Monday, 28 February 2011

நின்னைச் சரணடைந்தேன் (1)

எழுந்ததிலிருந்தே உள்ளுக்குள் பதற்றமாகவே இருந்தான் சித்தார்த். அன்று தான் ரமேஷிற்குத் திருமணம். முதல் நாளே வரச்சொல்லி நண்பனிடமிருந்து அழைப்பு.. ஆனாலும் போக மனமில்லாது தங்கிவிட்டான். காரணம் சாஹித்யா. ரமேஷின் தங்கை. ஒரு காலத்தில் சித்தார்த்தின் காதலி. என்னதான் சித்தார்த்தின் காதலை ஏற்க மறுத்திருந்தாலும் மானசீகமாக மனைவியாக நினைக்கப்பட்டவள்.
கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகி விட்டது. சாஹித்யாவின் திருமணத்திற்கு கூட ரமேஷ் அழைத்திருந்தான். தன் காதலியின் திருமணத்தைப் பார்க்கும் தைரியம் யாருக்கு தான் இருக்கும்?? ஏதோ சாக்குகள் சொல்லி வரமறுத்துவிட்டான். காலத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை சித்தார்த்தின் கரங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. ஆரம்ப நாட்களில் சாஹித்யாவின் நினைவலைகளில் மூழ்கி மீளமுடியாமல் தவித்து, சுயநினைவின்றி அலைந்து, வேறு வழியின்றி சூழ்நிலையின் பிடியில் சிக்கிக்கொண்டான். இதோ காயத்ரியின் கழுத்தில் புதிதாய் இவனது மாங்கல்யம், அம்மாவின் கடைசி ஆசை என்பதால் மறுக்க முடியவில்லை.
“என்னங்க..“ ஏதோ யோசனையில் இருந்தவனை காயத்ரியின் குரல் கலைத்தது. என்ன, என்பதுபோல அவளைப் பார்த்தான். திருமணமான இந்த 15 நாட்களில், ஏறிட்டு மனைவியின் முகத்தைப் பார்ப்பது சொர்ப்பமாகவே இருந்தது சித்தார்த்துக்கு. சாஹித்யாவின் இடத்தில் வேறொரு பெண்ணை அவனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. திருமணமான நாள் முதலாய் இவனது பட்டும்படாமலுமான பேச்சுக்களும் ஒதுங்கிப்போன நடவடிக்கையும், காயத்ரிக்கு ஒன்றும் புரியாமலில்லை. காரணம் தெரியாதெனினும் அவனுடைய இனிமையான குணங்கள், காயத்ரியை கணவனின் மனமாற்றத்திற்குக் காத்திருக்கச் செய்தது.
“இதுல எந்தப் புடவையங்க கட்ட கையில் சில புடவைகளை வைத்துக்கொண்டு ஆவலாய் கேட்ட காயத்ரியை எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தான். காயத்ரி, ரமேஷுக்கு தூரத்து உறவினரின் மகள் என்பதால் இந்தத் திருமணத்திற்கு செல்வதிலான ஆர்வம் அவள் முகத்தில் தெரிந்தது. அதைப் பொருட்படுத்தாது புடவைகளைப் பார்த்தான். பளிச்செனத் தென்பட்டது அந்த சிவப்பு நிற பட்டுப்புடவை.
சிவப்பு நிற உடைகள் சாஹித்யாவிற்கு எப்போதும் எடுப்பாக இருக்கும். அவனே பலமுறை இதை சாஹித்யாவிடம் சொல்லியிருக்கிறான். பதிலுக்கு லேசான புன்னகையை உதிர்த்துச் செல்வாள். அந்தச் சிரிப்பு...
சட்டென மனதினுள் லேசான வலி தோன்றி மறைந்தது. கணவனின் பதிலுக்காக நின்றிருந்தவளிடம் “உன் இஷ்டம், எதையாவது கட்டிகிட்டு கிளம்பு“ என எங்கோ பார்த்தபடி சொல்லிவிட்டு குளியளறைக்குள் புகுந்தான். சாத்திய பாத்ரூம் கதவை சில நொடிகள் பார்த்துவிட்டு ஏமாற்றமாய்ப் பெருமூச்சொன்றை உதிர்த்தாள் காயத்ரி. பின் சகஜநிலைக்கு வந்தவளாய் கிளம்ப ஆயத்தமானாள். உள்ளே ஷவரைத் திறந்து, கண்மூடி நின்ற சித்தார்த்தினுள் பழைய நினைவுகள் ஓடத் துவங்கின.
ஒரு தலையாய் சாஹித்யாவைக் வருடக்கணக்காய் காதலித்து, கற்பனைகளை வளர்த்த நாட்களும், காதலை சொல்ல முடியாமல் தவித்துக்கிடந்த நாட்களும் மட்டுமல்ல.. காதலை வெளிப்படையாக அவளிடம் தெரிவித்த அந்த நிமிடத்தில் புழுவை விடக் கேவலமாகப் பார்த்த அவளுடைய பார்வையையும் அவனால் மறக்க முடிவதில்லை.
“ஸாரி சித்தார்த், அண்ணாவோட ப்ரெண்டுங்குற முறைல தான் உங்ககிட்ட பேசினேன். மத்தபடி என் மனசுல எதுவுமில்ல. அதுமட்டுமில்லாம எனக்கு கணவரா வரப்போகிறவர்க்கு சில தகுதிகள் இருக்கணும்னு கற்பனை பண்ணிருக்கேன். அழகு, படிப்பு, உத்தியோகம், அந்தஸ்துனு நிறைய விஷயம் எதிர்பாக்குறேன். நா எதிர்பாக்குற தகுதி உங்ககிட்ட இல்ல. உங்கள காயப்படுத்துறதுக்கு என்ன மன்னிச்சிடுங்க. இனிமே நமக்குள்ள எந்தப் பேச்சும் வேணாம். இன்னொரு தடவை காதல் அப்படி இப்படினு பேசி வீணா உங்க மரியாதைய கெடுத்துக்காதீங்க“ என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டுச் சென்றவளை, நிமிர்ந்து பார்க்க திராணியின்றி திரும்பி வந்தான்.
சாஹித்யாவின் திருமணத்தன்று, கண்ணாடி முன் நின்று, தான் கதறிய அழுகையிலிருந்து இன்றுவரை அவனால் மீள முடியவில்லை. ஒரு முறை தற்கொலைக்கு முயன்றும் கூட, விதி துரதிருஷ்டவசமாக அவனைக் காப்பாற்றி விட்டது. அந்தளவிற்கு அவளைக் காதலித்ததாலோ என்னவோ காயத்ரியை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.
காயத்ரியிடமும் குறை என்று எதுவுமேயில்லை.. லட்சணமானவள், நல்ல குணம்.. வந்ததிலிருந்து அவனுடைய மனப்போக்கை அணுமானித்து தன்னைத் தானே சமாதானித்துக் கொண்டவள். அம்மாவின் பிடிவாத்ததினால் திருமணத்திற்கு சம்மதித்தாலும், முழு மனதோடு ஏற்றுக்கொள்ள முடியாமல், தன் பழைய காதலின் உறுத்தல் சித்தார்த்தை தடுத்தது. நினைவு திரும்பியவனாய், குளித்துவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தான். உள்ளூர சாஹித்யாவைப் பார்க்கப் போகும் படபடப்பு இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாது, காயத்ரியுடன் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான் சித்தார்த்.
“சாஹித்யாவைப் பார்த்தால் என்ன பேசுவது?? எப்படி அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்ப்பது?? என்னிடம் அவள் சகஜமாகப் பேசுவாளா? கடவுளே.. கூடுமானவரை அவள் என் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். அவளுடனான சந்திப்பை ஏற்படுத்தி என்னைக் கூனிக்குறுக வைத்துவிடாதே..“ மனதுக்குள் முணுமுணுத்தபடி தயக்கமாய் மண்டபத்தினுள் நுழைந்தான் சித்தார்த்.

(தொடரும்...)
.
.

Friday, 25 February 2011

ராசிப்பொண்ணுக்கு ஒரு வாழ்த்து..
இப்படி வாழ்த்துப் பதிவு போட்றதுலயும் ஒரு வசதி இருக்குங்க.. பின்னூட்டம் போட்றவங்களுக்கு சிரமமே இருக்காது. தங்களோட கருத்துனு தனியா சொல்றதுக்கு எதுவும் இருக்காது.. மிஞ்சிப்போனா ரெண்டு வரில ஏதாவது வாசகம், இல்லேனா வெறுமனே “வாழ்த்துக்கள்“, பிறந்தநாள் வாழ்த்துக்கள்னு மட்டும் போடலாம்.. அதுவும் கூட முந்தின பின்னூட்டத்துல இருந்து Copy பண்ணி paste பண்ணிடலாம்.. சரிதானே???? (அதாவது தயவு செஞ்சு வாழ்த்திடுங்க ப்ளீஸ்..னு சொல்ல வரேன். ஏன்னு, பதிவப் படிச்சா உங்களுக்கே புரியும்.)
சரி விஷயத்துக்கு வரேன்...
எனக்கு ரெண்டு தங்கைனு ஏற்கனவே சொல்லிருக்கேன். (எப்ப“னு கேட்டு பல்பு குடுக்காதீங்க.. முந்தின ஏதோ ஒரு பதிவுல சொல்லிருக்கேங்க.) அதுல ரெண்டாவது தங்கைக்கு, அதாவது எங்க வீட்டு கடைக்குட்டிக்கு, வர்ற ஞாயித்துக் கிழமை (27.02.2011) பிறந்தநாள். (அதுக்கென்ன இப்ப“னு கேட்டும் பல்பு குடுத்துடாதீங்க). அவளுக்கு வாழ்த்து சொல்லுங்க.. தயவு செஞ்சு சொல்லிடுங்க ப்ளீஸ்.. “எனக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பதிவு போடு“னு திரும்ப திரும்ப போன் பண்ணி அவளே கேட்டுகிட்டதால இத நா சொல்லல.. (ஐய்யயோ.. உண்மைய உளறிட்டேனோ..!!) எனக்கு அவ மேல பாசம் ஜாஆஆஆஆஸ்தி.. அதுனால சொல்றேன். (ஹிஹிஹி).
அவளோட உண்மையான பேர் வேற. அவ ரொம்ப ராசியான பொண்ணுனு அப்பா அடிக்கடி சொல்றதுனால அவளுக்கு செல்லமா “ராசிப்பொண்ணு“னு பேர் வச்சிட்டோம். (கிண்டலுக்காகவும் தான்). இந்தப் பேர சொன்னா அவ பயங்கரமா டென்சனாயிடுவா.. பின்ன?? அவளோட காலேஜ்ல போய் பிரபலமாக்கிட்டோம்ல.. இப்ப அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துகிட்டிருக்கோம். அந்த முகம் தெரியாத பலியாடு எங்க சுத்திகிட்டிருக்கோ தெரில.. எப்படியும் இந்த வருஷம் பிரியாணிக்கு சிக்கிடும். அதுனால ராசிப்பொண்ணுக்கு நாம எல்லாரும் சேர்ந்து பிறந்த நாள் வாழ்த்தும், பலியாடு சிக்கிறதுக்கு வாழ்த்தும் சொல்வோம்.
குறிப்பா வாழ்த்து சொல்ற எல்லாரும் அவளோட செல்லப்பேர சொல்லி வாழ்த்து சொல்லணும்னு கேட்டுக்குறேன்.. (அடுத்தவங்கள கடுப்பாக்கிப் பாக்குறதுலயும் என்னா ஒரு ஆனந்தம்..).
ரெண்டு நாள் இந்தப் பக்கம் வர முடியாது. அதுனால தான் இன்னைக்கே பதிவுல சொல்லிட்டேன்.
ஹேப்பி பர்த்டே ராசிப்பொண்ணு.. (இத Copy பண்ணுவீங்களே..!!!)
.
.

Tuesday, 22 February 2011

சில்ல்ல்லுனு ஒரு பதிவு...

பனிகாலம் முடிஞ்சு வெயில் காலம் தொடங்கியாச்சு...

வெயிலுக்கு இதமா ஒரு பதிவு போடணும்ல..

இங்க இருக்குற ஜூஸ், ஐஸ்க்ரீம்ல யாருக்கு எது வேணுமோ எடுத்துக்கங்க..

எதுவுமே வேணாம்னா கடைசியா இருக்குற தண்ணியவாவது (அட.. ஐஸ் வாட்டர்யா..) எடுத்துக்கங்க..
Friday, 18 February 2011

விற்கப்படும் அரசாங்க வேலைகள்..
அரசாங்கப் பணி தொடர்பா எனக்கொரு இன்டர்வியூ வந்திருந்துச்சு. மொத்தம் ஐந்து பணியிடங்களுக்கு அறிவிச்சிருந்தாங்க. நானும் அப்ளிகேஷன் அனுப்பியிருந்தேன். போன வாரம் அதுக்கான ஹால் டிக்கெட் வந்திருந்தது. அதில் மூணு தேர்வுகள் திங்கட்கிழமையும், மீதி இரண்டு பணியிடங்களுக்கான நேரடி இன்டர்வியூ செவ்வாய்க் கிழமையும் இருப்பதாக சொல்லியிருந்தாங்க.
நானும் போன திங்கட்கிழமை (அலுவலகத்துக்கு லீவு போட்டுட்டுப் போய்) அந்தத் தேர்வை எழுதினேன். தனித்தனியான மூணு எக்ஸாம் வச்சிருந்தாங்க. மறுநாள் மீதி இரண்டு பணியிடங்களுக்கான நேரடி இன்டர்வியூவும் நடத்தப்பட்டது. ஒரிஜினல் சர்டிபிகேட் சரிபார்த்து, வேலை சம்பந்தமா சில கேள்விகளும் கேட்டாங்க. ஒருவழியாக இரண்டையும் முடிச்சிட்டு வெளிய வரும்போது முந்தின நாள் (திங்கட்கிழமை) எழுதிய தேர்வுக்கான ரிசல்ட் அன்னைக்கு சாயந்திரம் 5 மணிக்கு இணையத்தில் வெளியிடப்படுதுனும் அதுல செலக்ட் ஆகுறவங்க மறுநாள் (புதன் கிழமை) காலை 10 மணிக்கு இன்டர்வியூவில் கலந்து கொள்ளனும்னும் சொன்னாங்க.
நானும் சாயந்திரம் 5 மணில இருந்து இன்டர்நெட்ல பாத்தேன். 7.45க்கு தான் ரிசல்ட் வந்துச்சு. நா செலக்ட் ஆகல. (இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா“னு கேப்பீங்களே..). வழக்கத்த விட இந்த எக்ஸாமுக்கு நான் நல்லாத்தான் படிச்சிருந்தேன். என்னோட சேர்ந்து எக்ஸாம் எழுதிய சில ஃப்ரெண்ட்ஸ விசாரிச்சதுல அவங்களும் யாருமே செலக்ட் ஆகலனு சொன்னாங்க. சரி நமக்கு வாய்ச்சது அவ்ளோ தான்னு நெனச்சுகிட்டு விட்டுட்டேன்.
மறுநாள் காலேல வழக்கம்போல என் அலுவலகத்துக்கு வந்துகிட்டிருந்தேன். வழில என் நண்பர் ஒருவர் இன்னொருவருடன் பேசிகிட்டிருந்தாரு. ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதுனால சகஜமா விசாரிச்சுப் பேசினாரு. அவருக்குப் பக்கத்துல நின்னுகிட்டிருந்த நண்பரை எனக்கு அறிமுகப்படுத்துனாரு. அப்ப தான் அவர், நான் தேர்வு எழுதிய அந்த குறிப்பிட்ட அரசாங்க அலுவலகத்துல வேலை பாக்குறார்னு எனக்குத் தெரியவந்துச்சு.
அதுமட்டுமில்லாம அந்த காலியிடங்களுக்கான ஆட்கள் ஏற்கனவே செலக்ட் பண்ணிட்டாங்கனும் இந்தத் தேர்வுகளும் இன்டர்வியூக்களும் சாதாரண கண்துடைப்புனும் சொன்னார். அரசியல் தலையீடும் பணமும் அந்தப் பணியிடங்களை நிரப்பிடுச்சாம். தேவையில்லாம நேரத்த வீணாக்கிட்டீங்கனு சொல்லி எடக்கா சிரிச்சாரு.
என்ன சொல்றதுனு தெரில.. இப்ப இது தானே நடக்கிறது என்று நமக்கு நாமே சமாதானம் செய்வது, இன்னும் கேவலம். இந்த மாதிரி கண்துடைப்புக்கு தேர்வுகளை நடத்துறதுனால எத்தன பேரோட எதிர்பார்ப்புகள் சிதைக்கப்படுது?
இவ்ளோ நாள், எக்ஸாம்ல செலக்ட் ஆகுறதுக்கு லஞ்சம் குடுத்துகிட்டிருந்தாங்க. இப்ப முன்கூட்டியே ஆள செலக்ட் பண்ணிட்டு சம்பிரதாயத்துக்காக எக்ஸாம் நடத்துறாங்க. நாடு ரொம்ப முன்னேறிடுச்சு.. லஞ்சம் வாங்கவோ குடுக்கவோ கூடாதுனு ஒரு பக்கம் கோஷங்கள் வந்தாலும் எல்லாரும் தனக்குனு வரும்போது சூழ்நிலைக் கைதியா மாறிட்றாங்க. எவன் லஞ்சம் குடுக்குறானோ அவனுக்கு வேலைங்குற கேவலமான கட்டத்த தாண்டி, எவன் அதிகமா லஞ்சம் குடுக்குறானோ அவனுக்குங்குற நிலைமை வந்தாச்சு.
இவ்வளவு ஏன், பல அரசாங்க அலுவலகத்துல தற்காலிகப் பணியாளர்களா, கிட்டத்தட்ட தினக்கூலி ஊழியர்களா, இருபத்தைந்து வருஷம் வரைக்கும் கூட டெம்பரவரியா வேலை பாத்துகிட்டு இருக்காங்க. இன்னைக்கும் இவங்களோட ஒரு நாள் சம்பளம் வெறும் 80 ரூபாய் தான். தனியார் கம்பெனில இருந்திருந்தா, இவங்களுக்கு சம்பளமாவது கூட கிடைத்திருக்கும். பணவசதியும் இல்லாம, வேற வேலைக்கும் போக முடியாம என்னைக்காவது தங்களோட பணி நிரந்தரமாகும்னு வருஷக்கணக்கா எதிர்பார்த்துகிட்டு இருக்குறவங்களும் உள்ளுக்குள்ள இருக்கதான் செய்றாங்க.
இவங்கள மாதிரியான பாவப்பட்ட ஆட்கள் ஒரு பக்கம் இருந்தாலும், எந்த அனுபவமுமின்றி லஞ்சம் கொடுத்து வேலையில உக்காந்து வெட்டியா பொழுத கழிக்கும் ஊழியர்களும் இருக்காங்க. உள்ள வேலைபாக்குற இவங்களுக்குள்ளயே இந்த ஏற்றத் தாழ்வுனா வெளிலருந்து முயற்சி பண்ற நமக்கு சொல்லவே வேணாம்..
மத்த இடங்கள்ல எப்டியோ, அரசாங்க வேலைல இந்த பணப் பரிமாறல்கள் வெளிப்படையாவே நடக்குது. இந்தந்த வேலைக்கு இவ்வளவு பணம் குடுக்கணும்னு அட்டவணை ஒட்டாத குறை. ஒரு பியூன் வேலைக்கு கூட நாலஞ்சு லட்சம் தயங்காம பகிரங்கமா கேக்குற நிலைமை வந்தாச்சு. ஏன் இப்படினு கேட்டா, சம்பளம் தான் மாசம் எட்டாயிரம் பத்தாயிரம்னு வாங்கப் போறார்லனு பதில் வருது. அசிஸ்டன்ட், அக்கவுண்டன்ட் மாதிரியான வேலைக்கு ஆறுலருந்து எட்டு லட்சமாம், டீச்சிங் வேலைக்கு இன்னும் அதிகமாம். இந்த லஞ்சப் பணம் ஒவ்வொரு துறையப் பொறுத்து மாறுமாம், பே கமிஷன் போட்டு சம்பளம் கூடுச்சுனா லஞ்சத் தொகையும் இரு மடங்காயிடுமாம். இதுல ஜாதி மண்ணாங்கட்டிய வேற பாப்பாங்களாம். சிபாரிசு பண்றவங்களோட ஒத்த ஜாதியா இருந்தா இன்னும் சுலபமாம். என்ன கொடுமைடா இது???
ஆக மொத்தம் படிப்புக்கும் திறமைக்கும் அனுபவத்துக்கும் இங்க மதிப்பே கிடையாது. அதிகமான பணமுள்ள பெட்டியை யார் முதலில் கொண்டு வராங்களோ அவங்களுக்குத் தான் எதிர்காலம்னு உருவாய்டுச்சு. நேர்மையான வழில தான் முன்னேறனும், லஞ்சம் தர மாட்டோம்னும் பிடிவாதமா இருந்தாலும் பெரும்பாலானவங்க பண்ற தப்பால சகஜமான விஷயமா இது மாறிடுச்சு. லஞ்சம் கொடுக்க இயலாத எத்தனையோ பேர் இன்னமும் வேலை கிடைக்காத இயலாமையால திண்டாடிகிட்டு இருக்கத்தான் செய்றாங்க. இவங்களுக்கு மத்த எல்லாரும் வச்சிருக்குற பேர் பிழைக்கத் தெரியாதவன்”. அதாவது காலத்துக்கு தகுந்தாப்ல மாறத்தெரியாதவனாம்.. லஞ்சம் குடுத்தாதான் எதுவும் கிடைக்கும்குற இந்தக் கேவலமான நிலைமை இருக்குறவரைக்கும் எவ்ளோ தான் மனுஷன் முன்னேறினாலும் கீழ்த்தரமான நிலைக்கு தான் தள்ளப்படுகிறான்.
.
.

Tuesday, 15 February 2011

கிறுக்கல்களுக்கு வயது ஒன்று


போன வருஷம் இதே நாள் தான் என்னோட இந்த முதல் பதிவ எழுதினேன். அப்புறம் என்னென்னவோ கிறுக்க ஆரம்பிச்சு இன்னையோட ஒரு வருஷம் ஆய்டுச்சு.

வலையுலகம் மூலம் எனக்குக் கிடைத்த நண்பர்களுக்கும் அவர்களின் நட்புக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தொடர்ந்து என்னோட கிறுக்கல்களுக்கு வருகை தரும், தரப்போகும் நண்பர்களுக்கும் நன்றிகள்.

உங்கள் வாழ்த்துக்களும் ஆதரவுகளும் குட்டுக்களும் திட்டுக்களும் மென்மேலும் தொடர எதிர்நோக்கியபடி...

நன்றிகளுடன்...

----------- இந்திரா
.
.

Sunday, 13 February 2011

காதல் ஸ்பெஷல்...
கைகளில் அழகுபடுத்திய மருதாணியுடன்
புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்..
கைபேசியில் பேசிக்கொண்டே எனைக் கடந்தபோது
வெகுநேரம் முன்வந்து தொந்தரவு செய்த என் ஒற்றை முடியை
காதோரம் ஒதுக்கி விட்டுச் சென்றாயே..
அந்த நொடியில்..

அருகமர்ந்து பேசியபடியே
உன் தோள் சாய்ந்து தூங்கியிருந்தேன்..
ஏதும் சொல்லாமல் என் பக்கமாய்
உன் தலையை சாய்த்துக்கொண்டாயே..
அந்த நொடியில்..

நானே செய்ததாகச் சொல்லி
உன்னிடம் நீட்டிய பலகாரத்தை
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
“சூப்பரா இருக்குப்பா“னு சொல்லி சமாளித்தாயே..
அந்த நொடியில்..

பேருந்துப் பயணத்தின் கூட்டத்தினிடையே
என்னை உற்று நோக்கிய யாரோ ஒருவனை
எரித்துவிடுவதாய் பார்வை வீசினாயே..
அந்த நொடியில்..
ஒவ்வொரு முறையும்
எனக்கான பிறந்தநாளை மறந்துவிட்டு,
கோபித்துக்கொண்ட என்னை சமாதானம் செய்ய
ஏதேதோ கோமாளித்தனங்கள் செய்வாயே..
அந்த நொடியில்..
புதிதாய் வாங்கிய பேனாவை
எழுதிப்பார்க்க ஆசைப்பட்டு ஏதோ கிறுக்கினாய்..
என்னவென்பதை எடுத்துப் பார்க்க
என் பெயர் இருந்ததே....
அந்த நொடியில்..
அழைபேசியில் வரும் கணிணி குரலை
“சொல்லுடா செல்லம்“ என அழைத்து
வேண்டுமென்றே வெறுப்பேற்றி
என்னிடம் அடி வாங்குவாயே..
அந்த நொடியில்..
புதிதாய் புடவை உடுத்திவந்த என்னை
செல்லமாய் தலையில் குட்டி
“எப்டி சேலை கட்டிருக்க பாரு“என தரையமர்ந்து
கீழ் மடிப்புகளை சரிசெய்தாயே..
அந்த நொடியில்..
எப்போதும் பேர் சொல்லியே அழைக்கும் நீ
காதல் அதிகமாகும்போது மட்டும்
“கோழிகுஞ்சு“என என்னிடம் சிணுங்குவாயே..
அந்த நொடியில்..சொர்க்கமும் நரகமாய்
நீ அருகிலில்லாத இந்த காதலர் தினம்..
பிரிவின் ஏக்கத்தில் தவித்துக்கிடந்த தருணம்
உன்னிடம் வந்த குறுஞ்செய்தி.. “ஐ மிஸ் யூடி கோழிகுஞ்சு“..
இந்த நொடியில்...
.
.
“ஐ லவ் யூடா
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...