கருப்பு வெள்ளை வானவில்லாய்..!


பழங்காலப் புகைப்படமொன்று 
எதன் தேடலின் பொருட்டோ..!

மறந்துபோன முகங்களும்
மங்கிப்போன சிரிப்புமானதை
உற்றுநோக்கி உருவமறிகிறேன்.

நீண்ட குழலுடையவள் பாட்டியென்றும்
அடர்மீசைக்கு சொந்தக்காரர் தாத்தாவென்றும்
பெரிய கால்சட்டையணிந்தவர் தந்தையென்றும்
ரிப்பனுக்குமேல் பூ வைத்திருந்தவர் அத்தையென்றும்
விரல் சூப்பிக்கொண்டிருந்தவர் சித்தப்பாவென்றும்
என்னுள் நானே அனுமானிக்கிறேன்.

இன்னும் யார்யாரோ இயந்திரச் சிரிப்புடன்..
பாட்டியின் தங்கையாவோ நாத்தனாராகாவோ..!

ஆராய மனமில்லாது தூக்கியெறிந்தேன்.
எனக்கான பொருள் கிடைக்காத எரிச்சலில்..!

சிரித்தவாறே மீண்டுமொரு தேடலுக்குக் காத்திருக்கிறார்கள்
கரையான்களுக்கு மத்தியில்..
கருப்பு வெள்ளை வானவில்லாய்..!
.
.

Comments

இயந்திரச் சிரிப்புடன்...

அருமை...
அந்தக் காலச்சிரிப்பில் பயமும்,நாணமும் கலந்திருக்கும்.செயற்கையான இயந்திரச்சிரிப்பு இந்த சந்ததிக்குச் சொந்தமானது.
Anonymous said…
கருப்பு வெள்ளை வானவில் - எதிர்மறை இங்கே கவர்கிறது.
Ramani S said…
தலைப்பும் கவிதையின் கருவும்
சொல்லிச் சென்றவிதமும் முடிவு
வரிகளும் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
அருமையான கவிதை