Wednesday, 19 December 2012

ஓடும் பேருந்தில் வன்புணர்வு – இந்தியா ஒளிர்கிறது..!!

காலையில் ஒரு கப் டீயோடு சாவகாசமாய் பேப்பரை மேய்ந்துகொண்டிருக்கும்போது கண்ணில் பட்டிருக்கலாம் இந்தச் செய்தி.
ஓடும் பஸ்ஸில் மாணவி பலாத்காரம்...! டெல்லியில் பயங்கரம்! லோக்சபா, ராஜ்யசபாவில் இதுகுறித்து அமளி..! மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவரை பார்த்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர்..! குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு..! கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்றும்,  மும்பையில் 239 பெண்களுக்கு இதே கொடுமை நேர்ந்துள்ளது என்றும் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது..!
படித்துவிட்டு எந்தவிதப் பதட்டமுமின்றி செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டு, வழக்கமான வேலைகளில் ஈடுபடச் சென்றுவிடலாம். நியாயம்தானே.. நமக்கேன் இதுபற்றியெல்லாம் கவலை?? நண்பர்களுடன் பேசும்போது, கசாப் தூக்கிலப்பட்டதைப் பற்றியும் பெட்ரோல் விலையேற்றம் பற்றியும் முடித்துவிட்டு, அவர்களில் யாரேனும் இதுபற்றிப் பேச்சையெடுத்தால் ஆமா.. நா கூட காலேல படிச்சேன். ரொம்பக் கொடுமையான செய்தி தான். இவனுகளையெல்லாம் சுட்டுக்கொள்ளனும்பா“ என்று, தன்னுடைய பொதுஅறிவின் பெருமையைப் பீற்றிக்கொள்ள ஒரு செய்தி கிடைத்தது. அது போதும். அதைத் தாண்டி இந்தச் செய்தியில் நம்முடைய பங்கென்று எதுவும் இருப்பதாய் நமக்குத் தெரிவதில்லை.
“நல்லவேளை அந்தப்பக்கம் தான் இந்தமாதிரி கொடுமையெல்லாம் நடந்திருக்கு. நம்மூர்ல நடக்கல“ என்று நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொள்வோம். எதிர் வீட்டில் டியூசன் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் பெண்ணும், கோவிலுக்குச் சென்று விபூதி கொண்டுவரும் உங்கள் மனைவியும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற நிம்மதியொன்று போதும் உங்கள் பெருமூச்சிற்கு.
பக்கத்து வீட்டில் தீப்பிடித்தால் ஓடிச்சென்று அணைக்கும் பதட்டத்தில், தீ தன் வீட்டிற்கு பரவிடக்கூடாது என்ற சுயநலம் எந்த அளவிற்கு உண்மையோ.. அதேயளவிலான உண்மை, இந்த மாதிரியான சம்பவங்களைக் கேள்விப்படும்போது அடுத்தநிமிடம் சகஜமாய் எடுத்துக்கொண்டு வழக்கமான வேலைகளில் ஈடுபடுவதிலும் இருக்கிறது. மனித மனம் எந்தளவிற்கு மறத்துப்போய்விட்டது என்பதற்கு இதைவிட சிறப்பானதொரு உதாரணத்தை சொல்லிவிட முடியாது.
வேலைக்குச் செல்லும் இடங்களில்.. படிக்கச் செல்லும் இடங்களில்.. வசிக்கும் இடங்களில்.. என்பதிலிருந்து முன்னேற்றமடைந்து தற்போது ஓடும் பேருந்திலேயே வன்புணர்வு நடக்க ஆரம்பித்துவிட்டது. வாழ்க்கை அந்தளவிற்கு நவீனமயமாக்கப்பட்டுவிட்டது போலும்!! இந்தியா வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சந்தோசமாக ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்..
ஒரு சக மனுஷியை.. தன்னைப்போலவே ரத்தமும் சதையுமான ஒரு உயிருள்ள உடம்பைக் கொண்ட ஒரு பெண்ணை.. காட்டுமிராண்டித்தனத்தைவிட கேவலமாய் அனுபவித்து, தூக்கி வீசியெறிந்த மிருகங்கள் வாழும் நாடு இது. இவர்களை மிருகங்கள் என்று சொன்னால் அது மிருகங்களை அவமானப்படுத்தும் சொல்லாகிவிடக்கூடும்.
ஒரு பெண்ணை, அவள் தன் மனைவியாகவே இருந்தாலும் கூட, அவளுடைய விருப்பம் இல்லாதபட்சத்தில் ஒரு கணவனாயிருந்தாலும் தொடுவதற்கு உரிமையில்லை என்கிறது நம் நாட்டு சட்டம். ஆனால் இந்தவகைச் சட்டங்கள் எந்தளவிற்கு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை இன்றைய சூழலில் செய்திகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த இரண்டு நாட்களில் மட்டும் வந்த செய்தியல்ல இது. ஆங்காங்கே நடந்தவையும், நடந்துகொண்டிருப்பவையும் தான் இவை. கைக்குழந்தையிலிருந்து 90 வயது அம்மையாருக்கு வரை, பாதுகாப்பில்லாத சமூகமாய் மாறிக்கொண்டிருக்கிறது என்பது அசிங்கமான, ஆணித்தரமான உண்மை.
பெண்களை, வெறும் புணர்வுக்காக மட்டுமே பார்க்கப்படும் பார்வை மாறுவதற்கு, இன்னும் எத்தனையாயிரம் ஆண்டுகளைக் கடக்க வேண்டுமென்று அனுமானிக்கவே முடியவில்லை.
கசாப் நிகழ்விற்கு தரப்பட்ட முக்கியத்துவமும் கண்டனங்களும் கூட, இது போன்ற சம்பவங்களுக்கு தரப்படவில்லை என்பது மறுக்கமுடியாத வேதனை. மனிதநேயம்.. பெண்ணியம் பற்றி வாய்கிழியப் பேசிய வலையாதிக்கர்களும் கூட, இது போன்ற சம்பவங்களுக்கு வாய்மூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. (மிகச்சிலரைத் தவிர) நமக்கென நாலு தத்துவம், இரண்டு கவிதையென தன் வழக்கமான பாணிகளை இப்போதும் கடைபிடிக்கும் பதிவர்களைப் பார்த்து உண்மையிலேயே பெருமைப்பட்டுக்கொள்வோம். கும்கி விமர்சனம் போடுவதில் காட்டும் பதட்டத்தில் ஒரு சதவிகிதமாவது, இதுபோன்ற சபவங்களுக்கான கண்டனங்களில் காட்டியிருந்தால் பாராட்டியிருக்கலாம்.
அடிவயிறு முழுக்க சேதப்பட்டு.. (இந்த வார்த்தையின் கற்பனையை நினைத்துப்பார்க்கும்போதே வயிற்றுக்குள் ஒரு வித உள்ளிழுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை)  மருத்துவமனையில் அபாயநிலையில் இருக்கும் அந்தப் பெண் போல, இன்னும் எத்தனையெத்தனையோ பெண்கள் இந்தநிமிடமும் போராடிக்கொண்டிருக்கலாம். வெளிச்சத்திற்கு வருவது பாதி சதவிகிதமாகவே இருக்கலாம்.
என்ன செய்யப்போகிறோம்??? எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது மனிதம்??
எப்படியும் இதை மறக்கடிக்க இன்னொரு பயங்கரம் நிகழும். காத்திருப்போம். மறப்பதற்காக..!!
.
.

Friday, 14 December 2012

மனிதனும் சுய விருப்பமும்..!

வாழ்க்கை.. லட்சியம்.. என்பதைத் தாண்டி, அபத்தமான ஆசைகளும் மனிதனின் அடிமனதில் இருக்கக்கூடும். பொது இடங்களில் காதலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் சில்மிஷங்கள் போல...! தனக்குப் பயன்படுகிறதோ இல்லையோ.. சில பொருட்களை எடுத்துவைத்துக்கொள்ளுதல் (Kleptomania) போல..
ஆசைகள் மற்றும் அதனை நிறைவேற்றிக்கொள்ள மனிதனின் முயற்சிகளைப் பற்றியும் சமீபத்தில் நண்பருடன் வாதம் நடந்தது.
இயலும் எனில், தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒருவனுக்கு சுதந்திரம் உண்டு. அது அல்பத்தனமான ஆசையாக இருப்பினும்.. என்று அவர் கூறினார்.
எதிலுமே சுய கட்டுப்பாடு வேண்டும். முடியும் என்பதற்காக முட்டாள்தனமானதையும் முயன்று பார்க்கக்கூடாது. ஒரு முறை தற்கொலை செய்துபார்த்தால் என்ன? என்று கூட ஆசை ஏற்படலாம். தன்னால் இயலும் என்பதற்காக அதை முயற்சித்துப் பார்ப்பது மடத்தனம் என்று நான் கூறினேன்.
அவனுடைய ஆசை அதுவெனில் விளைவுகளையும் அவன் தான் அனுபவிக்க வேண்டும். இது முட்டாள்தனம் அல்ல. இது ஒருவகையான “அறிந்துகொள்ளும் தன்மை“. ஒரு சிலருக்கு சில விஷயங்களில் ஒருவகை ஈர்ப்பு அல்லது த்ரில் தேவைப்படுகிறது. அதன்காரணமாக முயற்சி செய்கிறார்கள் என்றார் அவர்.
பேச்சு வளர்ந்து, இன்றைய குடும்ப வாழ்க்கை.. உறவுகளுக்கிடையே நெருக்கம் பற்றி திசை மாறியது. கணவன் மனைவி உறவுகளுக்குள் பெரும்பாலும் நெருக்கம் இருப்பதில்லை என்றும் அதைத் தாண்டிய ஒரு மூன்றாம் நபருக்கான தேடுதல்கள் அதிகரித்துள்ளதாகவும் பேச்சு வந்தது.
கலாச்சாரம், பண்பாடு என்பதைத் தாண்டி, ஆணோ.. பெண்ணோ.. தனக்கு நல்லதொரு Care Taker தேவை என்பதில் தனது தேடலைத் துவங்குகிறார்கள். அது திருமணத்துக்குப் பின், தன் துணையிடம் கிடைக்காதபட்சத்தில் அடுத்தொரு நபருக்கான ஏக்கமாக மாறுகிறது என்றும், தனக்கான புரிதல் கொண்ட நபரைப் பார்க்க நேரும்பொழுது அது உறவின் அடுத்த நிலையை அடைகிறது என்றும் வாதம் செய்தார். இது தனிப்பட்ட அந்த மூன்று நபர்களுக்கான சுய விருப்பத்தைப் பொறுத்தது என்றும், எண்பது சதவிகிதம் பேர் சமூகம் என்ற வட்டத்திற்குள்ளேயே புதைந்து போகிறார்கள் என்றும் மீதியிருப்பவர்களே அதற்கான தடையைத் தகர்த்து, தன் சுய விருப்பம் பற்றிய தெளிவிற்கு முன்வருகின்றனர் என்றும் கூறினார்.
இவருடைய கூற்று எந்த அளவிற்கு சரியானது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இந்தக் கருத்துக்கள் பற்றிய உங்களுடைய கருத்து ஏதேனும் உண்டா?
.
.

Tuesday, 4 December 2012

நட்போ..! காதலோ..!
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள,
எல்லைகள் கடந்து எதிர்த்துப்பேச,
சலுகையில்லாது சண்டைகள் போட,
விருப்பம் குறித்து வாதம் செய்ய,
குறையிருப்பின் சுட்டிக்காட்ட,
நிறையிருப்பின் தட்டிக்கொடுக்க,
தளர்ந்துபோயின் தேற்றிவிட,
கேள்விகளுக்கான பதில்சொல்ல,
பதிலுக்குமோர் கேள்வியெழுப்ப,
தேடலின்போது துணையாய் நிற்க.. என
எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது..
முகமூடியணியாத ஓர் நட்பு..!
நம்மிடமோ.. நம்மால் பிறரிடமோ..!!
.காமம் பிரதானமில்லை எனும்போது
நட்போ..! காதலோ..!
எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்.
என் உலகம் உனக்கானதுடன் பொருந்திப்போகிறது
என்பதே எனக்குப் போதுமானது..!
.
.


Thursday, 29 November 2012

சுஜாதாவின் “மீண்டும் ஜீனோ“ – என் பார்வையில்..
“என் இனிய இயந்திரா“ 1986லேயே எழுதப்பட்டிருந்தாலும் இன்றை சூழலுக்கான டெக்னாலஜி பற்றி குறிப்பிட்டிருந்தது அதிஅற்புதமான விஷயம். அதைத்தொடர்ந்து இந்தக் கதையிலும் டெக்னாலஜியின் ஆக்கிரமிப்புகள் அதிகம். ஜீனோ என்ற ரோபாட் நாயைப் பற்றிய கதையமைப்பு என்பதாலோ என்னவோ, சுற்றிச்சுற்றி ஹார்டுவேர்.. சாஃப்ட்வேர் பற்றிய வார்த்தைகளாகவே சுழன்று நம்மை மூச்சுத்திணற வைத்திருக்கிறார் எழுத்தாளர்.
நடுவில் ஒரு பத்து பக்கங்களை அடல்ட்ஸ் ஒன்லி ஆக்கினாற்போல தோன்றியது. கதாநாயகி சிபி, நிலா, காமா மூவருக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் மருந்தைக் கொடுத்து உடலுறவு மூலம் சூழ்ச்சியில் ஆழ்த்துவது தொடர்பான அத்தியாயம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டோஸ்.
ஜீனோ என்ற ஒரு மடிநாய் பலமடங்கு புத்திசாலி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனா அந்த அளவிற்கு பலசாலியாய் (வரிசையாய் எதிரிகளை நொடிப்பொழுதில் கடித்து, பற்களின் மூலம் விஷம் செலுத்திக் கொன்று விடுவது போல) வடிவமைத்திருப்பது கொஞ்சம் மிகையே.
சுவற்றில் அந்த நாயை வீசி எறியும்போது, எதிர்விசை பயன்படுத்தி மிருதுவாய் மோதும் வித்தையை ப்ரயோகிப்பது ரசிப்பிற்குரியது. ஆன்டி லேசர் வைத்திருப்பது, டேட்டா பேஸை அலசி ஆராய்வது, டிஸ்க்கில் அலாதியான மெமரி.. என ஜீனோவை ஒரு சூப்பர்மேன்... ஸாரி.. சூப்பர்டாக் போல உருவமைத்திருக்கிறார் சுஜாதா. பறக்கும் சக்தி ஒன்று தான் மிஸ்ஸிங்.
முடிவிற்கு சற்றுமுன், திடீரென புரட்சிப் படை உருவாவதும், டாக்டர் ரா மற்றும் உதவி இருவர் மூலம் அது வளருவதும், அவ்வப்போது விவி திரையில் உரையாடல்களும்.. என கொட்டாவி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
கடைசியில் வில்லன்களில் ஒருவன் தப்பியோடியபின், இயந்திரங்களுக்கே உரிய இயந்திரக்கோளாறு காரணமாக ஜீனோ ஸ்தம்பித்துப்போவதும், பின் மியூசியத்தில் காட்சிப்பொருளாய் நின்றுவிடுவதும் வழக்கமான எண்டிங்.
“என் இனிய இயந்திரா“வில் புத்தகங்கள் பற்றிய நிறைய தகவலை ஜீனோ பகிர்ந்திருக்கும். ஆனால் “மீண்டும் ஜீனோ“வில் புத்தகங்களின் தலைப்பு மட்டும்.. அதுவும் அரிதாக சொல்லுகிறது.
“மீண்டும் ஜீனோ“ சிறப்பான கற்பனை, ஆனாலும் “என் இனிய இயந்திரா“ அளவிற்குப் பாராட்ட முடியவில்லை.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...