Wednesday, 23 March 2011

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..இன்னைக்கு சமுதாயத்துல நடக்குற எவ்ளவோ அனாவசியமான விழாக்களில் மட்டமான, மிகவும் கேவலமான ஒரு விழானு சொன்னா அது குடும்பங்கள்ல நடக்குற “பூப்புனித நீராட்டு விழா“ தான். “வயசுக்கு வந்துட்டா“னும் “பெரிய மனுஷியாயிட்டா“னும், பெண்களின் உடலில் ஏற்படக் கூடிய மிகச் சாதாரண மாற்றத்திற்கு, தனியாக ஒரு விழாவே எடுத்துக் கொண்டாடும் அசிங்கம் இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்கு.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போதே கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருமுட்டைகளோடு பிறக்கிறாள். பெண் வயதுக்கு வந்தபின் மாதம் ஒரு கருமுட்டை முதிர்ச்சி அடைந்து கருப்பையை நோக்கி நகர்கிறது. முதல் கருமுட்டை முதிச்சியடைந்து வெளிவருவதையே வயதுக்கு வருதல் என்று கூறுகிறார்கள். இது அவள் கருவுறுதலுக்குத் தகுதியாகும் அறிகுறியாகும்.
இது சராசரியாக எல்லாப் பெண்களுக்கும் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு தான். இது சந்தோசமான மாற்றம் தான். ஆனாலும் இதுல விளம்பரப்படுத்துறதுக்கு என்ன இருக்கு? இது தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக்கிற மாதிரியான செயல் தான்.
அந்தக் காலத்தில் பெண்கள் பருவமடைந்ததும், திருமணம் செய்து
கொடுத்து விடுவது வழக்கமாயிருதுச்சு. பால்ய விவாகங்கள் அதிகமாக இருந்த காலம் அது. தகவல் தொழில்நுட்பங்கள் குறைவாக இருந்ததால அவங்க வீட்டுப் பொண்ணு, வயசுக்கு வந்துட்டா, `எங்கள் வீட்டில் பெண் திருமணத்துக்கு தயாராகி விட்டாள், பெண் கேட்டு வருபவர்கள் வரலாம்' என்ற பகிரங்க அறிவிப்பாகவே இந்த விழாக்கள் நடத்தப் பட்டன. ஆனால் இன்றைய சூழலில் பெண் கல்வி மற்றும் பெண் சுதந்திரம் பற்றிய தொலைநோக்குப் பார்வை விரிவடைந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது இத்தகைய விழாக்கள் தேவையற்ற ஒன்று தான்.
முந்தைய நாள் வரைக்கும் அந்தக் குழந்தை சராசரியா சந்தோசமா விளையாடிகிட்டு இருக்கும். வயதுக்கு வந்ததும் ஏன் தான் இப்படி பாடாய்ப் படுத்துறாங்களோ தெரியல. அந்தச் சின்னப் பொண்ணுக்கு ஒரு சேலைய கட்டிவிட்டு, கழுத்துல மாலையப் போட்டு Chair’ல உட்கார வச்சு கண்காட்சிப் பொருளா ஆக்கிட்றாங்க. “மகா ஜனங்களே.. எங்க வீட்ல சைட் அடிக்கிறதுக்கு ஒரு ஃபிகர் இருக்கு“ங்குற மாதிரி, அந்தப் பொண்ணு வயசுக்கு வந்தத தண்டோரா போட்டு எல்லாருக்கும் சொல்றாங்க. இந்தப் பழக்கம் எப்ப தான் மாறுமோ..
தனக்கு என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்குற அளவுக்கு கூட அந்தப் பொண்ணுக்குப் பக்குவம் இருக்காது. ஏதோ திருவிழால காணாமப் போன குழந்தை மாதிரி திரு திருனு முழிச்சிகிட்டு உட்கார்ந்திருக்கும். பத்திரிக்கை அடிச்சு பந்தல் போட்டு மைக்செட்டெல்லாம் வச்சு பெரிய விழாவாகக் கொண்டாடி மொய் என்ற பேரில் வசூல் செய்யும் முட்டாள்தனம் இன்னமும் நடக்குது.
என்னதான் கலாச்சாரம், வழிவழியாக வந்த பழக்கம்னு சொன்னாலும் ஒரு சின்னப் பெண்ணைக் காட்சிப் பொருளாக வைத்து வேடிக்கை காட்டுவது முட்டாள்தனம் தான். நன்கு படித்தவர்கள், பக்குவமடைந்தவர்கள் கூட இது மாதிரியான விழாக்களை நடத்துவதைப் பெருமையாக நினைக்கின்றனர். இந்தப் பாழாய்ப்போன சமூகம் இவர்களை இப்படியே பழக்கி வைத்துவிட்டது. இதுபோன்ற விசேஷங்களைத் தங்களுடைய பகட்டுகளைக் காட்டுவதற்கெனவே நடத்தும் கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இது பெண்களின் மன உணர்வுகளை இழிவுபடுத்தும் அநாகரீகமான கொண்டாட்டமே தவிர வேறொன்றுமில்லை.
இத்துடன் எனது நூறாவது பதிவை முடிக்கிறேன்.
அடுத்த பதிவில் சந்திப்போம்..
.

Tuesday, 15 March 2011

அரிதாரக் கடவுள்கள்..நேத்து கே.டிவில ஏதோ ஒரு சாமி படம் போட்டான். ரோஜா அதுல கடவுளாவும் பக்தையாவும் நடிச்சிருந்தாங்க. அதென்னவோ தெரியல.. சினிமாவுல வர்ற கடவுள் மட்டும் ஏன் தான் இப்படி மொக்கையா வருதுகளோ தெரியல. அதாவது நா ரோஜாவ சொல்லல.. அவங்க போட்ருந்த வேஷத்த சொல்றேன். மத்த மொழிகள்ல எப்டியோ.. இந்தத் தமிழ் சினிமாவுல வர்ற கடவுள்கள் எல்லாம் பயங்கர காமெடியா இருக்குதுங்க.

தலைல பெரிய்ய்ய்ய கிரீடம், கலர் கலரா முகத்துல பெயிண்ட் அடிச்சிருப்பாங்க. (அழகா இருக்குற மூஞ்சியையும் அசிங்கப்படுத்திக்கிறது), கழுத்துல எழுமிச்சம்பழ மாலை.. கையில சூலம், அயர்ன் பண்ணின பட்டுப் புடவை.. கண்ண அடிக்கடி உருட்டி உருட்டி பாத்துகிட்டு.. முக்கியமா ராமநாரயணன் படம்னா சொல்லவே வேணாம். அந்த வேஷம் போட்டவங்க ஆட்றது மட்டுமில்லாம அவங்களோட சூலம், வேப்ப மரம்னு எல்லாமே டான்ஸ் ஆடும். கொடுமைடா சாமி.

அப்புறம் இந்த மாதிரி படங்கள்ல கண்டிப்பா ஒரு அப்பாவி பொண்ணு ஹீரோயினா இருக்கும். ஏதாவதொரு டம்மி பீசு ஹீரோவா இருப்பான். அந்தப் பொண்ண தவிர மத்த எல்ல்ல்ல்லாருமே கெட்டவங்களா இருப்பாங்க. ஒரு மந்திரவாதி வில்லனா இருப்பான். அவனோட கெட்அப் பத்தி சொல்லவே வேணாம். கழுத்துல மண்டை ஓடு.. “ஓம் க்ரீம் ஐஸ் க்ரீம்“னு ஏதாவது மொனங்கிகிட்டே இருப்பான் (மந்திரம் சொல்றானாம்).

படம் பூராம் அந்த ஹீரோயின எல்லாரும் கொடுமைப்படுத்திகிட்டே இருப்பாங்க. கடைசிஈஈஈஈஈல வந்து கடவுள் வேஷம் போட்ட பொம்பளை (அதுலயும் ஆம்பளை சாமி இருக்க மாட்டாங்க..) மந்திரவாதிய கொன்னு அந்தப் பொண்ண காப்பாத்தும். அத மொதல்லயே செஞ்சு தொலைச்சா தான் என்ன???

சொல்லி வச்சது மாதிரி எல்லா சாமி படத்துலயும் இதே கதை தான் வரும். முகத்துல அடிக்கிற பெயிண்ட் கலரும், சாமியோட பேரும் மட்டும் தான் வேற.. கடவுள்னா இப்டி தான் இருக்கும்னு அவங்களே ஒரு கற்பனை பண்ணிக்கிறாங்க. சாதாரணமா இருக்கும்போது பச்கை பெயிண்ட், சின்ன பொட்டு, மஞ்சள் பட்டுப் புடவை... கோவமா இருந்தா சிகப்பு பெயிண்ட், பெரிய்ய்ய்ய்ய பொட்டு, சிகப்பு பட்டுச் சேலை.. ஜிங்கு ஜிங்குனு ஒரு ஆட்டம் வேற.. இவுங்க ஆட்றது மட்டுமில்லாம பாம்பு, யானை, குரங்குனு வேற டான்ஸ் ஆடும்.

இதுல கிராஃபிக்ஸ் கொடுமை வேற தாங்க முடியாது. பூமி ரெண்டா பிளக்குறதும், வேப்ப மரம் பேசுறதும், அம்மனோட கண்ணு கலர் மாறுறதும், கெட்ட சக்தினு ஏதோ ஒரு மிருகம் வர்றதும்.. மேஜிக் வேலையெல்லாம் காட்டுவானுக.. யப்பா முடியல..

கடவுள் இருக்காரா இல்லையாங்குறது வேற விசயம். அது அவங்கவங்க நம்பிக்கையப் பொறுத்தது. அதையும் தாண்டி இந்த மாதிரி சாமி படம் எடுக்குறேங்குற பேர்ல, பாக்குறவங்கள கொலையா கொல்றது இன்னும் எவ்ளோ நாள் தான் நடக்குமோ தெரில.

உலகம் எங்கயோ போய்கிட்டு இருக்கு.. இவனுங்க இன்னும் இந்த மாதிரி குண்டு சட்டிக்குள்ள்ளே குதிரை ஓட்டிகிட்டு இருக்காணுக. அதப் பாக்குறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கு.. என்னத்த சொல்றது??

.

.

Wednesday, 9 March 2011

படித்ததில் புரியாதது“அதற்குத் தக“ புத்தகத்திலிருந்து தமிழ்மணவாளன் என்பவர் எழுதிய “தெளிவுறுதல்“ என்ற தலைப்பிலான கவிதை

***************************************

தெளிவுறுதல்

மீனொன்று காற்றில் பறந்துபோனது வியப்பாயிருக்கிறது.

காற்றுப் பரப்பில் சுவாசிக்கவியலாது மீனுக்கு.

அவ்வாறெனில்

காற்று எப்போது நீராய் மாறியது..

மீன் பறவையானதா? செதில்கள் சிறகுகளாய்.

மீனென்றால் அது காற்றாக இருக்க முடியாது.

காற்றென்றால் அது மீனாக இருக்க முடியாது.

காற்றாக மீனாக நீராக பறவையாக..

காற்று நீர் மீன் பறவை

மீன் பறவை காற்று நீர்

நீர் மீன் பறவை காற்று

வியப்பாயிருக்கிறது என்றாலும் கூட

மீனொன்று காற்றில் பறந்து போனது.

***************************************

.

(படிச்சுட்டீங்களா??? என்ன சொல்ல வர்றாருனு தெளிவ்வ்வ்வா புரியுது.. இல்ல?)

.

Monday, 7 March 2011

நின்னைச் சரணடைந்தேன் (3)
நின்னைச் சரணடைந்தேன் (1) படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
நின்னைச் சரணடைந்தேன் (2) படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“இந்த கல்யாணத்துக்கு நீ வரமாட்டேனு நெனச்சேன் காயத்ரி. அந்த அளவுக்கு என் மேல உனக்குக் கோவமிருக்கலாம். என்ன மன்னச்சிடு. ஆனா என்னோட சூழ்நிலையையும் நீ புரிஞ்சுக்குவனு நம்புறேன்ரமேஷின் குரல் தெளிவாய்க் கேட்டது சித்தார்த்துக்கு. மெல்லிய குழப்பம் அவனை சூழ்ந்து கொள்ள, தொடர்ந்து வந்த காயத்ரியின் குரலைக் கேட்க ஆயத்தமானான்.
“இதுல கோவப்பட்றதுக்கு ஒன்னுமேயில்ல ரமேஷ். சின்ன வயசுலருந்தே, பெரியவங்க பேசி வச்சதுனால உங்கள என் மனசுல நெனச்சிருந்தது வாஸ்தவம் தான். ஆனா அது உங்கள பாதிக்கலைங்கும்போது உங்க மேல கோவப்பட என்ன இருக்கு? இதுல உங்களுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் வேண்டாம் காயத்ரியின் சலனமில்லாத பதில் சித்தார்த்தைக் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
அப்படியானால்.... காயத்ரி ரமேஷை காதலித்தாளா??
அதிர்ச்சியாய் நின்றவனின் காதுகளில் விழுந்தது.. மீதமான உரையாடல்..
“நிஜமா தான் சொல்றியா காயத்ரி?? உனக்கு இந்த கல்யாணத்துல எந்த வருத்தமும் இல்லையே? இல்ல எனக்காக பொய் சொல்றியா? உன்கிட்ட, காதல்... கல்யாணம் அப்டி இப்டினு இதுவரைக்கும் நா பேசினதே இல்ல.. எனக்கந்த எண்ணமும் உன் மேல இருந்ததில்ல. அதுனால தான் நீ அன்னைக்கு என்கிட்ட வந்து உன் காதல சொன்னப்ப கூட என்னால ஏத்துக்க முடில. ஆனா ப்ளீஸ் காயத்ரி உனக்கு என்மேல கோபம் இருந்தா ஆசை தீர என்னைத் திட்டிரு“ குனிந்த தலையுடன் ரமேஷ் சொல்வதை வெளியிலிருந்து அமைதியாய் சித்தார்த் கேட்டுக்கொண்டிருந்தான்.
ஏனோ அவனது இதயம் அவனுக்கே பாரமாகத் தோன்றியது. சாஹித்யாவை நினைத்து, தான் அடைந்த வேதனைகள், ரமேஷை நினைத்து காயத்ரிக்கும் தோன்றியிருக்குமா?? அப்படியெனில் இந்த நிமிடம் என்னைப் போல அவளும் தவித்துக்கொண்டிருக்கிறாளா?? கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக அவனைக் குழப்பியபடியிருக்க காயத்ரி பேச ஆரம்பித்தாள்.
“இதோ பாருங்க ரமேஷ்.. பெரியவங்க சின்ன வயசுலயே பேசி வச்சிருந்ததால உங்கள மனசுல நெனச்சிருந்தேன். ஒருதலையா காதலிச்சுமிருக்கலாம். ஆனா, எப்ப என்னோட காதல் உங்களுக்குப் புரியலையோ, ஏத்துக்க மறுத்திட்டீங்களோ.. அப்பவே உங்க மேலயிருந்த காதல் முடிஞ்சுபோச்சு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலைங்குறதுக்காக, அந்தக் காதல் கேவலமானதுனு சொல்ல முடியாது. அதுக்காக வாழ்க்கை முழுசும் உங்களையே நெனச்சுகிட்டு அழுது புலம்பிகிட்டு இருக்குறது நியாயமில்ல. என்னோட காதல் உண்மையானது, அதை நீங்க ஏத்துக்ல.. சொல்லப்போனா என்னோட தூய்மையான காதலயும், என்ன மாதிரியான ஒரு மனைவியையும் நீங்க இழந்துட்டீங்கனு தான் சொல்லனும். அதுக்காக நா உங்கமேல பரிதாபப்பட்றேன். சுருக்கமா சொல்லப்போனா என்னோட காதலைப் புரிஞ்சுக்காம அலட்சியப்படுத்துன யாரோ ஒருத்தருக்காக நா எதுக்காக கவலைப்படணும்?? அந்த கண்களப் பாக்குறதுக்கு நா எதுக்கு வெட்கப்படணும்?? மறைஞ்சு ஓடி ஒழியிற அளவுக்கு என்மேல என்ன தப்பு இருக்கு?? இப்ப எனக்குக் கல்யாணமாய்டுச்சு. கட்டாயம் என்னப்பத்தி முழுமையா அவரும் தெரிஞ்சுக்குவாரு. என் ஒட்டுமொத்தக் காதலையும் அனுபவிக்க, எனக்குனு ஒருத்தர் இருக்காருனு நெனைக்கும்போது அதை விட சந்தோசம் வேறெதுவும் இல்ல. உங்க மேல எனக்கெந்த கோபமும் இல்ல. அதுனால எந்தவிதமான உறுத்தலுமில்லாம நீங்க சந்தோசமா இருக்கலாம்“ என்றவள் “சரி நாங்க கிளம்புறோம், அவர் எனக்காக காத்துகிட்டிருப்பாரு...“ மெல்லிய புன்னகையுடன் சொல்லிவிட்டு விருட்டென வெளியேறினாள்.
சாட்டையடியாய் அவளுடைய வார்த்தைகள்... நிதானமான பக்குவமான அவளுடைய முடிவு.... ஒவ்வொரு வார்த்தைகளும் தனக்காகவே செதுக்கப்பட்டிருந்தது போல உணர்ந்தான் சித்தார்த்...
வெளியே, அறையை விட்டுக் கொஞ்சம் தள்ளி நின்ற கணவனிடம் “என்னங்க நேரமாய்டுச்சு கிளம்பலாமா?” என்ற காயத்ரியை முதன் முறையாகக் காதலுடன் பார்த்தான் சித்தார்த். சாஹித்யா மெல்ல மெல்ல அவன் நினைவுகளிலிருந்து மறைந்துகொண்டிருந்தாள்.
(முற்றும்)
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...