“அவன்-அது=அவள்“ - என் பார்வையில்..

மாற்றுப் பாலினத்தவர்களின் வாழ்வை வெட்டவெளிச்சமாய் தன் எழுத்துக்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியதற்கே பாலபாரதியை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
“அவன்“ மெதுமெதுவாய் தன் உடல் மாற்றங்களை உணர்ந்து, குடும்பத்திலிருந்து பிரிந்துவந்து, தன்போல் இருப்பவர்களுடன் சேர்ந்து, பலவித கஷ்டங்களை அனுபவித்து, ஆணுறுப்பை இழந்து கடைசியில் “அவள்“ என மாறுவதாக கதை பயணிக்கிறது. திருநங்கைகளுக்கே உரிய அவமானங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கஷ்டங்கள், சலிப்புகள்.. என ஒவ்வொரு உணர்வுகளையும் அப்படியே எழுத்தின் வடிவாய் தந்திருக்கிறார் எழுத்தாளர்.
கதையில், மூன்று சம்பவங்கள் என்னை வெகுவாய் பாதித்தது. கூவாகத்துக்குப் போகிற வழியில் நான்கு பேர் ஆசணவாய் மூலம் அவளைக் கற்பழிக்கும் காட்சி, காவல் நிலையத்தில் எத்தவறுமே செய்யாமல் கைது செய்யப்பட்டு ஆடைகள் உருவப்பட்டு அடி வாங்கும் காட்சி, இறுதியாய் ஆணுறுப்பை கத்தியால் அறுக்கும்போது அவள் அலறும் காட்சி... எழுத்தாளரைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட, இம்மாதிரியான மாற்றுப் பாலினத்தவர்களின் வாழ்க்கையை நினைத்து வேதனைப்படவே தோன்றுகிறது.
நாயகி ஒரு திருநங்கை எனத் தெரிந்தும் அவளைக் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் “அன்பு“ கதாப்பாத்திரத்தின் மேல் மதிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவனும் சராசரியாய், குடித்துவிட்டு அவளைப் பிச்சை கேட்க அனுப்புவதாகக் காட்டியிருப்பது உச்சகட்ட வேதனை. கடைசி வரை அவளுக்கு வேலை கிடைக்காமல் பிச்சை எடுப்பதாகவே சொல்லியிருப்பது கூடுதல் வலி.
திருநங்கைகளின் வாழ்வு பற்றி எழுதிய கையோடு, கதையின் முடிவாய் அவர்கள் வாழ்வில் ஏதேனும் மாறுதல்களோ அல்லது முன்னேற்றமோ ஏற்படுவதாய் காட்டியிருக்கலாம். தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெயிப்பதாய் காட்டியிருப்பின், படிக்கும் அவள்போன்றோருக்கு கொஞ்சமேனும் வாழ்வு பற்றிய நம்பிக்கை ஏற்படும். குடிகாரன், செக்ஸ் வெறியன், சுயநலவாதி.. ஆனாலும் பரவாயில்லை.. கணவனோடே காலம் தள்ளுகிறேன் என அழுதுகொண்டே நாயகி செல்வதாய் முடித்தவிதம் கொஞ்சம் நெருடல்.
திருநங்கை என்றாலே பாலியல் தொழிலாளி என்ற கேவலமான சிந்தனை உள்ளவர்களில் ஒரு சிலராவது தங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்ள இக்கதை நிச்சயம் உதவும். உடல்மொழியாலோ, எண்கள் வைத்தோ திருநங்கைகளை கேலி பேசும் நல்ல்ல்ல உள்ளங்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
“அவன்-அது=அவள்“
யெஸ்.பாலபாரதி, தோழமை வெளியீடு

.

Comments

கருப்பொருளிலிருந்து சொல்லிய விதம் வரைக்கும் மிகவே வித்தியாசமான புத்தகத்தை அறிமுகம் செஞ்சிருக்கீங்கன்னு புரியுது இந்திரா. மிக்க நன்றி. அவசியம் வாங்கிப் படிக்கிறேன் நான்.
அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் சொல்லி மாளாது... ஆனால் அவர்களிடமிருக்கும் மன உறுதி யாருக்கும் இருப்பதில்லை...