Wednesday, 15 October 2014

“மனம்“ - என் பார்வையில்..

மறுஜென்மம் அப்டினு ஏதாவது இருக்குதா? அப்டி இருந்தா திரும்ப பிறக்குறவங்க அதே உருவத்தோட பிறப்பாங்களா? குறிப்பா போன ஜென்ம ஞாபகங்கள் திரும்ப வருமா? முந்தைய ஜென்மத்துல தாங்கள் யாரை நேசிச்சாங்களோ அவங்களை இந்த ஜென்மத்துலயும் அடையாளங்காண முடியுமா? அப்பாவை கண்டுபிடிச்சாச்சு.. அப்டினா அம்மாவும் கிடைப்பாங்கனு தேட ஆரம்பிச்சா சித்ததப்பா, மாமா, தாத்தானு வரிசையா எல்லாரையும் கண்டுபிடிச்சுடலாமா?? இந்த மாதிரியான அறிவியல் கேள்விகளையெல்லாம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு படம் பார்க்க உக்கார்ந்தா போதும்.. “மனம்“ உணர்ச்சிகளின் ஒட்டு மொத்த குவியல்னு சர்டிபிகேட் குடுக்கலாம்.
நாகேஷ்வர்ராவ், நாகர்ஜூனா, நாகசைத்தன்யா மூவரும் நாகசைத்தன்யா, நாகர்ஜூனா, நாகேஷ்வர்ராவ் என்ற வரிசையில் நடித்திருக்கும் திரைக்கதை. ஆரம்பத்துலருந்து பார்க்கலேனா குழப்பம் தெளியிறதுக்குள்ள படம் முடிஞ்சிடும்.
தன் பெற்றோரான நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவின் மரணத்திற்குப் பின் நாகர்ஜூனா ரொம்ப வருடம் கழித்து அவர்களை அதே உருவில் இளைஞர்களாக காண்கிறார். இருவரையும் காதலர்களாக சேர்த்துவைக்க முயற்சி செய்து, கடைசியில் அவர்களுக்கே முன்ஜென்ம ஞாபகம் வந்து கட்டிப்பிடிச்சு கதை முடியுது.
இன்னொரு பக்கம், தன் பெற்றோரான நாகர்ஜூனா மற்றும் ஷ்ரேயாவின் மரணத்திற்குப் பின், வயதான காலத்தில் மீண்டும் அதே உருவில் அவர்களை காண்கிறார் நாகேஷ்வர்ராவ். பின் இயல்பாகவே காதல் ஏற்பட்டு கட்டிப்பிடிச்சு கதை முடியுது. நடுவுல அவங்களுடைய ப்ளாஷ்பேக் கதைக்கு கொஞ்ச நேரம் கதை போயிட்டு வருது.
குடும்பக் கதைங்குறதால அதாவது நாகேஷ்வரோட “குடும்ப“ கதைங்குறதால ஒரு பாட்டுல அமலாவும் கடைசிக் காட்சில ஸ்லோமோஷன்ல சைத்தன்யாவின் தம்பியும் அகிலும் வந்துட்டுப் போறாங்க.
இதுல பாராட்ட வேண்டிய விஷயம்னா க்யூட் நாகர்ஜூனா மற்றும் கேமராமேனும் தான். ரெண்டு விஷயமுமே மனசைக் கொள்ளையடிச்சுகிட்டு போயிடுது. சைதன்யாவைவிட இளமையா இருக்கிறார் மனுஷன். ப்ப்ப்பா..
ஷ்ரேயாவை கூட டாக்டர் கதாப்பாத்திரத்தில் கொஞ்சம் ரசிக்க முடியுது. ஆனா இந்த சமந்தாபுள்ளைய எப்படிபார்த்தாலும் கதாப்பாத்திரத்தோடு ஒட்ட மாட்டேங்குது. அதுலயும் முன்ஜென்ம ஞாபகம் வந்து தன் குழந்தையான நாகர்ஜூனாவை பார்த்து அழும்போது ம்ஹூம்.. ஸாரி சமந்தா.
நாகேஷ்வர் பிறக்குறதுக்கு முந்தைய காலகட்டத்துல நாகர்ஜுனாவுக்கு ஷ்ரேயாவுக்கும் கல்யாணம் நடக்குற ப்ளாஷ்பேக் காட்சி. ஹீரோவை பார்த்ததும் அம்மணி உணர்ச்சிவசப்பட்டு சபைலயே கட்டிப்பிடிச்சு படுத்துடுறாங்க. படுத்துகிட்டே தாலி கட்டுறார் ஹீரோ. 1920ல இது எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியல.
எந்த சீரியஸ் அழுவாச்சியும் இல்லாம, நடந்து போகிற போக்கில் திரைக்கதை அமைத்திருப்பது க்ளாசிக்.
மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்கலாம்னு படங்களைப் பட்டியல் போட்டா கட்டாயம் “மனம்“ இடம்பெறும்.
.

Wednesday, 10 September 2014

Bungee jumping of their own - என் பார்வையில்..

காதலுக்கு பாலின வேறுபாடு அவசியமில்லை... ஆழ்மனதில் அதை உணர்ந்தாலே போதும் என சொல்ல முயற்சித்திருக்கும் கதை. (கொஞ்சம் மறுஜென்ம சாயலும்).
பயமும் ஆர்வமும் கலந்த பால்ய அழகான காதல், பிரியமான காதலி, அவர்களுக்குள்ளான ரம்மியமான ஊடல், திடீரென விபத்தில் அவள் மரணம்..
ஒரு மெல்லிய இசையை கேட்டுமுடிக்கும் தருவாயில் தோன்றும் பாரத்துடன் ஆரம்பிக்கிறது படத்தின் பிற்பாதி.
நாயகன் ஆசிரியராய் சேரும் பள்ளியில், தன் இறந்துபோன காதலியை நினைவுபடுத்தும் ஒரு மாணவன். காதலியை ஒத்திருக்கும் அவனது பேச்சுக்களும் படம்வரையும் திறனும், பார்க்கும்போதெல்லாம் நாயகனுக்கு அவனைநோக்கியதான ஓர் உந்துதலை ஏற்படச்செய்கிறது.
//
After I'm born again,
I'm going to look for you.

And when I do,
I'll fall in love with you again.

Really?
But how will you know
if it's me in my next life?

I'll recognize you.
I'll know.

How?

I'm going to fall in love
again with someone else.
That person will be you.
//
காதலின் அழுத்தத்தை கவிதையாய் சொல்லிச்செல்லும் காட்சி இது.
ஓரினச் சேர்க்கைக்கு முன்னதான நூலிழையை லாவகமாக தொட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர். ஒட்டுமொத்த பள்ளியுமே நாயகனை ‘Gay’ என அழைக்கையில் நமக்கு அந்த கதாப்பாத்திரம் மீது பரிதாபமே மிஞ்சுகிறது. அதே மாணவன் கிண்டலாய் “டேட்டிங் போகலாமா?“ என ஆசிரியரை அழைக்கும்போது, அவன் சட்டையைப் பிடித்து உழுக்கியபடி அழுதுகொண்டே “என்னால் உன்னை உணரமுடிகிறது Tae-hee.. நீ எப்படி என்னை மறந்தாய்? என கேட்பது வலியின் உச்சம்.
ஆரம்பத்தில் நாயகனுக்கு சாதாரணமாய் ஏற்படும் ஈர்ப்பு, போகப்போக மாணவனின் காதலி மீது வெறுப்பை ஏற்படுத்துவது யதார்த்தம். ஓரினச் சேர்க்கையாளனோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மருத்துவரிடம் தானே சென்று பரிசோதிப்பதும், மனைவியிடம் சந்தேகத்தை கேட்பதும் என ஆங்காங்கே இயக்குனர் தான் சொல்ல வந்ததை வலுப்படுத்துகிறார். (அவ்வளவு நேசத்தையும் சோகத்தையும் வைத்திருக்கும் ஹீரோ, திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வது லாஜிக் உறுத்தல் என்றாலும் படம் பார்க்கும்போது அது நம் ஞாபகத்துக்கே வராமல்போவதுதான் படத்தின் பலம்).
காதலியுடன் நெருக்கமாயிருக்கும் ஒரு காட்சியில் நாயகனுக்கு விக்கல் வரும், பயம் அல்லது எக்சைட் ஆகும் தருணத்தில் விக்கல் வருவதாய் கிண்டல் செய்வாள். பின்னொரு காட்சியில் மாணவனுடன் கால் கட்டி ஓடும் போட்டியில் அவன் தோள் தொடும்போது அதே போல விக்கல் வந்தவுடன் பயந்து தன் வாய்பொத்துவது டைரக்டர் டச்.
கடைசி பத்து நிமிடங்களில் மாணவன் நாயகனைத் தேடிவருவதும், பின் நியூயார்க் செல்லும்போது நாயகனின் தோள்சாய்ந்து உறங்குவதும் கைகோர்த்து நடப்பதும் என எந்தவொரு காட்சியையும் மிகைப்படுத்திடாது, கொஞ்சமும் இச்சை கலக்காது காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
இறுதிக்காட்சியில் பாலத்திலிருந்து இருவரும் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் மறுநொடி கேமரா மெதுவாய் படத்தின் ஆரம்ப காட்சியைச் சுற்றி பயணிக்கும்போது, இசையுடன் நாமும் அங்கேயே நின்றுவிடுகிறோம்.
It's not because I love you. It's because all I can do is love you... I'll love you forever

.

Thursday, 21 August 2014

செல்போன்..

“என்னக்கா இந்நேரம் வந்துருக்கீங்க?“
சட்டை பட்டனை போட்டுக்கொண்டே கேட்ட பக்கத்துவீட்டு சாரதியிடம் தயங்கியபடி விஷயத்தை சொன்னேன். சிரிப்பா ஏளனமாவெனப் புரிந்துகொள்ள முடியாதபடி புன்னகைத்தான்.
“இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்கக்கா. கண்டுக்காம விட்ருங்க“
சொன்னவனை நிமிர்ந்து பார்த்தேன். இவனுக்கு நான்பட்ட அவமானம் புரியவில்லை.
“உன்னால எனக்கு உதவ முடியுமா முடியாதானு மட்டும் சொல்லு“
“ம்ம் சரிங்கக்கா. உங்களுக்காக பண்றேன். ஆனா எனக்கென்னவோ இது தேவையில்லாத வேலைனு தோணுது.“
கடைசி வார்த்தையை கவனிக்காதவளாய் “எட்டு மணிக்கு வாங்கிவச்சுடுவேன். சரியா காலேல எட்டரைக்கு பஸ் ஸ்டாண்ட் வந்துடு.“ என்றவாறு வீடுவந்து சேர்ந்தேன். இரவு முழுக்க தூக்கமே வரவில்லை.
ச்சே.. எல்லாம் அந்த சந்திராவால் வந்தவினை. 
நான்குநாட்களாக வேண்டுமென்றே சீண்டிக்கொண்டிருந்தவள் இன்று நேரடியாகவே பேசிவிட்டாள். இருக்கட்டும். நாளைக்கு நான் யார்னு காட்டுறேன்.
மறுநாள் சரியாய் ஏழு மணிக்கு செல்லதுரை வீட்டுக் கதவை தட்டினேன். அவர் மனைவியின் பலத்த சிபாரிசு என்பதால் அதிகம் கேள்வி கேட்காமல், பொருள் பத்திரம் என்றும் சாயந்திரம் ஒப்படைத்துவிட வேண்டுமென்றும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். “சரிங்கண்ணே.. சாயந்திரம் பத்திரமா கொடுத்துடுறேன்“ என்றேன். என் தலையாட்டலில் திருப்தியடைந்தவராய் என் கையில் ஒருவழியாய் ஒப்படைத்தார்.
என் வாழ்நாளில் நான் தொட்டுப்பார்க்கும் முதல் செல்போன் அதுதான். லேண்ட்லைன் போனைக்கூட அதிகம் தொட்டுப்பார்த்திடாத எனக்கு இது மிகப்பெரிய பொக்கிஷம் தான். கிட்டத்தட்ட சந்திராவினுடையதைப் போன்றே இருந்ததில் கூடுதல் சந்தோசம். கைநடுங்க, பாதுகாப்பாய் கைப்பையில் வைத்துப் பூட்டினேன். மறக்காமல் அதன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டேன்.
“இதோ பாரும்மா, ருக்மணி சொன்னாங்குறதுக்காகத்தான் குடுக்குறேன். சின்ன கீறல் கூட விழாம சாயந்திரம் ஒப்படைக்கணும். ஜாக்கிரதை“ கிட்டதட்ட எச்சரிக்கை செய்தாரென்று தான் சொல்லவேண்டும். சரியென்பதுபோல் பவ்யமாய் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். எதையோ சாதித்ததாய் பெருமித உணர்வுடன் “வரேங்கண்ணே“ என்பதாய் தலையாட்டிவிட்டு நடையில் வேகம் கூட்டினேன். மணி எட்டு நாற்பது, தூரத்தில் சாரதி நிற்பது தெரிந்தது. இனி பேருந்து ஏற வேண்டியதுதான். பேருந்திற்குக் காத்திருக்கும் நேரத்தில் சுருக்கமாய்..
விற்பனைக்கான பயிற்சி வகுப்பில் எனக்குப்பின் சேர்ந்தவள் சந்திரா. என் குறிப்புகளை கடன்வாங்கி, வராத வகுப்புகளை நிரப்பிக்கொண்டிருந்தாள். இதுதான் செல்போன் என்பதே அவள் கையிலிருந்த வஸ்துவைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். கருப்பாய், மஞ்சள் வெளிச்சத்துடன், மேற்புறம் உருண்டையாய் ஏதோ நீட்டிக்கொண்டிருந்த அந்த கணமான பொருளை இரண்டுநாட்களாய் அடக்கிவைத்த ஆசையில் தொட்டுப்பார்க்க, எரித்துவிடுவதாய் சீறி அசிங்கப்படுத்திவிட்ட சந்திரா முகத்தில் இன்று கரியைப் பூச வேண்டும். அதற்குத் தான் கெஞ்சாய் கெஞ்சி இந்த..
“அக்கா ஸ்டாப் வந்துடுச்சு எந்திரிங்க“ 
இறங்கி நடந்தோம்.
“டேய் சாரதி.. சொன்னது ஞாபகமிருக்குல்ல? பத்தரைக்கு வகுப்பு ஆரம்பிக்கும். சரியா பதினொரு மணிக்கு இந்த நம்பருக்கு பூத்லருந்து போன் பண்ணு. அந்த சந்திராவுக்கு முன்னாடி சொந்தக்காரங்க கிட்ட பேசுற மாதிரி பேசுவேன். ரெண்டே நிமிஷம்தான்.  அப்புறம் நீ உன் காலேஜ் கிளம்பிடு.“ தலையாட்டினான்.
திட்டம் செயல்படப்போகும் மகிழ்ச்சியில் வகுப்பினுள் நுழைந்து சந்திராவைத் தேடினேன். இடப்புறம் மூணாவது வரிசையில் தென்படவே, திருப்தியாய் வலப்புறம் இரண்டாவது வரிசையில் என் இருக்கையில் அமர்ந்தேன். கைப்பையை தொட்டுப்பார்த்தேன், அதன் உச்சி தட்டுப்பட்டபோது பதட்டத்துடனான சந்தோசம் கிடைத்தது. சந்திராவை ஏளனமாய் பார்த்தபடியே கடிகாரத்தை நோக்க ஆரம்பித்தேன்.
வகுப்பு ஆரம்பித்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள். சர்வ அமைதியில் என் இதயத்துடிப்பை உணர முடிந்தது. மணி பதினொன்றை நெருங்க எனக்குப் பதட்டம் ஆரம்பித்தது. எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க, சத்தமாய் போனில் பேசவேண்டுமென நினைத்துக்கொண்டேன். உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது.
11:00
11:03
11:05
படுபாவி.. என்ன பண்ணிகிட்டு இருக்கான்? எங்க போய்த்தொலைஞ்சான்?
11:07
11:08
சாரதியை சாபமிட ஆரம்பித்தேன். எடுத்த முயற்சியெல்லாம் வீணாய்ப்போன கோபம் தலைக்கேறியது.
11:09
பெரிதாய்.. சத்தமாய்.. சந்திராவின் ஆணவத்திற்கு சங்கொலியாய்.. என் கைப்பையில் மணி அடித்தது.
ஒட்டுமொத்த வகுப்பும் ஒருசேர திரும்பிப்பார்க்க என் பார்வை சந்திராமீது மட்டும்.
என்னைப் பார்க்கிறாள் என்று ஊர்ஜிதப்படுத்தியபடி, பதட்டம் வெளிப்படாதவாறு, நிதானமாய் கைப்பையைத் திறந்து போனை எடுத்தேன். எல்லோர் முகத்திலும் ஆச்சர்யம்.. “செல்போனா? பார்ர்ர்ரா சொல்லவேயில்ல.. எப்ப வாங்கின?“ கேள்விகளைப் லட்சியம் செய்யாது பகட்டாய் சந்திராவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே அதன் மஞ்சள் திரையைப்பார்த்தேன். சட்டென நினைவுக்கு வந்தது.
இதில் எந்த பட்டனை அழுத்திப் பேசுவாங்க..!!??
வியர்வை எட்டிப்பார்க்க, யோசித்துக்கொண்டே சந்திராவைப் பார்த்தேன்.
அவளுக்குத் தெரிந்திருக்குமோ??!!

.

Tuesday, 27 May 2014

தீராத பசிகொண்ட விலங்கு..

வாழ்வின் ஸ்வாரஸ்யமான அனுபவங்களை தொகுப்பாக வெளியிடுவதென்பது எழுத்தாளர்களுக்கேயுரிய பெருஞ்சவால். நூலிழையில் அது தற்பெருமையாகவோ, சுயசொரிதலாகவோ அமைந்துவிடக்கூடும். இதைத் தவிர்த்திடவே சிறுகதைத் தொகுப்புகள் என்ற பேர்வையில் ஆங்காங்கே அரிதாரமிட்டு சம்பவங்களை எழுதித் தள்ளுவர் சிலர். அவற்றில் பத்தில் நான்கு கதைகள் படிப்பவர் மனதை ஆட்கொண்டாலே பெரிய விஷயம் தான்.
வாழ்வில் இடம்பெறும் மிகச்சாதாரண சம்பவங்களில் கிடைக்கும் அசாதாரண அனுபவங்களின் தொகுப்புகளுக்கு பாவண்ணன் எழுதிய “தீராத பசி கொண்ட விலங்கு“ நிச்சயம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதில் இடம்பெறுபவர்கள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சட்டென காணாமற் போகும் மனதில் பதிந்த மனிதர்கள் தான். தினமும் நாம் கடந்து செல்லும் மரத்திலிருந்து மனிதர்கள் வரை ஏதோ ஒன்று நம்மை எந்தவகையிலோ பாதித்து பதிந்து செல்கின்றன. அவற்றிற்கான தேடல்களும் ஏக்கங்களும் புத்தகம் முழுக்க நிறைந்து கலந்திருக்கின்றது.
இருபத்தி மூன்று (வெவ்வேறு) சம்பவங்களின் தொகுப்புகள் அடங்கிய இப்புத்தகத்தில் என்னை இரண்டாவதாய் படிக்கத் தூண்டிய பகுதியெனில் “நெருங்க முடியா இடைவெளி“ தான். தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பு.. ஸ்பரிசங்கள்.. நாளாக நாளாக எங்கனம் மாற்றம் பெறுகிறதென்பதை தன் எழுத்துக்களின் வர்ணனையில் அழகாய் காட்டியிருப்பார்.
முதன் முதலாய் பள்ளியில் சேர்க்கும்போது கட்டிப்பிடித்தவாறு முத்தமிட்டு மார்போடு அணைத்துத் தூக்கிச் செல்லும் மகன் பின் பால்யம் மாற்றம்பெறுகையில் பறக்கும் முத்தமுடனும் கைகுலுக்கலுடனும்.. பின் சலூனுக்கு மட்டும் உடன்வருபவனாயும், வளர்ந்தபின் எதிர்பாராமல் கிடைத்த தொடுகையில் ஆசையாய் உள்ளங்கை பிடிக்க, உதறிவிட்டு தொலைக்காட்சி பார்ப்பதாய்.. என குழந்தைகளின் மீதான பெற்றோரின் ஏக்கங்களை ஒப்பனையின்றி வழங்கியிருப்பார். “எனக்கும் அவன் கைக்கும் இரண்டடி தூரம்தான். ஆனாலும் அது இனி நெருங்கவே முடியாத இடைவெளியாகிப் போனது“ என்று ஏக்கமாய் விவரிப்பது வலிகளின் யதார்த்தம்.
நடைமுறைகளை உவமையெனும் பேரில் மிகைப்படுத்தாமல், அப்படியே பதிந்தமைக்கு எழுத்தாளருக்கு என் பாராட்டுக்கள்.

தீராத பசிகொண்ட விலங்கு
பாவண்ணன்
புதுமைப்பித்தன் பதிப்பகம்

.

Tuesday, 29 April 2014

துருப்பிடித்த நேயம்..!


சடுதியில் விலகிச்செல்லும்
பைத்தியக்காரனின் அருகாமையென
இழந்துகொண்டிருக்கிறோம் நமக்கான இயல்புகளை..!

நின்று நிதானமாய் எதையும் ரசித்திட
அவசியமோ அவகாசமோ ஏதுமிருப்பதில்லை..!

பக்கத்து இருக்கைக் குழந்தையின் அழுகையில்
முகஞ்சுளிப்பதில் தோற்றுப்போகிறது
ஆதி மனிதனின் ஆசுவாசங்கள்...!

வண்ணத்துப்பூச்சியை மீண்டும் புழுவாக்கும் முயற்சியில்
லயித்துக்கிடக்குமித் துருப்பிடித்த நேயத்தில்
துர்நாற்றமடிக்கிறது தேங்கிக்கிடக்கும் ரத்தக்கறைகள்..!

காயங்களைக் குத்திக்கிழிக்கும் கோணிகளைக்கொண்டு
வேறேதும் செய்வதற்கில்லை நாம்..!

வாழ்விற்கான சாத்தியங்களில் தொலைந்துபோகிறது

வாழ்வதற்கான முகாந்திரங்கள்..!!
.
.

Friday, 28 March 2014

“Highway” – என் பார்வையில்..

Stockhome syndrome என்பதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். தமிழில் அமர்க்களம் முதலிய சில படங்களில் பார்த்துப் பழகிய “தம்மைக் கடத்தியவர்கள் மீதே தோன்றும் ஈடுபாடு“ என்கிற விஷயம் தான்.
சாமான்ய வாழ்க்கைக்கு ஏங்கும் பணக்காரவீட்டுப் பெண்ணாய் Alia Bhatt. எதிர்பாராதவிதமாய் கடத்தப்பட்டு, அழுது, தப்பிக்க முயற்சி செய்து, பின் கொஞ்சம் கொஞ்சமாய் சூழ்நிலையை ரசிக்க ஆரம்பித்து, கடத்தியவரையே பிடித்துப்போய், “எதுவுமே வேணாம். நீ போதும்“ எனும் கதாப்பாத்திரம். அழுகை மட்டும் நல்லா வருது அம்மணிக்கு. கதாப்பாத்திரத்தின் அழுத்தத்தை இன்னும் தெளிவாக உணர்ந்து நடித்திருக்கலாம். தேர்ந்த முகபாவங்கள் மூலமாகவே ஸ்கோப் செய்யக்கூடிய காட்சிகளில் அதற்கான முக்கியத்துவத்தை அறியாது அலட்சியமாய் தவறவிட்டிருக்கிறார்.
Randheep Hooda சிரிச்சா நல்லாயிருக்கார். ஆனா சோதனைக்குனே இந்தப் படத்துல ஒரே ஒரு காட்சில தான் சிரிக்கிறார்.. வசனமும் ஏகத்துக்கு கம்மி. அதிகமாய் அவர் பேசியது “வாய மூடு..“ “உள்ள போ..“ “பேசாம இரு..“ அவ்ளோ தான். கதாப்பாத்திரம் உணர்ந்து நடிச்சிருக்கார்ங்குறதால கொஞ்சம் ஆறுதல். தனக்கென உணவு தயார் செய்யும் ஆலியாவை ஒளிந்திருந்து பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கதறி அழும் காட்சியில் க்ளாப்ஸ் வாங்குகிறார். ஆனால் அதற்கு ஆறுதல் சொல்கிறேங்குற பேர்ல அழகான காட்சியை சொதப்பியிருக்கிறார் ஆலியா.
படத்துக்கு உயிர் கொடுக்குறது ஏ.ஆர்.ரஹ்மான் தான். முற்பாதியில் பெரும்பாலும் பின்னணியைத் தவிர்த்துவிட்டு, ரெண்டாவது பாதியை முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார் மனுஷர். பஸ் ஸடாண்டில் தன்னுடனேயே வாழ விரும்பி பதட்டமாய் நிற்கும் ஆலியாவை, தூரத்தில் பார்த்து ரந்தீப் புன்னகைக்கும் காட்சியை இசையின் மூலம் கவிதையாக்கியிருக்கிறார்.
பயணம் பற்றிய திரைப்படங்களில் கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும், அதற்கு நேர்மாறாய் லொகேஷன்கள் அதிகமாய் இருத்தல் அவசியம். இதில், தண்ணீர் பாயும் சில இடங்கள் தவிர, மனதில் நிற்கும் அளவிற்கு இடங்களைத் தேர்வு செய்யாமல் விட்டது குறை. குறிப்பாக, ஆலியா துப்பாக்கியை எடுத்து அழகு பார்க்கும் பனி பொழியும் காட்சியில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.
மணிரத்னம் படத்தில் வரும் தீவிரவாதிகள் போலவே  இதிலும் (பணயக்கைதிகள் எவ்வளோ வாய் பேசினாலும்) இரக்கத்துடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால் நிஜத்தில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது நமக்கே தெரியும். தமிழ் சினிமாபோல பணக்கார தந்தைக்கு சவால்விட்டு ஹீரோயினை தோளில் தூக்கிநடக்கும் ஹீரோயிச க்ளைமேக்ஸ் இதில் இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல்.
படத்தின் பெரிய பலமே, கடைசிவரை பார்த்து முடிந்தபிறகு தான் அதன் குறைகள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர ஆரம்பிக்கிறது.
.

Thursday, 13 March 2014

“அவன்-அது=அவள்“ - என் பார்வையில்..

மாற்றுப் பாலினத்தவர்களின் வாழ்வை வெட்டவெளிச்சமாய் தன் எழுத்துக்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியதற்கே பாலபாரதியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
“அவன்“ மெதுமெதுவாய் தன் உடல் மாற்றங்களை உணர்ந்து, குடும்பத்திலிருந்து பிரிந்துவந்து, தன்போல் இருப்பவர்களுடன் சேர்ந்து, பலவித கஷ்டங்களை அனுபவித்து, ஆணுறுப்பை இழந்து கடைசியில் “அவள்“ என மாறுவதாக கதை பயணிக்கிறது. திருநங்கைகளுக்கே உரிய அவமானங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கஷ்டங்கள், சலிப்புகள்.. என ஒவ்வொரு உணர்வுகளையும் அப்படியே எழுத்தின் வடிவாய் தந்திருக்கிறார் எழுத்தாளர்.
கதையில், மூன்று சம்பவங்கள் என்னை வெகுவாய் பாதித்தது. கூவாகத்துக்குப் போகிற வழியில் நான்கு பேர் ஆசணவாய் மூலம் அவளைக் கற்பழிக்கும் காட்சி, காவல் நிலையத்தில் எத்தவறுமே செய்யாமல் கைது செய்யப்பட்டு ஆடைகள் உருவப்பட்டு அடி வாங்கும் காட்சி, இறுதியாய் ஆணுறுப்பை கத்தியால் அறுக்கும்போது அவள் அலறும் காட்சி... எழுத்தாளரைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட, இம்மாதிரியான மாற்றுப் பாலினத்தவர்களின் வாழ்க்கையை நினைத்து வேதனைப்படவே தோன்றுகிறது.
நாயகி ஒரு திருநங்கை எனத் தெரிந்தும் அவளைக் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் “அன்பு“ கதாப்பாத்திரத்தின் மேல் மதிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவனும் சராசரியாய், குடித்துவிட்டு அவளைப் பிச்சை கேட்க அனுப்புவதாகக் காட்டியிருப்பது உச்சகட்ட வேதனை. கடைசி வரை அவளுக்கு வேலை கிடைக்காமல் பிச்சை எடுப்பதாகவே சொல்லியிருப்பது கூடுதல் வலி.
திருநங்கைகளின் வாழ்வு பற்றி எழுதிய கையோடு, கதையின் முடிவாய் அவர்கள் வாழ்வில் ஏதேனும் மாறுதல்களோ அல்லது முன்னேற்றமோ ஏற்படுவதாய் காட்டியிருக்கலாம். தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெயிப்பதாய் காட்டியிருப்பின், படிக்கும் அவள்போன்றோருக்கு கொஞ்சமேனும் வாழ்வு பற்றிய நம்பிக்கை ஏற்படும். குடிகாரன், செக்ஸ் வெறியன், சுயநலவாதி.. ஆனாலும் பரவாயில்லை.. கணவனோடே காலம் தள்ளுகிறேன் என அழுதுகொண்டே நாயகி செல்வதாய் முடித்தவிதம் கொஞ்சம் நெருடல்.
திருநங்கை என்றாலே பாலியல் தொழிலாளி என்ற கேவலமான சிந்தனை உள்ளவர்களில் ஒரு சிலராவது தங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்ள இக்கதை நிச்சயம் உதவும். உடல்மொழியாலோ, எண்கள் வைத்தோ திருநங்கைகளை கேலி பேசும் நல்ல்ல்ல உள்ளங்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
“அவன்-அது=அவள்“
யெஸ்.பாலபாரதி, தோழமை வெளியீடு

.

Wednesday, 29 January 2014

கோலி சோடா - என் பார்வையில்..

“கோலி சோடா“வுக்கு பதிலா “அடையாளம்“னு பேர் வச்சிருக்கலாம். ஒரு மனுஷனுக்கு அடையாளம், அங்கீகாரம் எவ்வளவு முக்கியம்னு சொல்ல முயற்சி பண்ணியிருக்காங்க.
விட்டேத்தியா திரியிற நாலு பசங்க, சுயமா மெஸ் ஆரம்பிச்சு, வில்லனோட ஆட்களை அடித்து, பிரிக்கப்பட்டு வேறவேற ஊர்ல திரிஞ்சு, திரும்பவும் சேர்ந்து, மறுபடியும் வில்லனை எதிர்கொண்டு ஜெயிச்சு, தங்கள் மெஸ்ஸை மீண்டும் ஆரம்பிப்பதுதான் கதை.
நிஜ வாழ்க்கைல இதெல்லாம் சாத்தியமா“ங்குற கேள்வியெல்லாம் ஓரம்கட்டிவச்சுட்டு படம் பார்த்தா, கண்டிப்பா பாராட்ட வேண்டிய முயற்சி தான்.
பசங்க படத்துல வர்ற பசங்களா இவங்க? அரும்பு மீசையும், பொண்ணுங்க முன்னாடி கெத்து காட்டுறதும், கண்கள்ல மிறட்சியும் வெறியும்..னு அசத்தியிருக்காங்க.
“தொலைச்ச இடத்துல தான் தேடணும்“ போன்ற நறுக் வசனங்கள் நிமிர வைக்கின்றன. ஒல்லியாய் வரும் பெண் தோழி மனதில் நிற்கிறார். பாண்டியை போலீஸ் ஜீப்பில் ஏற்றியபின், காயங்களுடன் பச்சை தாவணியைப் பார்த்து மெல்லிசாக சிரிக்கும்போது.. அழகு.
ATMன்னா அழுகுன டொமேட்டோ தானே?“ “நானும் அழுவேங்க.. ஆனா யாருக்கும் தெரியாது“ எனும்போதெல்லாம், பக்கடா பாண்டியைப் போலவே நமக்கும் அந்தப் பெண்ணை சட்டென பிடித்துவிடுகிறது.
வெவ்வேறு மாநிலங்களில் தள்ளப்படும் நால்வரும் ஒரே பாட்டில் சட்டென சேர்ந்துவிடுவது.. அவர்களின் தோழிகளுள் ஒருவருக்கு மட்டும் மொட்டை போட்டுவிட்டு, மற்றொரு பெண்ணை ஏதும் செய்யாமல் விட்டுவிடுவது.. திடீரென எலெக்சனில் நாமினேசன் தாக்கல் செய்வதாய் ஹீரோயிசம் காட்டுவது... என அங்கங்கே நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன.
காதல், ரெட்டை அர்த்த வசனங்கள், மொக்கை காமெடிகள், டாஸ்மாக் உளறல்கள் என்ற வட்டத்திற்குள்ளயே சுற்றிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இப்படம் சிறிதேனும் ஆறுதல் தான். இம்மாதிரியான முயற்சிகளை தாராளமாய் வரவேற்கலாம்.
.
(ஒருவழியா 250வது பதிவை இதன்மூலமா தேத்தியாச்சு)

Monday, 27 January 2014

தலைப்புகளில்லா கட்டுரைகள்..!

“என்ன கட்டுரை யோசிச்சு வச்சிருக்க?“ கேட்ட சத்யாவிடம் வெறுமையாய் உதடு பிதுக்கினேன்.
“எவ்வளவு யோசிச்சாலும் தலைப்பே கிடைக்க மாட்டீங்குது“ கவலையாய் பதில் சொன்னேன்.
“வீட்லயே உக்காந்திருந்தா சரிவராது. கொஞ்சம் நடந்துட்டு வரலாம் வா“ என்றாள். எனக்கும் சரியெனப்படவே கிளம்பினோம்.
விடிந்தால் கட்டுரைப்போட்டி. பரிசு வாங்கவில்லையெனினும் நல்ல கட்டுரையென்று தோழமைக்குள் பேர் வாங்குமளவுக்காவது எழுதி விடுவதுண்டு. இம்முறை அதுவுமில்லை. இரவுக்குள் கட்டாயம் யோசித்திட வேண்டும். இல்லையெனில் மானம் போய்விடும்.
இருவருமாய் ஏதேதோ பேசிக்கொண்டு நடந்தாலும் மனம் மட்டும் கட்டுரைக்கான தேடலையே சுற்றிச்சுற்றி வந்தது.
“ஏய்.. என்ன யோசனை? எழுத முடியலனா விட்டுத்தள்ளு. அதுக்கு ஏன் பேய் பிடிச்சது மாதிரி நடந்து வர்ற?“ என்றவளிடம் “எழுதிடுவேன். பேசாம வா“ என்றேன்.
“குழந்தைத் தொழிலாளர்..“
“பாலியல்..“
“திருநங்கைகள்..“
“தலைமுறை இடைவெளி..“
மனதினுள் உருப்போட்டுக்கொண்டே வந்த சிந்தனையை சட்டென ஒரு குவியலுக்குள் நிறுத்தியது அக்காட்சி.
பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பெண், இடுப்பில் குழந்தையுடன் கையில் பெரிய பையுடன் இறங்கிக்கொண்டிருந்தாள்.
மின்னல் வெட்டியதாய் சட்டென பிரகாசமாய் மாறும் என் முகத்தைப் பார்த்தமாத்திரத்தில் “தலைப்பு கிடைச்சுடுச்சு போலயே?“ என்ற சத்யாவிடம், எங்களைக் கடந்து குழந்தையுடன் முன் சென்ற அப்பெண்ணை ஜாடையில் சுட்டிக்காட்டினேன். இடுப்பிலிருந்த அக்குழந்தை எங்களைப் பார்த்து சிரித்தபடி கையசைத்துக் கொண்டிருந்தது.
விவாகரத்தான பெண்களுக்கும், வாழ்க்கைல தனித்துவிடப்பட்ட பெண்களுக்கும் தன்னம்பிக்கை தரும் வகைல கட்டுரை எழுதுனா என்ன?“
“புரியல. தெளிவா சொல்லு..“ என்றாள்.
“அதாவது சுய உதவிக்குழு பற்றி, சுய தொழில் பற்றி.. சடங்கு சம்பிரதாயம் பற்றிய மூடநம்பிக்கை பற்றி எழுதுனா என்ன?“
“ம்ம் நல்ல யோசனை. சரி உன்னோட பார்வையை சொல்லு“
“நமக்கு முன்னாடி போறாங்கள்ல அவங்களைப் பாரேன். அவங்களுக்கு என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியாது. ஆனா என்னோட பார்வைல, குழந்தையும் பையையும் வச்சுகிட்டு இந்த வெயில்ல நடந்து போறதைப் பாக்கும்போது, ஆதரவில்லாம தனித்து விடப்பட்ட பொண்ணுங்க தான் கண்ணுக்கு தெரியிறாங்க. அதுமட்டுமில்லாம, கணவன் இறந்துட்டா செய்யப்படும் முட்டாள்தனமான சடங்குகள் பற்றிய விழிப்புணர்வையும் எழுதணும்“
சொல்லிக்கொண்டே, இன்னமும் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து கண்சிமிட்டி விளையாட்டுக் காட்டினேன். அது தன் அம்மாவின்மீது முகம் பொத்தி மீண்டும் சிரித்தது.
அவர்களைத் தொடர்ந்து நடந்தபடியே என் கட்டுரை பற்றியும், அதனான என் சிந்தனைகள் பற்றியும் சத்யாவுடன் பேசிக்கொண்டே வந்தேன்.
குழந்தையுடனான கண்ணாமூச்சி விளையாட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளியாய், என் வீடு வந்தது. அந்தப் பெண் நேராய் நடந்து கொண்டிருந்தாள். திரும்பி குழந்தையைப் பார்த்தவாறே, கட்டுரைக்கான தலைப்பு கிடைத்த திருப்தியில் பெருமையாய் சத்யாவை நோக்கினேன்.
“எல்லாம் சரிதான். ஆனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவேயில்ல“ என்றாள்.
என்ன என்பதாய் அவளைப் பார்த்தேன்.
“எழுத்துக்கள்ல இருக்குற வேகம் நிறையபேருக்கு செயல்ல இல்லனு தான் தோணுது..“ என்றாள்.
எதிர்பாராமல் வந்த அவளுடைய வார்த்தைகள் கோபத்தை உண்டுபண்ணினாலும், “எதுனால அப்படி சொல்ற? கண்டிப்பா இந்த மாதிரி பெண்களுக்கு என்னாலான உதவிகளை நிச்சயம் செய்வேன். நம்பிக்கையில்லேனா விடு. அதுக்காக என் முயற்சியை கேலி பண்ணாத“ என்றேன் ஆத்திரத்துடன்.
“இருக்கலாம். ஆனா பின்தொடர்ந்து வந்தியே தவிர, கடைசி வரைக்கும் அந்தப் பொண்ணு கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்த பையை வாங்கணும்னு தோணவேயில்லயே உனக்கு“ என்றபடி ஏளனமாய் என்னைப் பார்த்தாள்.
“அது வந்து.. அது..“
என்ன சொல்வதென்று தெரியவில்லை. சத்யா ஏதும் சொல்லாமல்  உள்ளே சென்றுவிட்டாள்.
யோசித்தவாறு இரு உள்ளங்கைகளையும் முகத்திற்குமுன் விரித்துப் பார்த்தேன். நிஜம் தான். வர்ணித்தேனே தவிர வேறொன்றும் செய்திடவில்லை நான்.
குழந்தையையும் பையையும் தூக்கிச்சென்ற அப்பெண்ணை திரும்பிப் பார்த்தேன். மீண்டுமொருமுறை என்னைப் பார்த்துச் சிரித்தது அந்தக் குழந்தை.

.

Tuesday, 7 January 2014

மரம்.. பறவை.. நான்.. நீங்கள்..!


ஏதாவது கதை சொல்லேன்
எனும்போதெல்லாம்
ஏனோ உடன்வந்தமர்கிறது
இயல்பு தொலைத்த பெருங்கதையொன்று..
எனக்கான கதைகளில் வழக்கமாய்
அதனதன் இயல்பிலிருக்கவே முனைகின்றன
அத்தனையும்..
மரம் மரமாக..
பறவை பறவையாக..
நான் நானாக..
பின் நீங்களும்.. என
இயல்பிலிருப்பதாய்
ஒரு கதை சொல்லத் துவங்குகிறேன் நான்..!

.
Related Posts Plugin for WordPress, Blogger...