காகத்தின் விடுமுறைக்காக..

காகம் வடை தூக்கிச் சென்றதாம்.. கதை கேட்டபடி சாதம் உண்டேன்.. ஒரு நாளில்.. கிறுக்கலாக வரைந்த படத்தில் கருமை கொடுத்து காகம் என்றேன்.. இன்னொரு நாளில்.. தொலைந்த பொருள் எங்கே ? எனக் கேட்டவரிடம் “ காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சு “ என்று அழகு காட்டினேன்.. மற்றொரு நாளில்.. காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்களாம்.. கொணரும் தின்பண்டத்திற்காக எதிர்நோக்கி இருந்தேன்.. மேலும் ஒரு நாளில்.. இறந்துபோன தாத்தா மாறுவேடத்தில் வருவாரென அப்பா கூறியதை நம்பி ஓட்டின் மீது படையல் வைத்தேன்.. வேறொரு நாளில்.. பட்டாசுக்கு பயந்து பறந்தோடும் காகங்களை வேடிக்கையாய்ப் பார்த்தேன்.. பிரிதொரு நாளில்.. மின்சாரக் கம்பத்தில் மடிந்த ஒன்றைச் சுற்றி மற்றவை கரைந்தபோது வெறுமையாய்ப் பார்த்தேன்.. சுடுதலாக ஒரு நாளில்.. வாட்டிய பசியும் வறண்டு போன இதயமுமாய் அண்டைவீட்டு சுவற்றில் வைக்கப்பட்ட பித்ருக்களின் உணவருகே காத்திருக்கிறேன் காகத்தின் விடுமுறைக்காக.. இன்றெனும் ஒரு நாளில்.. . .