The LunchBox - என் பார்வையில்..

உங்களைச் சுற்றி யார் யாரோ இருந்தாலும் ஏதோ ஒரு தனிமை உங்களை சூழ்வதுபோல யோசித்திருக்கிறீர்களா? நம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள, நம்மை நேசிக்க, நமக்கே நமக்கென யாருமே இல்லையென்ற சூன்யத்தை உணர்ந்திருக்கிறீர்களா? சட்டென உங்களுக்காய், உங்களைப் புரிந்துகொண்ட ஒரு நட்பு கிடைத்தால் சந்தோசப்படுவீர்கள் தானே! அப்படியெனில் The Lunchbox திரைப்படத்தின் இரு மையக் கதாப்பாத்திரங்களையும் நிச்சயம் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு பக்கம், பணியிலிருந்து ஓய்வு பெறப்போகும் நாட்களை எண்ணிக்கொண்டு தனக்கென தனிமையை உருவாக்கிக்கொண்டிருக்கும் Saajan கதாப்பாத்திரம். இன்னொரு புறம், கணவனின் அன்பு கிடைக்காமல் சதா அடுப்பங்கறையிலேயே காலத்தைக் கழிக்கும் Ila கதாப்பாத்திரம். வெவ்வேறு உலகம் சார்ந்த இவர்களை இணைக்கும் இரண்டு விசயங்கள்.. ஒன்று தனிமை, மற்றொன்று Lunch box.
தன் கணவனுக்கென அனுப்பிய மதிய சாப்பாடு தவறுதலாக இன்னொரு நபருக்கு கிடைப்பதில் ஆரம்பிக்கும் இவர்களது அறிமுகம், பின் டிபன் பாக்சிஸ் வைத்து அனுப்பப்படும் நான்கு வரிக் கடிதத்தில் தொடர்கிறது. தன் கடந்த காலங்கள், எதிர்பார்ப்புகள்.. என ஒருவருக்கொருவர் ஆதங்கப்படும் காட்சிகள் அழுத்தமானவை. இதுபோன்று மிகச்சொற்ப கதாப்பாத்திரங்களை மட்டுமே மையமாய் வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் வசனங்கள் மிக முக்கியமானவை.
தன் தந்தை இறந்த வீட்டில் தாய்க்கு ஆறுதல் சொல்லும் நாயகியிடம்
உன் அண்ணன் இறந்தப்ப Medator மாடல் ஆம்புலன்ஸ் வந்துச்சு, சிகப்பு லைட் வச்சுகிட்டு. இப்ப என்ன கலர்ல வரும்?“
உங்கப்பா இறந்துட்டா நா என்ன பண்ணுவேனோனு பயந்துகிட்டு இருந்தேன். ஆனா பாரு.. இப்ப எனக்கு பசிக்குதுஎன்பார்
ஒரு குடும்பத்தலைவி சதா அடுப்பங்கறையிலேயே காலத்தை கழிக்கும் வலியை மிக நேர்த்தியாய் எடுத்துரைக்கும் வார்த்தைகள் இவை.
என் தாத்தா உபயோகிச்ச பாத்ரூம்ல அவர் வாசனை வரும். இப்ப அதே வாசனை திரும்ப வருது. நானும் தாத்தாவாயிட்டேன்என்று தன் முதுமையை நினைத்து எழுதும் கடிதங்கள் அக்கதாப்பாத்திரத்தின் வெறுமையை காட்டுகின்றன. என் மனைவி இறந்து பல வருஷமாச்சு. ஆனா எனக்கு ஒரு தோழி இருக்காஎன சந்தோசத்தை வெளிக்காட்டாமல் சொல்வது போல, இன்னும் நிறைய காட்சிகளில் முகபாவணைகளில் அசத்துகிறார் Irrfan.
பின்னணி இசையை 99 சதவீதம் தவிர்த்துவிட்டு கதாப்பாத்திரங்களைப் பேசவிட்டிருப்பது.., Ila-வின் மாடியில் குடியிருக்கும் பெண்மணியின் முகம் காட்டாமலேயே பால்கனியின் குரலாக உபயோகித்திருப்பது.. Irrfan-ன் அசிஸ்டன்டாக வரும் Nawazuddin வழக்கம்போலவே தன் பொறுப்புணர்ந்து அளவாய் நடித்திருப்பது.. என பல விஷயங்கள் குறிப்பிடத்தக்கது.
இறுதியில் என்னவாகும் என்ற முடிவை பார்வையாளர்களிடமே ஒப்படைப்பதில் இருக்கிறது இயக்குனரின் சாமர்த்தியம் .
Can you fall in love with someone you’ve never met? 

 # The Lunchbox (Hindi)

Comments

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..