்சிக்காக.

நிறைமாத வளையல்களின் ஓசை
உனக்குக் கேட்டது போலும்..
உன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.

இருந்த இடம் சலித்துவிட்டது போல..
நீ முண்டத் தொடங்கினாய்..
கொஞ்சம் கொஞ்சமாக
முதுகுத்தண்டில் ஆரம்பித்த வலி
உடல் நரம்புகளைத் தொற்றியது..
வலிகளைப் பொறுத்துக்கொண்டேன்..
அது உனக்கான வழி என்பதால்.

ஏனோ உனக்கும் எனக்கும் பெரும் போராட்டமே நடந்தது..
இருவருமே அவதிப்பட்டோம்..
உனது பிஞ்சுக் கன்னங்களில்

என் முதல் முத்தம் பதிவதற்கு ஏங்கியிருந்தேன்..
என்னதான் உன்னை வெளியே தள்ளினாலும்
எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.

அரைநாள் அவதிக்குப்பின்
அது என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"
அப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..
என் சந்தோசங்களும் தான்.
Related Posts Plugin for WordPress, Blogger...