Wednesday, 23 January 2013

ஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்..
ஆர்தர் கோனான் டாயில் என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் முதலாவது A Study in Scarlet. அது “ஒரு மோதிரம் இரு கொலைகள்“ என தமிழாக்கம் செய்யப்பட்டது.
டாக்டர் ஆர்தர் கோனன் டாயில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம் தான் ஷெர்லாக் ஹோம்ஸ். அந்தக் கதாப்பாத்திரத்தை, துப்பறியும் கலையில் கை தேர்ந்தவராக சித்தரித்திருப்பார்.  நுட்பமான அறிவாற்றல் கொண்டவராகவும், எப்படிப்பட்ட சிக்கலான வழக்குகளையும் திறம்பட ஆராய்ந்து உண்மையை கண்டறியும் வல்லுனராகவும் இந்தப் பாத்திரத்தை அவர் படைத்திருப்பார். இக்கதை முழுவதும், ஷெர்லாக் ஹோம்ஸின் அறைத்தோழர் டாக்டர் ஜான் வாட்சனின் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கும்.
துப்பறியும் தொழிலில் ஈடுபடாத, ஆனால் அதில் ஆர்வமுள்ள, யூகத்தில் தேர்ந்தவராக ஹோம்ஸ்... அருமையான புத்திசாலித்தனம். அவர் நடவடிக்கைகள் மீதான நண்பர் வாட்சனின் ஆச்சர்யம், படிக்கும் நமக்கும் தொற்றிக்கொள்வதில் ஆச்சர்யமேயில்லை. ரத்தக்கறையை அடையாளம் காணும் கலவையை கண்டுபிடிப்பதில் ஆரம்பித்து, இரட்டைக் கொலையை வெகு சாதாரணமாய் துப்பறிந்து முடிவு சொல்லுவது வரை ஹோம்ஸ் கலக்கியிருக்கிறார்.
ஜன்னல் வழியே சாலையில் நடக்கும் ஒருவரை, கப்பல்படை மேஜர் என்றும் அதற்கான அடையாளங்களையும் தெள்ளத்தெளிவாக விளக்குவதும் யதார்த்தம். நமக்கே “அட ஆமாம்ல“ என்று கொஞ்சம் தாமதமாகத் தோன்றும். கொலையாளியின் பூட்ஸ் அடையாளத்தில் ஆரம்பித்து, அடுத்து என்ன நடக்கும் என்பதை சரியாகக் கணிக்கும் அவருடைய சரியான யூகம் பாராட்டுக்குரியது.
பாதிக் கதையிலேயே திடீரென குதிரைக்காரனின் கையில் விலங்கு மாட்டி இவன் தான் ஜெபர்சன் ஹோப் - கொலையாளி என்று ஹோம்ஸ் சொன்னதும் சுத்தமாகப் புரியவில்லை. ஆனால் அவனுக்கொரு ஃப்ளாஷ்பேக் கதை சொல்லி பிரித்துக்காட்டப்பட்டிருக்கிறது. (இது கதையில் கொஞ்சம் தொய்வான பகுதி.. மார்மோன் குழுவினரின் சதிகளையும் அதற்குள் வரும் காதல் கதையையும் கொஞ்சம் சுத்த்த்திவளைச்சு எழுதியிருக்கார்).
கதையில் எனக்குப் பிடித்த பகுதியெனில், கொலை செய்யப்பட்ட விதத்தினை, கொலை நடந்த அறையை சுற்றி வந்தபடியும், செத்தவரின் உதட்டினை முகர்ந்து பார்த்தபடியும் ஹோம்ஸ் விவரிக்கும் பகுதியைக் குறிப்பிடுவேன். கொலையாளி, “RACHE  என்று ஜெர்மானிய வார்த்தையை ரத்தத்தில் எழுதியிருப்பார். அதற்கு “பழிவாங்கல் என்று அர்த்தம்.. அதனால் அவன் ஜெர்மானியன்“ என்று மற்ற போலீசார் கூறும்போது, அந்த ஒவ்வொரு எழுத்துக்களிலும் உள்ள வித்தியாசங்கள் பற்றி அசால்ட்டாக கூறுவது சூப்பர்.
கொலையாளியின் மூக்கிலிருந்து ரத்தம் வந்தது முதல், அவனுடைய உயரம்.. நிறம் என்று சரியாக கணிப்பது, பழங்கால் பீர்பால் கதைகளை நினைவுபடுத்தியது.
ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டதில் Robert Downey Jr, Jude Law  நடித்திருப்பார்கள். (நான் இன்னும் படம் பார்க்கல.. பார்க்கணும்.)
துப்பறியும் கதைகளில் ஆர்வமுள்ளவர்கள் வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் படிக்கவேண்டியதொரு புத்தகம்.
.
.

3 comments:

சங்கவி said...

Nice One...

பால கணேஷ் said...

பத்ரி சேஷாத்ரி அழகாக மொழி பெயர்த்திருப்பார். இரண்டாண்டுகளுக்கு முன் நான் படித்து மிக ரசித்த புத்தகம். கதாசிரியரை விஞ்சி புகழ் பெற்ற பாத்திரமாயிறறே ஷெர்லக் ஹோம்ஸ். நீங்களும் படித்து ரசித்து எழுதியிருப்பதைப் படித்ததில் மிக மகிழ்ச்சி. அருமை.

s suresh said...

ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் படிக்க ஆவல்தான்! வாய்ப்பும் நேரமும் கிடைக்கும் போது வாசிக்கிறேன்! நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...