Monday, 29 November 2010

பெண் மனசு - தொடர்பதிவு"பெண் மனசு" என்ற தலைப்பில் பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்டுத்தும் பாடல் பற்றி எழுத அழைத்த வெறும்பயலுக்கு நன்றி.தமிழில் பல்வேறு பாடல்கள் இந்த வகையைச் சார்ந்திருப்பினும் யோசித்த மறுநொடியே மனதில் எழுந்த இரண்டு பாடல்களை இங்கு கொணர்ந்துள்ளேன்.


முதல் பாடல் பிடித்ததற்கான காரணம்
: காதலின் வலியையும் அதன் இழப்பையும் அழகாய்ச் சொல்லும் பாடல்.

படம்: ஆயிரத்தில் ஒருவன்

பாடல்:

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள் வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே


ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..


உன் கரம் கோற்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்ன இழந்தேனென..


இந்தப் பாடலை தரவிறக்கம் செய்யஇரண்டாவது பாடல் பிடித்ததற்கான காரணம்: தொடர் தோல்விகளைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை அழகாய்ச் சித்தரிக்கும் பாடல்.

படம்: அவள் அப்படித்தான்

பாடல்:

வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை..
யாரும் தேரில் செல்ல..
ஊரில் தேரும் இல்லை..
எங்கோ.. ஏதோ.. யாரோ..


அழகான மேடை சுகமான ராகம்
இடையினில் வேலிகள் உண்டு
ஆறாத புண்ணும் நூறான முள்ளும்
ஆடிடும் கால்களில் உண்டு
எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை..
எரியாத தீபங்கள் பெண்ணா..


ஊரெங்கும் மேடை ராஜாக்கள் வேஷம்
உண்மையில் ராஜாக்கள் இல்லை
ஊரெங்கும் சோலை ரோஜாக்கள் வாசம்
உண்மையில் ரோஜாக்கள் இல்லை
உலகத்தில் பெண்மை உயர்வாகவில்லை
உதவாத புஷ்பங்கள் பெண்கள்..

இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய

.

Friday, 26 November 2010

கீழ்த்தரவாதிகள்பேருந்து வழக்கம்போல கூட்டமாய்த் தான் இருந்தது. நிற்க இடம் கிடைத்தாலே பெரிய விஷயம். அலுவலகப் பேருந்து, என்னைப்போன்ற தற்காலிகப் பணியாளர்களின் நிறுத்தத்திற்கெல்லாம் வராது என்ற விதிமுறையுள்ளதால், நிரந்தரப் பணியாளர்களின் வழக்கமான நிறுத்தத்தை நோக்கி தினமும் நான் பயணிக்க வேண்டிய கட்டாயம். அதை விடுத்தால் இரண்டு பேருந்து மாறிப்போவது மட்டுமல்லாது அலுவலகத்தின் வாசலிலிருந்து என் பிரிவிற்கு 20 நிமிடம் நடக்க வேண்டும்.
வேறுவழியில்லாமல் முந்தியடித்துக்கொண்டு ஏறி, மெதுமெதுவாய் நகர்ந்து கம்பியைப் பிடித்து வாகாக நின்றுகொண்டேன். 15 நிமிடத்தில் அலுவலகப் பேருந்தைப் பிடித்துவிடலாம் என நம்பிக்கை இருந்தது. ஐந்தாவது நிமிடத்தில் என் பின்னால் ஏதோ உரசுவது போல உணர்ந்தேன். கூட்டத்தில் இதெல்லாம் தவிர்க்கமுடியாதது தான். ஆனாலும் ஏதோ அசௌகரியமாய் தோன்றவே சிறிது நகர்ந்து நின்றேன். சில வினாடிக்குப் பின் மீண்டும் அதே அசௌகரியம். பெண்களுக்கே உரித்தான அறுவறுப்புடன் பின்னால் நிற்பவனைத் திரும்பி பார்த்தேன். எவனோ ஒருவன் தனது ஆணுறுப்பை, வேண்டுமென்றே என்பின்னால் உரசவிட்டுக்கொண்டு நின்றிருந்தான். கோபத்தில் நான் முறைத்தவாறு திட்ட எத்தணித்தேன், அவனோ எதுவுமே தெரியாதவன் போல் பாவனை செய்துகொண்டு நகர்ந்துகொண்டான். தினசரி பேருந்துகளில் நடக்கும் சம்பவங்களில் இதுவும் ஒன்று.
ஒருவழியாக அலுவலகப் பேருந்தைப் பிடித்து அலுவலகம் சேர்ந்தேன். வழக்கமான வேலைகளில் மூழ்கியிருந்த தருணம் அது. எனக்கொரு டாகுமெண்ட் மெயில் பண்ணனும் இந்திரானு குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தேன். அவர் என் சீனியர். சரி என்று சொல்லி அவர் சொல்வதை தட்டச்சு செய்து கொண்டிருந்தேன். அப்போது நேத்து சாயங்காலம் பக்கத்து செக்சன்ல பேசிட்டிருந்தேன். உங்களப் பத்தி பேச்சு வந்தப்ப எல்லாரும் ரொம்ப பாராட்னாங்க. வேலையெல்லாம் கரெக்டா பாக்குறீங்களாம், எந்த பெண்டிங்கும் வைக்கிறதில்லையாம். டெம்ப்ரவரிதானேனு அசால்ட்டா இல்லாம சின்சியரா வொர்க் பண்றீங்களாம். ரொம்பவே புகழ்ந்து பேசினாங்கனு சொன்னாரு. இயந்திரத்தனமான புன்னகையுடன் அப்படியா சார்னு சொல்லிட்டு மறுபடியும் டைப் பண்ண ஆரம்பித்தேன். அட ஆமாங்க.. நான் கூட கவனிச்சுகிட்டு தான் வறேன். யு ஆர் வெரி சின்சியர். உங்கள நிரந்தரப் பணியாளரா மாத்திட, நான் கண்டிப்பா ரெகமெண்ட் பண்றேன்னு சொல்லி என்னைப் பார்த்து ஒருமாதிரி சிரித்தார். எனக்குப் புரிந்துவிட்டது. பரவாயில்லை சார், எனக்கு முறைப்படி எப்ப பணி நிரந்தரமாகணுமோ அப்ப ஆகட்டும். நீங்க உங்க வேலையப் பாருங்க ப்ளீஸ்னு அவர் கண்களை நேராகப் பார்த்து சொல்லிவிட்டு எச்சலனமுமின்றி வேலையைத் தொடர்ந்தேன். முகத்திலறைந்தது போல அந்த பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்.. எழுந்து சென்றுவிட்டார்.
இது எனக்கொன்றும் புதிதல்ல. பணியில் சேர்ந்த இந்த நான்கு வருடங்களில் இதுபோல, இவர்போல எத்தனையோ சம்பவங்கள். இம்மாதிரியான ஆட்களின் அணுகுமுறைகள் வேறாக இருந்தாலும் நோக்கம் ஒரே விதமாகத் தான் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கே உரித்தான சாபக்கேடு இது. தமக்கு கீழாக ஒரு பெண் பணிபுரியும்பட்சத்தில், பெரும்பாலான ஆண்கள் நினைக்கும் ஒரே விஷயம் எதுக்கும் ட்ரைப் பண்ணிப்பார்ப்போம், மடிஞ்சாலும் மடியும் என்பது தான்.
இதில் திருமணம் ஆனவர் ஆகாதவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. கொஞ்சம் நட்பாகப் பேசிவிட்டால் போதும், இவர்களது ஆர்வம் தலைகாட்டிவிடுகிறது. இரட்டை அர்த்தங்களில் ஏதாவது பேசுவது, தேவையில்லாமல் நாம் பார்க்கும்படி அங்குமிங்கும் நடப்பது, தற்செயலாகப் பட்டதுபோல நம்மைத் தொடுவது என இவர்களின் வக்கிரபுத்திகள் சகிக்கமுடியாதவை. இதனைத் தவிர்க்க, எப்போது பார்த்தாலும் இறுக்கமாகவே முகத்தை வைத்துக்கொண்டு சிடுசிடுவென இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனாலும் வேலை நிமித்தம், அதிகாரிகளிடம் அப்படியிருப்பதும் சாத்தியமில்லை. அன்றாடம் இவர்களுடைய அழுக்குப் பார்வையிலிருந்தும் ஜாடையான பேச்சுக்களிலிருந்தும் கழன்றுகொள்வது மலையாக உள்ளது.
ஆண்கள் தான் இப்படியென்றால் பெண் அதிகாரிகள் இவர்களுக்கு மேல்.
இன்னைக்கு அவ கட்டிருக்க சேலையப் பாத்தியா? வேலைக்கு சேந்து கொஞ்ச நாள் தான் ஆகுது.. என்னவோ பெரிய அதிகாரி மாதிரி பளிச் பளிச்சுனு புடவை கட்றா..
“நா நிக்கிறது கூட தெரியாம செல்போன் பேசிட்டிருக்கிறா.. ரொம்ப ஹெட்வெயிட் இருக்கும்போல
அட அது கூட பரவாயில்ல.. காலேல பஸ் ஸ்டாப்ல என்னைப் பாத்துட்டு விஷ் பண்ண கூட இல்ல. சாதாரணமா சிரிச்சிட்டு போறா தெரியுமா.. மனசுல பெரிய இவனு நெனப்பு. இவள எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். இப்பவே தட்டி வைக்கணும். பெர்மனென்ட் ஆய்ட்டானா ரொம்பதான் ஆடுவா போல
இது மாதிரி நிறைய பேச்சுக்கள், குறிப்பிட்ட பெண்ணைப் பற்றி வருவது சகஜமாகிவிட்டது.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் அவ கேரக்டர் சரியில்லையாமே.. அவ ஒரு மாதிரியான டைப்னு ஒரே போடாகப் போடுவார்கள்.
பெண்களைத் தாக்கும் கடைசி அஸ்த்திரமும் அதுதான்.
ஆதிக்க வர்க்கம், பொறாமை, வக்கிரபுத்தி என் மாறிப் மாறிப் பேர் சூட்டிக்கொண்டாலும் பொதுவாக மனிதர்களின் கீழ்த்தரமான புத்தியையே இது வெளிப்படுத்துகிறது.
பேருந்தில் உரசியவனும் சரி, அலுவலகத்தில் உலவுபவர்களும் சரி, உருவம் வேறாக இருந்தாலும், உள்ளம் ஒரே மாதிரியான அழுக்கு நிறைந்தது தான்.

.
Related Posts Plugin for WordPress, Blogger...