Monday, 16 November 2015

Miracle in Cell No.7 - என் பார்வையில்..

குழந்தை எழுத்தாளர் (உமாநாத்) விழியன், மழலைக் கதைகளில் ஒரு முறை தன் பாரீஸ் அனுபவத்தை எழுதியிருந்தார். ஒரு இடத்தில் மரங்களுக்குப் பின்னாலிருந்து சூரியன் உதயமாகிக் கொண்டிருந்ததாம். உடனே அவர் தனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவனிடம், “இப்போது அந்த மரத்திலிருந்து சூரியன் முளைக்கும் பாரேன்என்று சொன்னாராம். அதேபோல் மரக்கூட்டத்திலிருந்து சூரியன் தோன்றவும் அவன் அதை உண்மையென ஆச்சர்யமாய் ரசித்துக்கொண்டிருந்தானாம். (அதற்குள் அவனுடைய அம்மா உண்மையை சொல்லி அக்கற்பனை உலகத்தில் கல்லெறிந்தது வேறு விஷயம்).
பேபி ஷாலினி நடித்த படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, இப்ப எப்படி இருக்காங்க இந்த அக்கா?“ என்று கேட்ட பக்கத்து வீட்டு சிறுமிகளுக்கு, நாளிதழ்களையும் டிவி சேனல்களையும் மாற்றி மாற்றி தேடிப்பார்த்து கடைசியாய் நடிகை ஷாலினியாக நான் காட்டியபோது, ஒட்டு மொத்த கூட்டமும் “ஐயோ.. இவங்க அஜித் ஆன்ட்டி“ என்று கோரஸ் பாடிய ஸ்வாரஸ்யம் ரசிக்கத்தக்கது.
குழந்தைகளுக்கான உலகில், குழந்தைகளாகவே நுழையும் திறமை பெற்ற பெரியவர்கள் அதிஷ்டசாலிகள்.
இந்தப் படமும் இரு குழந்தைகளுக்கு இடையிலான உலகம் பற்றிய கதைதான். ஆறு வயது மகளுக்கும், அதே ஆறு வயது மனநிலையில் இருக்கும் தந்தைக்கும் இடையே நிகழும் Emotional போராட்டங்கள் தான் படம். தெய்வத்திருமகள் (I am Sam) பட விக்ரம் போன்ற தகப்பன், செய்யாத தவறுக்கு தூக்கு தண்டனை பெற்று சிறைச்சாலை செல்கிறார். ஆதரவற்ற தன் மகளை நினைத்து சதா புலம்பிக்கொண்டிருக்க, Cell No.7-ல் இருக்கும் அவனுடைய சகாக்கள் யாருமறியாது குழந்தையை பார்சல் மூலம் சிறைச்சாலைக்குள் கொண்டு வருகின்றனர். அதிகாரிகளின் கண்ணில்படாமல் காட்சிக்குக் காட்சி அவளை மறைத்து வைத்து பதட்டமுடனான ஸ்வாரஸ்யத்திற்கு நம்மை ஆளாக்கியிருக்கிறார்கள். சட்டென இருவரையும் பிரித்து தூக்கு தண்டனைக்கான தேதி நிர்ணயிக்கப்படுகிறது.
கடைசி வரை, தான் சாகப்போவதை குழந்தையிடம் சொல்லாமல், விளையாடிக்கொண்டே தூக்குமேடை வரை செல்கிறார் தந்தை. அவ்வளவு நேரம் தன் துக்கத்தை வெளிக்காட்டாமல் செல்பவர், தூக்கு மேடையைப் பார்த்து பயந்து “நான் தப்பு பண்ணல.. என்னைக் காப்பாத்துங்க.. என் மகளைப் பார்க்கணும். காப்பாத்துங்க..“ என்று கதறி அழும்போது பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார். நிஜமாவே மனநலம் பாதிக்கப்பட்டவரை நடிக்க வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழும்படியான அற்புதமான நடிப்பு.
சாகப்போகும் தறுவாயில் கூட சிரித்துக்கொண்டே “நல்லா சாப்பிடு, பீன்ஸ் நிறைய சாப்பிடனும். அதுல நிறைய வைட்டமின் இருக்கு“ என்று மகளைப் பார்த்து அழுகையை மறைத்தபடியே கூறும்போது கைதட்டல் பெறுகிறார்.
உடன் சிறையிலிருக்கும் நண்பர்கள் தந்தையையும் மகளையும் காப்பாற்ற, உள்ளிருந்தபடியே ராட்சத பலூனை தயார் செய்து அவர்களை ஏற்றி பறக்கவிட, அதிகாரிகள் உட்பட அனைவருமே அவன் தப்பிக்க வேண்டும் என வெளிக்காட்டாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். பலூனிலிருந்து இருவரும் டாட்டா காட்டியபடி சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டிருக்க, தொங்கிக்கொண்டிருக்கும் கயறு சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் வேலியில் மாட்டிக்கொள்ளும். அப்போது தந்தையும் மகளும் கண்களாலேயே பேசிக்கொள்வார்கள்.
“மறந்துடாத“
“எதை அப்பா?“
“இந்த உதயத்தையும் உன் அப்பாவையும்“
மிக அற்புதமான காட்சியமைப்புகள் கொண்ட திரைக்கதை. நிச்சயம் நம்மாளும் மறக்க முடியாது.
  # Miracle in Cell No. 7 (2013) (Korean)
.

Tuesday, 6 October 2015

பல்புகள் பலவிதம்..

உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்த நாட்கள் அவை. அங்க நேரடி ஒளிபரப்பெல்லாம் கிடையாதுங்குறது பெரும் ஆறுதல். மதியம் 12:30 மணி செய்திக்கு 10:30க்கு ஷூட்டிங் ஆரம்பிக்கும். சாயந்திரம் 7:00 மணி செய்திக்கு 4:30க்கு உள்ள இருக்கணும். சாயந்திர செய்தியையே நைட் 10:00 மணிக்கு மறுஒளிபரப்பு செய்வாங்க. கிரிக்கெட் செய்திகள் “இந்தியா வெற்றி“ “இந்தியா தோல்வி“னு ரெண்டு விதமா எங்களை வாசிக்க சொல்லி எடுத்து வச்சுக்குவாங்க. ரன் பற்றிய விபரங்கள் காட்சிகளுக்குப் பின்னணியா வாசிக்குறதால அதை மட்டும் 9.45க்கு அங்கயிருக்குற டெக்னீசியன் யாராவது பேசி ரெக்கார்ட் பண்ணிக்குவாங்க.
அன்னைக்கு நல்ல மழை. மாலை செய்திகள்னு ஷூட்டிங் கிளம்பிகிட்டு இருந்தேன். TVS-50ல போறதால 4:15க்கு வீட்லருந்து கிளம்பினேன். போகப் போக மழை ஜாஸ்தியானதால ஒரு கோவில்ல வண்டியை நிறுத்திட்டு வெய்ட் பண்ணினேன். அங்கயே மணி 4:30. அப்போ செல்போன் புழக்கத்துல இல்லாத சமயம். டைரக்டருக்கு தகவல் சொல்லியாகணும். தாமதமாகும் பட்சத்துல இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே சொல்லணும்னு கண்டிசன். வர்றவரைக்கும் இன்னொரு வாசிப்பாளரோட பகுதியை எடுத்துகிட்டு இருப்பாங்க. வணக்கமெல்லாம் கடைசில கோர்த்துக்குவாங்க.
அந்த தெரு முக்குல ஒரு சைக்கிள் கடைக்குப் பக்கத்துல காய்ன் போன் இருந்துச்சு. போன் பண்ணி சொல்லிடலாம்னு வண்டியை பூட்டி சாவியை எடுத்துகிட்டு ரோடை க்ராஸ் பண்ணி நடந்தேன். கடை முன்னாடி கொஞ்சம் தண்ணி தேங்கி இருந்துச்சு. தாண்டிப் போயிருக்கணும். என் கெட்ட நேரம்.. நெனஞ்சுகிட்டே கொஞ்சமாத்தானே தேங்கிக் கிடக்குனு காலை வச்சேன். அவ்ளோ தான்.
என்ன நடந்துச்சுனு புரியிறதுக்குள்ள என் முழங்கால் வரைக்கும் தண்ணிக்குள்ள போயிட்டேன். அங்க ஒரு சாக்கடை இருந்துச்சாம். காலை வெளிய எடுக்க முடியல. கையை ஊனி எழுந்திருக்கவும் முடியல. அழாத குறையா முழிச்ச என்னை சைக்கிள் கடைப் பையன் வந்து கை கொடுத்து தூக்கிவிட்டான். ஒரு செருப்பு தண்ணில அடிச்சுட்டு போயிடுச்சு. இன்னொரு செருப்பையும் வேற வழியில்லாம அங்கயே கழட்டிவிட்டுட்டு அந்தப் பையனுக்கு நன்றி சொல்லிட்டு சகதியோட காய்ன் போனை நெருங்கும்போது தான் தெரிஞ்சது.. நான் பர்ஸ எடுக்காம வெறும் வண்டி சாவியை மட்டும் எடுத்துட்டு வந்திருக்கேன்னு.
வேற என்ன பண்ண!! திரும்ப அந்த சைக்கிள் கடைப் பையன்கிட்டயே ஒரு ரூபாய் கடன் வாங்கி டைரக்டருக்கு போன் பண்ணி மழைல மாட்டிகிட்டதை சொன்னேன். வழக்கம்போல திட்டிட்டு “வந்து தொலை“ன்னு போனை வச்சுட்டார். சாக்கடைல விழுந்துட்டேன்னு சொன்னா மானம் போகும்னு மறைச்சுட்டேன். ஆனா விதி வலியதாச்சே..! கரெக்டா போன் பண்ணிட்டு வண்டிகிட்ட வரவும் மழை குறைஞ்சிடுச்சு. அடிச்சுப்பிடித்து வண்டியை எடுத்துகிட்டு யூனிட் போய் சேர்ந்தேன். மணி 4:50.
அடிக்குற மாதிரி ஆவசேமா வந்த டைரக்டர் முழங்காலுக்கு கீழ சாக்கடையும் சகதியுமா செருப்பு கூட இல்லாம வந்து நின்னவளைப் பார்த்துட்டு திட்றதோட விட்டார். “ஏற்கனவே லேட்டு.. புடவையை சுத்தம் பண்றேன்னு டைம் எடுக்காத.. டேபிள்க்கு பின்னாடி தானே உக்காரப்போற.. மேக்கப் மட்டும போட்டுட்டு சீக்கிரம் வந்து உக்காரு“னு கேமராமேன் விரட்ட, வேற வழியில்லாம காலை மட்டும் கழுவிட்டு வந்து உக்காந்தேன். சாக்கடை நாத்தத்தை முகத்துல காட்டாம செய்தி வாசிக்க ஆரம்பிக்க, ரெண்டு மணி நேரம் அந்த அறையே கமகமகமனு இருந்துச்சு. பக்கத்துல உக்கார்ந்த இன்னொரு செய்தி வாசிப்பாளருக்கு மூச்சடைப்பே வந்துடுச்சு பாவம். ஷூட்டிங் முடிஞ்சதுதான் ஜோலி.. அவனவன் ஆக்சிஜனுக்காக கதவை தள்ளிகிட்டு வெளில ஓடுனானுக. மறக்க முடியாத ஷூட்டிங் அது :D

அதுலருந்து இன்னைக்கு வரைக்கும் மழைல தேங்கிக்கிடந்த தண்ணியைக் கண்டாலே பயம். வாத்து மாதிரி நடந்து போவேன். 

Friday, 25 September 2015

Kon-Tiki - என் பார்வையில்..


கடலுக்குள் ஒரு சாகசப் பயணம்இந்த ஒற்றை வரியினுள் உயிர் பிழைப்பதற்கான விளிம்பு நிலை சந்தர்ப்பங்கள் எத்தனை அடங்கியிருக்கிறது!! கடற்கரையில் அலைகளை வேடிக்கை பார்த்து சிலிர்க்கும் அதே நேரம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. காற்றால் மட்டுமே இயங்கும் மரத்தாலான படகு, சுற்றிலும் சுறாக்களும் திமிங்கலங்களும் உங்களை விழுங்கக் காத்திருக்கின்றன. கொஞ்சம் உணவு, சில நண்பர்கள், அதோடு சுமார் 4000 மைல்களை கடந்தாக வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் கைவசம் இருக்கிறது. இது தான் Kon-Tiki.
பிரபஞ்சத்திற்கு அடுத்ததாக ஆச்சர்யங்கள் நிறைந்ததெனில் அது கடல் தான். இன்னும் இன்னும் என எத்தனை தேடினாலும் ஏதாவது கிடைத்துக்கொண்டே இருக்கும். அதுபோன்றதொரு சாகசப் பயணத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது திரைப்படம். Cast away”, “Life of Piதிரைப்படங்கள்போல் வழி தவறி கடலுக்குள் மாட்டிக்கொள்வதாக அல்லாமல், திட்டமிட்டே ஒரு ஆராய்ச்சிக்கென தன் குடும்பத்தைப் பிரிந்து மேற்கொள்ளும் பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஸ்வாரஸ்யங்கள்.
படகின் அடிப்பகுதி கொஞ்சங்கொஞ்சமாய் கரைந்துகொண்டே வருவதாய் கூறும்போது, இவர்கள் சீக்கிரம் கரை சேர வேண்டுமே என்ற பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. ஒவ்வொரு முறையும் நீரில் யாராவது தவறி விழும்போதெல்லாம் விழுங்க ஓடிவரும் சுறாக்கள் நம் இதயத்துடிப்பை எகிற வைக்கின்றன. பின்னணி இசை கூடுதல் பலம்.
சாகசப் பயணங்களில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? Kon-Tiki நிச்சயம் உங்களை கூட்டிச் செல்லும்.
# Kon-Tiki (2012) (Norwegian)
Related Posts Plugin for WordPress, Blogger...