நான்.. பெயரற்றவள்!!
“சனியனே.. நேரமாகுது எழுந்திரிடீ“ அம்மாவின் சுப்ரபாதத்தை ஏந்தியபடி சோம்பலாய் கண்திறந்து, சாம்பலும் பற்களுமாய் ஆரம்பித்தேன் என் நாளை! சில்லென்ற நீரிலொரு காக்கா குளியலிட்டு, ஒட்டுப்போட்ட பாவாடை சட்டையுமாய் தேநீரென்ற பெயரில் குடித்தேன் ஒரு திரவத்தை..! அவசரமாய் தலைவாரிப் பொட்டு வைத்து, பழைய கஞ்சியை டப்பாவிலும் வாயிலும் அடைத்தபடி, ஓட்டமும் நடையுமாய் இடம்பெயர்ந்தேன் தொழிற்சாலைக்கு. மேனேஜருக்கு வணக்கத்தையும் மேற்பார்வையாளனுக்கு சல்யூட்டையும் காணிக்கையாக்கி பெருமூச்சுடன் ஆரம்பித்தேன் எனக்கான கடமையை.. கட்டளையிடாத குறையாய் கைகள் பரபரக்க, நக இடுக்கில் கூட புகையிலைகளாய்..!! ஒவ்வொன்றாய் நெம்பி, நிரப்பி, அடக்கி அடுக்கி கட்டுக்களாக்கி நிமிர்ந்தபோது மணியடிக்கவே, ஆளுக்கொரு பக்கமாய் அவரவர் கஞ்சியை எடுத்துக்கிளம்பினர்.. அறைகுறையாய் கைகழுவி, முதற்கவளைக்கு வாய்திறந்தேன்.. உச்சந்தலையில் “நங்“கென்றொரு கொட்டு விழுகவே அலறியடித்துக்கொண்டு எழுந்தேன்... கட்டுக்களின் அளவுகள் மாறுபடுகிறதென அறை விழுந்தது! ஏதேதோ கெட்ட வார்த்தைகள் எனைப்பார்த்துச் சிதறவிட்டு எல்லோரும் வேடிக்கை பார்க்க எட்டிம...