செல்வம்..
“மதியத்துக்கு பாயாசம் கொஞ்சம் சேத்து வச்சுவிடும்மா“ நண்பர்களுக்காக கேட்கிறேனென அம்மாவும் கொடுத்தனுப்பினாள். அவளுக்குத் தெரியாது. இது செல்வத்திற்காக என்று. சொன்னால் திட்டுவாள். உனக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று. புரிந்துகொள்ளாதவளிடம் நடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். செல்வம் என்றதும் என் காதலன் என்று நினைப்பவர்களுக்கு தலையில் ஒரு குட்டு. செல்வம் என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிறுவன். “அக்கா அக்கா“ என்று வாய் நிறைய அழைக்கும் பாலகன் அவன். படிக்க ஆர்வமிருந்தும் ஏழைகளுக்கே உரிய சாபக்கேடாய் இங்கு வந்து எடுபிடி வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் படிக்கும் வயதில் கஷ்டப்படுகிறானே என்று வருத்தம் தோன்றும். அவனைப் படிக்க வைக்கும் வசதி என்னிடம் இல்லாததால் வெறுமனே ஆதங்கம் மட்டும் பட்டுக்கொண்டிருந்தேன். அலுவலகம் சென்றதுமே அவனைத்தான் தேடினேன். மேலாளரின் இருக்கையை சுத்தம் செய்து கொண்டிருந்தவனை அருகில் அழைத்து பாயாசத்தை நீட்டினேன். “என்னக்கா விஷேசம்?“ என்று கேட்டு, பதிலுக்குக் காத்திராமல் கடகடவெனக் குடித்தான். மெல்லிய சிரிப்புடன் அவனைப் பார்த்துக்கொண