Miracle in Cell No.7 - என் பார்வையில்..

குழந்தை எழுத்தாளர் (உமாநாத்) விழியன், மழலைக் கதைகளில் ஒரு முறை தன் பாரீஸ் அனுபவத்தை எழுதியிருந்தார். ஒரு இடத்தில் மரங்களுக்குப் பின்னாலிருந்து சூரியன் உதயமாகிக் கொண்டிருந்ததாம். உடனே அவர் தனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவனிடம், “இப்போது அந்த மரத்திலிருந்து சூரியன் முளைக்கும் பாரேன்என்று சொன்னாராம். அதேபோல் மரக்கூட்டத்திலிருந்து சூரியன் தோன்றவும் அவன் அதை உண்மையென ஆச்சர்யமாய் ரசித்துக்கொண்டிருந்தானாம். (அதற்குள் அவனுடைய அம்மா உண்மையை சொல்லி அக்கற்பனை உலகத்தில் கல்லெறிந்தது வேறு விஷயம்).
பேபி ஷாலினி நடித்த படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, இப்ப எப்படி இருக்காங்க இந்த அக்கா?“ என்று கேட்ட பக்கத்து வீட்டு சிறுமிகளுக்கு, நாளிதழ்களையும் டிவி சேனல்களையும் மாற்றி மாற்றி தேடிப்பார்த்து கடைசியாய் நடிகை ஷாலினியாக நான் காட்டியபோது, ஒட்டு மொத்த கூட்டமும் “ஐயோ.. இவங்க அஜித் ஆன்ட்டி“ என்று கோரஸ் பாடிய ஸ்வாரஸ்யம் ரசிக்கத்தக்கது.
குழந்தைகளுக்கான உலகில், குழந்தைகளாகவே நுழையும் திறமை பெற்ற பெரியவர்கள் அதிஷ்டசாலிகள்.
இந்தப் படமும் இரு குழந்தைகளுக்கு இடையிலான உலகம் பற்றிய கதைதான். ஆறு வயது மகளுக்கும், அதே ஆறு வயது மனநிலையில் இருக்கும் தந்தைக்கும் இடையே நிகழும் Emotional போராட்டங்கள் தான் படம். தெய்வத்திருமகள் (I am Sam) பட விக்ரம் போன்ற தகப்பன், செய்யாத தவறுக்கு தூக்கு தண்டனை பெற்று சிறைச்சாலை செல்கிறார். ஆதரவற்ற தன் மகளை நினைத்து சதா புலம்பிக்கொண்டிருக்க, Cell No.7-ல் இருக்கும் அவனுடைய சகாக்கள் யாருமறியாது குழந்தையை பார்சல் மூலம் சிறைச்சாலைக்குள் கொண்டு வருகின்றனர். அதிகாரிகளின் கண்ணில்படாமல் காட்சிக்குக் காட்சி அவளை மறைத்து வைத்து பதட்டமுடனான ஸ்வாரஸ்யத்திற்கு நம்மை ஆளாக்கியிருக்கிறார்கள். சட்டென இருவரையும் பிரித்து தூக்கு தண்டனைக்கான தேதி நிர்ணயிக்கப்படுகிறது.
கடைசி வரை, தான் சாகப்போவதை குழந்தையிடம் சொல்லாமல், விளையாடிக்கொண்டே தூக்குமேடை வரை செல்கிறார் தந்தை. அவ்வளவு நேரம் தன் துக்கத்தை வெளிக்காட்டாமல் செல்பவர், தூக்கு மேடையைப் பார்த்து பயந்து “நான் தப்பு பண்ணல.. என்னைக் காப்பாத்துங்க.. என் மகளைப் பார்க்கணும். காப்பாத்துங்க..“ என்று கதறி அழும்போது பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார். நிஜமாவே மனநலம் பாதிக்கப்பட்டவரை நடிக்க வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழும்படியான அற்புதமான நடிப்பு.
சாகப்போகும் தறுவாயில் கூட சிரித்துக்கொண்டே “நல்லா சாப்பிடு, பீன்ஸ் நிறைய சாப்பிடனும். அதுல நிறைய வைட்டமின் இருக்கு“ என்று மகளைப் பார்த்து அழுகையை மறைத்தபடியே கூறும்போது கைதட்டல் பெறுகிறார்.
உடன் சிறையிலிருக்கும் நண்பர்கள் தந்தையையும் மகளையும் காப்பாற்ற, உள்ளிருந்தபடியே ராட்சத பலூனை தயார் செய்து அவர்களை ஏற்றி பறக்கவிட, அதிகாரிகள் உட்பட அனைவருமே அவன் தப்பிக்க வேண்டும் என வெளிக்காட்டாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். பலூனிலிருந்து இருவரும் டாட்டா காட்டியபடி சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டிருக்க, தொங்கிக்கொண்டிருக்கும் கயறு சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் வேலியில் மாட்டிக்கொள்ளும். அப்போது தந்தையும் மகளும் கண்களாலேயே பேசிக்கொள்வார்கள்.
“மறந்துடாத“
“எதை அப்பா?“
“இந்த உதயத்தையும் உன் அப்பாவையும்“
மிக அற்புதமான காட்சியமைப்புகள் கொண்ட திரைக்கதை. நிச்சயம் நம்மாளும் மறக்க முடியாது.
  # Miracle in Cell No. 7 (2013) (Korean)
.

Comments