Friday, 28 August 2015

தூரங்கள் எனும் தொலைவுகள்..

மன அழுத்தம் கொடுக்கும் வேலைப்பளு.. உறவினர்கள்.. பண்டிகைகள்.. டென்சன்கள்.. கமிட்மென்ட்கள்.. என எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, எதைப் பற்றியும் யோசிக்காமல், நினைத்த மாத்திரத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் எத்தனை பேருக்கு வாய்க்கும்? போய்ச் சேருகிற இடம் பற்றி எந்தவொரு கவலையுமின்றி, சாலைகளையும் மரங்களையும் அந்தந்த இடத்திற்கான இயற்கை சூழலையும் மட்டுமே ரசித்து அனுபவிக்கவென just like that கிளம்புவதென்பது, குறிப்பாய் மொபைல்களே இல்லாத ஒரு பயணம் சாத்தியப்படுமா நமக்கு?!! its absolutely not possible.
ஒருவேளை, கையில் பணமில்லாத சமயம் இம்மாதிரியான பயணங்கள் நமக்கு வாய்க்கலாம். ஏதோ ஒரு விரக்தியில் எங்கேயாவது சற்று நடந்துவிட்டு வரலாமென கிளம்பும் தருணங்கள், யோசிக்க ஆயிரமிருந்தும் எதையுமே யோசிக்கவிடாத ஒரு வெற்றிடத்தை நமக்காக ஏற்படுத்தித் தருகின்றன. எப்படி இவ்வளவு தூரம் நடந்துவந்தோம்? அந்த மாடிப்படி வளைவை எப்போது கடந்தோம்? என்பது கூட ஞாபகமில்லாத அளவிற்கான வெறுமைகள் பெரும்பாலும் நம்மைக் கடத்திச் செல்கின்றன.
எதையுமே யோசிக்காமல், அந்நேர மனமாறுதலுக்காக மட்டுமேயென சிம்மக்கல் தொடங்கி  மாட்டுத்தாவணி வரை நடந்தே சென்ற நாட்கள் இருக்கின்றன. ஆனால் வழி நெடுக எதை ரசித்தேன் என்று யோசித்தால் விடை பூஜ்ஜியம் தான். திண்டுக்கல் மலைக்கோட்டை உச்சியில் மேகங்களை வேடிக்கை பார்க்கவென நான் தேர்ந்தெடுத்த பாறையும், திருச்சி வழியிலிருக்கும் சிவன்கோவில் மண்டபத் தூணில் கன்னம் வைத்து உணர்ந்த அந்த ஜில் தன்மையும் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன. ஆயுளுக்கும் நினைத்துச் சிலிர்க்கும் அம்மாதிரியான தருணங்களை, மீண்டும் சந்திப்பதற்கு வெகுநேரமாகிவிடப் போவதில்லைதான். ஆனால் பட்டாம்பூச்சியிலிருந்து மீண்டும் கூட்டுப்புழுவாக மாறும் இவ்வியந்திரத்தனம் அதற்கான நேரங்களை எப்போதும் திருப்பித் தருவதில்லை.
நினைத்த மாத்திரத்தில் நனையும் மழையும், நினைத்த மாத்திரத்தில் நமக்கே நமக்கென சந்தோசமாய் கிளம்பும் பயணங்களும் வரம்.

.

Thursday, 27 August 2015

நான், நீங்கள், அவர்கள்..!

குஷி திரைப்படம் வெளியான தருணம் அது. தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பும் காட்சிகள் ஸ்வாரஸ்யமாய் இருக்கும். ஒரு சாயந்திர வேலையில் அம்மா, அப்பா, மாமா சகிதம் வரவேற்பறையில் பார்த்துக்கொண்டிருந்த காட்சி அது. விஜய் தொலைபேசியில் தன் அம்மாவிடம் ஐ லவ் யூசொல்லிக்கொண்டிருப்பார். நான் வெகு சாதாரணமாய் மாமாவின் பக்கம் திரும்பி விஜய் மாதிரி நீங்க உங்க அம்மாகிட்ட ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களா மாமா?“ என்றேன். அதற்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று இப்போதும் எனக்கு நினைவில்லை. மாறாக அடுப்படியில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பாட்டியின் (மாமாவின் அம்மா) அழுகைச் சத்தம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
என்ன ஏதேன எங்களுக்குப் புரியும் முன்னமே விருவிருவென வெளியே வந்தவள் எத்தாத்தன்டி வார்த்தை சொன்னா கேட்டியா? இதையெல்லாம் கேட்டுகிட்டு நா உயிரோட இருக்கணுமா?” என்று கத்த ஆரம்பித்தாள். நான் திரும்பவும் அதையே சொன்னேன். ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களானு தானே கேட்டேன். வேற என்ன தப்பா கேட்டேன்?“. மறுபடியும் ஆங்காரமாய் கத்த ஆரம்பித்தவளை அன்று முழுவதும் ஆளாளுக்கு சமாதானம் செய்து கொண்டிருந்தனர். அவளுக்குப் புரியல.. சின்னப்பொண்ணு தானே. விடுங்கம்மாஎன்று அம்மா சொன்னதன் காரணம் அப்போது எனக்குப் புரியவேயில்லை.
இதற்கு முன் ஒரு பதிவில் எழுதிய ஞாபகம், கணவன் / மனைவி கூட ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ சொல்லிக்கொள்வதில்லை என. தன் அன்பை வெளிப்படுத்த லவ் யூஎன்ற வார்த்தை போதுமாயிருக்கிறது சிலருக்கு. ஆனால் அதையும் இன்னாரிடம் தான் கூற வேண்டுமென தனக்குத் தானே வரையறுத்து வைத்துள்ளார்கள்.
வைரமுத்துவை மிகப் பிடித்த நண்பருக்கு அவர் பற்றிய உரையாடல் வீடியோவை வாட்சப்பில் பகிர்ந்தபோது, பதிலுக்கு உணர்ச்சிவசமாய் நண்பர் அனுப்பிய லவ் யூ இந்திராவுக்கு சந்தோசம் தவிர வேறு என்ன அர்த்தம் இருந்துவிடப் போகிறது? ஒரு சின்ன ஸ்மைலியுடனான நன்றி அந்நட்பை இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லுமே தவிர நிச்சயம் படுக்கைக்கு அல்ல.
நாம் வெகுசாதாரணமாய் எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் இன்னொருவருக்கு அதிமுக்கியமாய் தோன்றலாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்து கடந்து செல்லலாமேயொழிய கோபப்பட்டு காயப்படுத்துவது அநாவசியம். என்ன இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்காங்க?? நீ கோபப்படாம எடுத்துச் சொல்லி கிண்டல் பண்ணிகிட்டு இருக்க..?” என்ற கேள்விக்கு எதுக்கு கோபப்படணும்? தன்னால புரிஞ்சுகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. ஃப்ரீயா விடுஎன்ற என் பதில் எப்போதும் தயாராய் இருக்கும். பாலச்சந்தர் பட ஹீரோயின்கள் போல தன்னைச் சுற்றி நெருப்புவளையத்தை ப்ரயோகித்துக்கொண்டே இருப்பது சாத்தியமில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் அதிர்ச்சியடைந்து ஒப்பாரி வைக்காத திடம் வாய்த்திருக்கிறது.
உணர்ச்சி வசத்தில் வெளிப்படும் சின்னச்சின்ன வார்த்தைகளை வைத்து உறவுகளையோ நட்பையோ எடைபோடாதீர்கள். அவ்வார்த்தைகளுக்கென நீங்கள் வரையறுத்து வைத்திருக்கும் அர்த்தங்களை அவர்கள் அறிந்திடாமல் கூட இருக்கலாம்.
லவ் யூ மச்சீஸ்.. 
.


உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. கேட்கலாமா?


உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. கேட்கலாமா?
துணையை இழந்து தனியே வாழும் ஒரு பெண்ணை உங்கள் வாழ்வின் Companionனாக ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?”
ஆம் எனில் இன்னொரு கேள்வி..
காதலை அல்லது கணவனை இழந்து தனியே போராடும் உங்கள் மகளோ சகோதரியோ.. அல்லது தோழியோ இருப்பின் அவர்களுக்கென இன்னொரு வாழ்வை அமைத்துத் தர முயற்சிப்பீர்களா?”
ஆம் எனில் உங்களுக்கான என் கடைசி கேள்வி..
உங்கள் அம்மா அல்லது அப்பா, அதே சூழ்நிலையில் உங்கள் கண்முன் தனியே வாழ்ந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு இன்னொரு Companion தேவை என்பதை அட்லீஸ்ட் உணர்ந்தாவது இருக்கிறீர்களா??”
இக்கேள்விக்கு பெரும்பாலும் நீங்கள் புருவம் சுளிக்கலாம் அல்லது மௌனமாயிருக்கலாம். இதற்கு பெரும்பாலான.. அல்லது ஒட்டுமொத்த பதிலும் இல்லைஎன்பது தான் நிதர்சனம்.
ஒரு முறை அப்பாவின் காதல்என்ற குறும்படத்தை தற்செயலாக காண நேர்ந்தது. மனைவியின் முன்னாள் காதலன் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்ததும், இறுதி மரியாதை செலுத்த அவளை அழைத்துச் செல்லும் கணவனின் கதாப்பாத்திரத்தை, அவர்களுடைய மகன் வாயிலாக சொல்லும் குறும்படம் அது. சுமாரான நடிப்பு என்றாலும் கதைக்கரு மிகவும் அழுத்தமானது. இதில் அப்பாவின் காதல் என்ற தலைப்பு தான் Highlight.
இன்றைய காலகட்டத்தில் ‘Ex’ காதல்களைப் புரிந்துகொள்ளும் தம்பதிகள் அதிகம். ஆனால் இப்பதிவில் முன்வைக்கப்படும் சந்தேகம் அது சார்ந்ததல்ல. ஒருவேளை அந்த மகன் கதாப்பாத்திரத்தில் நம்மை நிறுத்திப் பார்ப்போமெனில் நமது நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்? ஒரு மகனாய், மகளாய் நம் அம்மாவின் இன்னொரு காதலை எப்படி எடுத்துக்கொண்டிருப்போம்?
பொதுவாக, அப்பாவைக்கூட நாம் கண்டுகொள்வதில்லை, அவருக்கு எத்தனை காதல் வேண்டுமனாலும் இருந்திருக்கலாம். எத்தனை துணையை வேண்டுமானாலும் நிர்ணயித்துக் கொள்ளலாம். நான் என் அப்பாவுடன் பேசுவதில்லைஎன்ற ஒற்றை பதிலில் நம் கோபத்தை வெளிப்படுத்தி நமக்கான நியாயத்தை புதுப்பித்துக் கொள்கிறோம் தானே!
ஆனால் நம் அம்மா..? அப்பா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரையே உருகி உருகி காதலிப்பவள், குடும்பத்தையே உலகமாய் கருதுபவள், அழும்போது ஆறுதல் சொல்பவள், பிள்ளைகளுடன் ஃப்ரெண்ட்லியாக அரட்டை அடிப்பவள். வேறென்ன? அதிலும் அப்பா இல்லாத வீடு எனில், தனியே போராடி குழந்தைகளை ஆளாக்கும் கதாநாயகி. தியாகச் சுடர். தைரியமான பெண்மணி. ஒரு அம்மாவிற்கென நாம் வகுத்து வைத்திருக்கும் Graph இதுதான். அம்மா என்பவள் எப்போதும் வரையறைக்குட்பட்ட கலாச்சார கட்டுப்பாட்டுக் குப்பைகள் நிறைந்தவளாகத்தான் இருக்கவேண்டுமென நாமாய் நிர்ணயித்துக்கொண்டுள்ளோம். இது எத்தனை அபத்தமானது!
‘M.குமரன் S/o மஹாலஷ்மிதிரைப்படத்தைப் பார்த்து நம்மில் எத்தனை பேர் அம்மா-மகன் உறவைப் பற்றி சிலாகித்திருப்போம்? நதியா கதாப்பாத்திரம் எத்தனை பேருக்கு தன் அம்மாவை நினைவுபடுத்தியிருக்கிறது? “ஒரு பொம்பளை.. தனியா நின்னு எல்லாத்தையும் சமாளிச்சு பிள்ளைகளையும் ஆளாக்கியிருக்குறாஎன்ற அவளைப் பற்றிய கைதட்டல்களுக்கு பிள்ளைகளாக எத்தனை பெருமையுடன் நம் காலரைத் தூக்கிவிட்டிருப்போம்?
எல்லாம் சரி தான். ஆனால் இங்கு தனியே வாழும் தன் தாய் அல்லது தந்தைக்கு இன்னொரு வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர தயாராய் இருப்பவர்கள் அல்லது அவர்களாக அறிமுகப்படுத்தும் இன்னொரு துணையை ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகள் எத்தனை பேர்? சமுதாயத்தை விட்டுத் தள்ளுங்கள். கணவனை இழந்த தாய், நட்பாய்கூட ஒரு ஆணிடம் பேசுவதை எந்த பிள்ளைகளும் (பெரும்பாலும்) விரும்புவதில்லை. Companionship, தன் மீதி வாழ்நாட்களை பகிர்ந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படும் துணை. அது sexual relationship என்பதாகவும் இருக்கலாம். அந்த இன்னொரு relationship, தன் தாய் / தந்தைக்கு எந்த அளவிற்கு தேவை என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவப்பட்ட மகன் / மகள் எத்தனைபேர்?
புரிதலில் பிடித்திருந்தாலும் தன் பிள்ளைகளுக்காக, அவர்கள் அந்த உறவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ளமாட்டார்களோ என்ற பயத்தினாலேயே நிறைய பெண்கள் தனக்கென புதிதாக வரும் இன்னொரு துணையை புறக்கணிக்கிறார்கள்.
கணவனை இழந்த மகளையும் சகோதரியையும் பார்த்து பொங்கியெழும் போராளிகள் கூட, சிறுவயதிலேயே கணவனை இழந்து தனியே வாழ்ந்துவரும் தன் தாய் பற்றி எப்போதும் யோசிப்பதில்லை. தன் தாயின் நிலையை நன்கு புரிந்தவன் ஆதலால் அதுபோன்ற ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகிறானே தவிர, தன் தாய் கடைசிவரை அதே மனோரமா ஆச்சியாகத்தான் இருக்க வேண்டுமென நிர்ணயிக்கின்றான்.
இதைக் கேட்ட சில தோழிகளும் கூட, “அம்மாவுக்கு வரன்கள் தேவை என்று விளம்பரம் தரச்சொல்றீங்களா? ப்ராக்டிக்கலா முடியாதே இந்திரா. அதுவுமில்லாம அவள் அந்தக்காலத்துப் பெண்ணாச்சே. நமக்குப் புரியிறது இருக்கட்டும். முதல்ல அவளுக்கே இதுமாதிரியான பேச்சுக்கள் புரியுமா?” என்று முகம் சுளிப்பதைப் பார்த்திருக்கிறேன். என் கேள்வியின் உள்ளர்த்தம் அதுவல்ல.
நேத்து வீட்டுக்கு வந்தார்ல ஒரு Uncle.. அவரைப் பத்தி நீ என்ன நினைக்கிற?“ என்று தன் பிள்ளையிடம் தயக்கமாய், ஆர்வமாய் கேட்கும் அம்மாக்களின் கேள்விகளை புரிந்துகொள்வதற்கும்,. அடுத்தமுறை அவரைபார்க்கும்போதெல்லாம் அனிச்சையாய் முகம் திருப்பிக்கொள்ளாமல் இருப்பதற்கும், “அவர்எண் கொண்ட தொலைபேசி அழைப்பைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் வெறுப்பை தூக்கி எறிவதற்கும் நாம் கடக்க வேண்டிய தூரம் எப்போதும் தொலைவாகவே இருக்கிறது.
வாழ்வின் மீதி நாட்களை பகிர்ந்துகொள்ள தனக்கென ஒரு நட்பு எல்லோருக்கும் அவசியம் தேவை. அதில் செக்ஸ் என்பது அவரவர் விருப்பம். Teenage பையனைப் பொறுத்தவரை, ‘தன் அம்மா யாரோ ஒரு அம்பளையிடம் பேசுறா.. ஏதோ தப்பான உறவுஎன்ற அருவறுப்பு தான் தோன்றுமேயொழிய நிச்சயம் அதற்கான புரிதல் ஏற்படுவதில்லை. நாற்பத்தி ஐந்து வயதுத் தாயின் தனிமையை இருபத்தி ஐந்து வயதிலும் கூட பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதுதான் so called ‘the ugly truth’.
தன் தவறை உணர்ந்து, சாரதா டீச்சரைத் தேடச் சொல்லும் இயக்குநர் வசந்தின் அனுகதாப்பாத்திரம் எத்தனை வீடுகளில் இருக்கக்கூடும்? இன்னொரு உறவை அவளுக்கு ஏற்படுத்தித் தரவில்லையெனினும், அவளாய் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய உறவை புரிந்து கொள்ள நமக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகும்?
அப்பாவின் replacement சாத்தியப்படாவிட்டாலும், நம் அம்மாவின் நல்லதொரு நண்பனாக, அவளின் துணையாக, அவளாய் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் நாம் தடுக்காமல் புரிந்துகொண்டாலே போதும்.
உங்கள் முற்போக்கு சிந்தனையை முதலில் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள். அவசியப்படாவிட்டாலும் உங்கள் அம்மாவிடம் இப்பதிவு பற்றி பேசவாவது முயற்சியுங்களேன்.
.

Miss you Sweetheart..


பம்பாய்திரைப்படம் வெளியான நேரம் அது. மணிரத்தினம், ஏ.ஆர்.ரஹ்மான் என அத்தனைபேரையும் ஓரங்கட்டிவிட்டு, ஒரு நடிகன் இத்தனை வசீகரமாய் இருக்க முடியுமா என்று வாய்பிளந்து ரசிக்க ஆரம்பித்த காலகட்டம். என்னதான் ரோஜா’“வில் பார்த்துப் பார்த்து ரசித்திருந்தாலும் ஆதர்ஷ நாயகனாக்கியது பம்பாய் படத்திலிருந்து தான். வெளிர் நிறம், நெற்றிப் புருவத்தில் சிவப்பு மச்சம், கொழுக்மொழுக் கன்னங்கள், சின்னதாய் உதட்டோரப் புன்னகை, மார்பு ரோமம், அலட்டிக்கொள்ளாத நடிப்பு..என அரவிந்த்சாமியை ரொம்பவே பிடித்துப்போனது. சன்-டிவியில் வரும் சூப்பர் 10 நிகழ்ச்சியில், முதல் வாரத்தில் புதுவராயிருந்து, அடுத்த வாரமே முதலிடத்தைப் பிடித்த குச்சி குச்சி ராக்கம்மாவிற்கு நடுவீட்டில் தோழிகள் சகிதம் கைதட்டி ஆரவாரம் செய்தது இன்றும் நினைவிருக்கிறது.
நடைமுறைக்கு மாறாய், ஒரு நடிகனை கொண்டாட ஆரம்பித்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் வீட்டில் கலவரமாக தொடங்கினர். எங்கே அரவிந்த்சாமியைத் தேடி சென்னைக்கு (தோழிகளுடன்) ஓடிப்போய் விடுவோமோ என்று பயந்து, மாமா, சித்தப்பா என அனைவரும் சூழ அட்வைஸ் எல்லாம் வழங்கப்பட்டது பெருங்காமெடி. அவன் கருப்பா தான் இருப்பான், எல்லாமே மேக்-அப், ரொம்ப குடிப்பானாம், நம்பியாரைவிட கெட்டவனாம், லவ் பண்ற காட்சியெல்லாம் நிஜம் கிடையாது, சுத்தி நூறு பேர் இருக்கும்போது நடிப்பாங்க.. அதெல்லாம் நிஜமில்லஇவையெல்லாம் எங்களை திருத்துவதாய் வழங்கப்பட்ட அறிவுரைகள். இவற்றை ஞாபகப்படுத்தும்போதெல்லாம் இப்போதும் அம்மா சிரிப்பதுண்டு.
வீட்டில் கொஞ்சம் பயம் ஓய்ந்திருந்த நிலையில், “இந்திராதிரைப்படம் வெளியானது. அனுஹாசனை அவர் காதலாய் வம்பிழுத்து அழவைக்கும்போதெல்லாம் அனுவுக்கு பதிலாய் நாங்களே நிற்பதாய் வெட்கப்பட்டுக்கொள்வோம். தொடத் தொட மலர்த்தென்னபாடலின் ஒரு காட்சியல் வெள்ளை டீ-சர்ட் போட்டு தன் மார்பில் கைவைத்து மனுஷன் பாடுவார். நாங்கள் டிவியை கட்டிப்பிடிக்காத குறை தான். அம்மா வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பிக்க, மறுபடியும் அட்வைஸ் மழைகள். (அந்தப் படத்தில் அனுவுக்கும் அரவிந்துக்கும் என்ன எழவு கெமிஸ்ட்ரி இருந்ததாய் நாங்கள் அத்தனை கொண்டாடினோம் என்று இப்போது யோசித்துப் பார்த்தால்... ஙே!).
அப்படி அதீதமாய் கனவு கண்டுகொண்டிருந்தபோது வெளியான தாலாட்டு”, ”என் சுவாசக் காற்றேகுறிப்பாய் ஸ்ரீதேவியின் ஜோடியாக தேவராகம்போன்ற படங்களைப் பார்த்து, நொந்து, அவரை டைவர்ஸ் செய்யுமளவிற்கு வெறுப்பு வந்துவிட்டது. கடைசியில், மின்சாரக் கனவில் பாதிரியாராய் அவர் கெவுன் அணிந்து வரும் காட்சியைப் பார்த்து, சேர்த்து வைத்த அவருடைய போட்டோக்களையெல்லாம் கிழித்துப் போட்டாயிற்று.
அதன்பிறகு மாறிக்கொண்ட ஹ்ரித்திக் ரோஷனில் ஆரம்பித்து இன்று துல்கர் சல்மான் வரையிலான வெவ்வேறு காதல்களை வீட்டில் யாரும் அந்த அளவு சீரியஸாய் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனாலும் அரவிந்த்சாமிக்கான இடத்தை இனி அவரால் கூட நிரப்ப முடியாது என்பதே ஆகச்சிறந்த வருத்தம். 
காலையில் தனி ஒருவன்பட போஸ்டர்கள் கண்ணில்பட்டதன் விளைவு இப்பதிவு. ட்ரெய்லரின் இறுதியில் Love you Sweetheart என்ற பின்னணி வசனத்திற்கு சிரித்துக்கொண்டிருக்கிறார் அரவிந்த்சாமி.
Miss you sweetheart :(

.
Related Posts Plugin for WordPress, Blogger...