Posts

Showing posts from September, 2013

மூடர் கூடம் - என் பார்வையில்..

Image
மூச்சு விடாம பேசுற பன்ச் வசனம் கிடையாது. ஜிகுஜிகுனு ஆடை உடுத்திகிட்டு ஆடும் ஐட்டம் சாங் கிடையாது. ஒரே ஆள் பத்து பேரை அடித்து வீழ்த்தும் சாகசங்கள் கிடையாது. தொடைதட்டி சவால் விட்டு, ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆகும் வித்தையேதும் கிடையாது. ஹீரோயினைக் கட்டிப்பிடித்து புரண்டு ரொமான்ஸ் பண்ணும் கில்மாஸ் கிடையாது. வேற என்ன தான் படத்துல இருக்கு? ஆர்ப்பாட்டாமில்லாத நச் வசனங்கள்.. யதார்த்தமான நடிப்புகள்.. பாத்திரத்திற்குப் மிகப் பொருத்தமான நடிகர்களும் வசன உச்சரிப்புகளும்.. வித்தியாசமான கதையமைப்பு.. சூப்பர் ஹிட்.. ஆஹா ஓஹோ..னு நிச்சயம் நம்ம மக்கள் வரவேற்க மாட்டாங்க. எனினும் கட்டாயம் பாராட்ட வேண்டிய முயற்சி தான். “ரெண்டாயிரம் ரூபாய்க்கு கூட சட்டை இருக்குனு இன்னைக்குத் தான் தெரியும்“ “ரெண்டு லட்சம் இப்டித்தான் இருக்குமா?“ “ஆயிரம் ரூபாய்க்கு பீட்சாவா?“ “நீங்க தானே மொபைல் மாதிரி எது இருந்தாலும் உடைக்க சொன்னீங்க.. அதுனால தான் ரிமோட்டை உடைச்சேன்“.. போகிற போக்கில் தூவிவிடும் செண்ட்ராயனின் அப்பாவித்தனம் கூடுதல் பலம். தலைகீழா நிற்க வைப்பதும், முட்டி போட வைப்பதும், பந்தினை தட்ட சொல்ல

ஸ்பரிசம்..!

Image
ம.வே.சிவகுமார் எழுதிய ‘ ஸ்பரிசம் ’  சிறுகதை படிக்க நேர்ந்தது. ஒற்றைச் சம்பவத்தை அடிப்படையாக்க் கொண்ட மிகச்சிறிய கதையெனினும், படித்து முடித்தபின் வெகுநேரமாய் யோசிக்க வைத்தது. கதையானது.. சிறுவயது முதலே தந்தையால் மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கப்படும் ஒருவன், தனக்கு பிறந்திருக்கும் குழந்தையைப் பார்க்க ஊருக்குச் செல்கிறான். ரயிலேற்றிவிடும் தகப்பனார் அவன் கைகள் பற்றியபடி இருநூறு ரூபாய் தந்து அறிவுரைகூறி வழியனுப்புகிறார். அந்த ஒரு சிறு ஸ்பரிசத்தில் தன் பழைய நினைவுகளைப் புரட்டியபடி பயணம் செய்கிறான் அவன். உறவுகளுக்குள் என்னதான் பிணைப்பிருந்தாலும், ஒரு கட்டத்திற்குமேல் தொட்டு ஸ்பரிசிக்க முடிவதில்லை என்பதை அந்த உள்ளங்கை சூட்டில் உணர்கிறான். குழந்தையை முதன்முதலாய்த் தூக்கி உச்சிமுகரும்போது, இன்னும் சில காலத்திற்குப்பின் இந்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று யோசித்தவாறே முத்தமிடுகிறான். அதே நேரம், ஊரில் அம்மாவிடம் அப்பாவும் இதையே சொல்லிக்கொண்டிருப்பதாக கதை முடிகிறது. கதையம்சம் சாதாரண சம்பவம்தானெனினும் உட்கருத்து என்னவோ மனதை அழுந்தச்செய்கிற உண்மை. கடைசியாக என் அப்பாவின் உள்ளங்கை சூடு எப

மற்றுமொரு மிருகமாய்..!

Image
நிசப்தங்களுக்கும் இறைச்சல்களுக்கும் மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கிறாய். ஜனித்த குழந்தையின் அழுகைச் சத்தங்களோ சவங்களுக்கான சடங்குகளோ உன்னை பாதிப்பதேயில்லை. கண்முன் நடந்த கோர விபத்தைக் கூட கண்டுகொள்ளாது நகர்ந்து செல்கிறாய். “ உடலுறுப்பு தானம் செய்யுங்கள் “ விளம்பரம் படித்து , விளம்பரப்படுத்தி போர்வைக்குள் ஒளிந்துகொள்கிறாய். கடவுள் பிரச்சாரமோ பாலியல் தொழிலோ.. அண்டைவீடோ அடுத்த நாடோ. ஏதுமுனை ஈர்ப்பதில்லை. இழப்பின் புலம்பல்களோ   மகிழ்ச்சிக்கான ஆரவாரங்களோ எப்போதும் உன்னை ஊடுருவுவதில்லை. மறத்துப்போன உணர்வுகளோடு   மறைவதற்கு காத்திருக்கிறாய்.. மிருகக் கூட்டத்திற்குள் மற்றுமொரு மிருகமாய்..! . .

கருப்பு வெள்ளை வானவில்லாய்..!

Image
பழங்காலப் புகைப்படமொன்று   எதன் தேடலின் பொருட்டோ..! மறந்துபோன முகங்களும் மங்கிப்போன சிரிப்புமானதை உற்றுநோக்கி உருவமறிகிறேன். நீண்ட குழலுடையவள் பாட்டியென்றும் அடர்மீசைக்கு சொந்தக்காரர் தாத்தாவென்றும் பெரிய கால்சட்டையணிந்தவர் தந்தையென்றும் ரிப்பனுக்குமேல் பூ வைத்திருந்தவர் அத்தையென்றும் விரல் சூப்பிக்கொண்டிருந்தவர் சித்தப்பாவென்றும் என்னுள் நானே அனுமானிக்கிறேன். இன்னும் யார்யாரோ இயந்திரச் சிரிப்புடன்.. பாட்டியின் தங்கையாவோ நாத்தனாராகாவோ..! ஆராய மனமில்லாது தூக்கியெறிந்தேன். எனக்கான பொருள் கிடைக்காத எரிச்சலில்..! சிரித்தவாறே மீண்டுமொரு தேடலுக்குக் காத்திருக்கிறார்கள் கரையான்களுக்கு மத்தியில்.. கருப்பு வெள்ளை வானவில்லாய்..! . .