Posts

Showing posts from August, 2013

முத்தங்கள் எனும் முழுமைகள்..

Image
தந்தையின் பிணைப்பைச் சொல்லும் உச்சிமுகர்ந்த முத்தங்கள்..! தாயின் நெருக்கத்தை சொல்லும் கன்னம் கொஞ்சும் முத்தங்கள்..! தூரங்களின் துயர் துடைக்கும் தொலைபேசி முத்தங்கள்..! காற்றோடு நேசங்களும் கலந்துவிடும் பறக்கும் முத்தங்கள்..! காதலின் கிறக்கங்கள் பறைசாற்றும் காதோர வெப்ப முத்தங்கள்..! ஏக்கங்களும் ஏகாந்தங்களும் கலந்தவை இதழ் கவ்வும் முத்தங்கள்..! வரையறைகள் ஏதுமில்லாதவை மோனநிலை முத்தங்கள்..! உறவுகளின் பிணைப்பை உறுதிசெய்யும் உள்ளுணர்வாய் எப்போதும் முத்தங்கள்..! . .

சதை தேடும் சாக்கடைகள்..

Image
பேருந்துகளிலும் பொது இடங்களிலும் பார்வையாலேயே புணர்கிறாய் யாரோ ஒருத்தியை..! அலுவலக விபரங்கள் சொல்வதாய் இரட்டை அர்த்த மழை பொழிகிறாய்..! யாரையோ கற்பனையாய் துகிலுரித்து சந்தோசப்படுகிறாய்..! எதிர்வருபவளின் ஸ்தன மேடுகளையும் இடுப்பு வளைவுகளையும் கேலி செய்தபடி ஏக்கம் தீர்க்கிறாய்..! யதேச்சையாய் இடிப்பதாய் , தவறுதலாய் தொடுவதாய் சாமர்த்தியமாய் நகர்ந்து செல்கிறாய்...! இறுதியாய்   அம்மாவுக்குப் புடவையும் சகோதரிக்குப் பூவும் வாங்கியபடி வேசைத்தனங்களின் ஒட்டுமொத்த வடிவமாய்..!! . .

ஒரு மழைநாளில்..

Image
ஒரு மழைநாளில் சாரலின்வழி தீண்டிப்போனது உன் ஞாபகங்கள். துண்டித்த இணைப்பின்கீழ் வெகுநேர அழுகைகளாய் நீந்திச்செல்கிறது சில கோபங்கள். தவறவிட்ட வார்த்தைகளுக்குள் அசௌகரியப்படுத்திச் செல்கிறது மெலிதான பிரளயங்கள். கழிவறைச் சுவற்றுக்குள்   அசூயையாய் திணறிக்கொண்டிருக்கிறது நாற்றம் கலந்த கண்ணீர்த் துளிகள். நூலிழையின் முடிச்சொன்றில் சிறகுலர்த்திப் பறக்கிறது வண்ணமில்லாப் பூச்சியொன்று.. .

பயணங்கள்..

Image
கிடைத்தவைகளையும்  இழந்தவைகளையும் ஏனோ ஞாபகப்படுத்துகிறது ஒவ்வொரு பயணமும்..! வியாபார நோக்கில் தட்டப்படும் கண்ணாடிகளில் வெறுப்பின் சாயலை பூசிவிடும் சில பயணங்கள்..! திருமணத்திற்கு எழுதப்போகும் மொய்யையும் உடுத்தப்போகும் ஆடையையும் கணக்கிட்டபடியே கழிகிறது சில பயணங்கள்..! பயணச்சீட்டிலிருந்து தப்பிக்கும்போதுமட்டும் கடவுள்களிடம் நன்றி சொல்லும் சிலரது பயணங்கள்..! ஜன்னல்வழி வேடிக்கைகளிலும் எட்டிப்பார்க்கும் காட்சிகளை மீறிய எண்ணஓட்டங்களுடன் பயணங்கள்..! பக்கத்து இருக்கை புரணிகளும் எதிர்ப்பக்க குழந்தைச் சிரிப்புகளும் அவ்வப்போது கவனமீர்த்து மறையும் பயணங்கள்..! பின்னிருக்கை புதுமண சில்மிஷங்கள் முகம்சுளிக்க வைக்கும் ஏராளமாய் பயணங்கள்..! கவலைகளையும் கற்பனைகளையும் கட்டிவைத்து கண்ணயரும் அபூர்வமாய் சில பயணங்கள..! ஆக்கிரமிக்கும் வரவு செலவுக் கணக்கின் வாய்ப்பாடுகள் வசமாய் பெரும்பாலும் பயணங்கள்..! இறந்தகாலமும் எதிர்காலமும் நிறைந்து வழிகிறது நீண்டுசெல்லும் நிகழ்காலப் பயணங்கள்..!! . .

தேவதைகள்..

Image
எப்போதும் பாக்கு இடித்தபடியே சிரிக்கிறாள் பக்கத்துவீட்டு செல்லம்மா பாட்டி. . பனியாரம் சுட்டு விற்றுக்கொண்டிருந்தாள் தெருமுக்கில் கடைபோட்டிருக்கும் பார்வதியம்மா. . சிகரெட் விற்பனை இல்லையென்ற போர்டுடன்   தூரத்துப் பெட்டிக்கடையில் வள்ளியக்கா.. இடுப்பிலிருக்கும் குழந்தையை வாங்கி   மடியில் வைத்க்கொண்டதும் ஸ்நேகமாய் சிரிக்கிறாள்   பேருந்தில் நின்றுவந்த பெயர்தெரியா சகோதரி.. பிஸ்கட் துண்டொன்றை பிய்த்துத் தருகிறாள் அலுவலகத்தில் டீ கொண்டுவரும் லட்சுமியக்கா.. தலைவலிக்கு மாத்திரை கொடுத்து கூடுதலாய் உச்சி வருடல் செய்கிறாள் வீட்டிலிருக்கும் சிவகாமி அம்மா.. ----- தேவதைகளுக்கு இறக்கைகள் இருப்பதில்லை போலும்..! . .

BLACK.. என் பார்வையில்

Image
வெளிவந்து சில வருடங்களாகிவிட்டாலும் இன்றும், பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்துற வெகுசில படங்களில் இதுவும் ஒன்று. பார்க்கும், கேட்கும் திறனற்றவராக ராணி முகர்ஜி.. அவரது ஆசிரியராக அமிதாப் பச்சன். இருவரைச் சுற்றியே முழுப்படமும். மாற்றுத்திறனாளியாய் நடிப்பில் க்ளாப்ஸ் வாங்குகிறார் ராணி  முகர்ஜி . கையசைவுகளில் அநாயாசமாய் பேசி, விழிகளை உருட்டி உருட்டிப் பார்ப்பது (!!)  என  கதாப்பாத்திரத்தின் இயல்பாய்   மாறியிருக்கிறார். நகைச்சுவைக்காக எனினும் நடையில் சார் லி  சாப்ளின் சாயலை தவிர்த்திருக்கலாம். சகோதரி தன் மன உணர்வுகளை பொதுவில் வெளிப்படுத்தி அழும்போது ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருப்பது   யதார்த்தம். ராணியின் சிறுவயதாக வரும் சிறுமியின் கதாப்பாத்திரம் மிரட்டலாய் அமைந்திருக்கும். தலைவிரி கோலமாய் முறைக்கும் கண்களுமாய் எதையோ தேடியபடி கைநீட்டும் அச்சிறுமியின் நடிப்பு.. க்ளாஸ்..!! ராணியின் ஆசிரியராய் அமிதாப்.. சிறுமியிடம் அறை வாங்கிவிட்டு ‘So strong’ என்று சிரிக்கும்போதும், ஞாபகமறதி நோயால் அவ்வப்போது ஸ்தம்பித்துவிடும்போதும், “டீச்சர்“ “வ்வ்வா“ (வாட்டர்) என்று ஒவ்வொரு வார்த்தையாய் ராணிக்கு