செல்வம்..“மதியத்துக்கு பாயாசம் கொஞ்சம் சேத்து வச்சுவிடும்மா“
நண்பர்களுக்காக கேட்கிறேனென அம்மாவும் கொடுத்தனுப்பினாள். அவளுக்குத் தெரியாது. இது செல்வத்திற்காக என்று. சொன்னால் திட்டுவாள். உனக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று. புரிந்துகொள்ளாதவளிடம் நடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.
செல்வம் என்றதும் என் காதலன் என்று நினைப்பவர்களுக்கு தலையில் ஒரு குட்டு. செல்வம் என் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிறுவன். “அக்கா அக்கா“ என்று வாய் நிறைய அழைக்கும் பாலகன் அவன். படிக்க ஆர்வமிருந்தும் ஏழைகளுக்கே உரிய சாபக்கேடாய் இங்கு வந்து எடுபிடி வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் படிக்கும் வயதில் கஷ்டப்படுகிறானே என்று வருத்தம் தோன்றும். அவனைப் படிக்க வைக்கும் வசதி என்னிடம் இல்லாததால் வெறுமனே ஆதங்கம் மட்டும் பட்டுக்கொண்டிருந்தேன்.
அலுவலகம் சென்றதுமே அவனைத்தான் தேடினேன். மேலாளரின் இருக்கையை சுத்தம் செய்து கொண்டிருந்தவனை அருகில் அழைத்து பாயாசத்தை நீட்டினேன். “என்னக்கா விஷேசம்?“ என்று கேட்டு, பதிலுக்குக் காத்திராமல் கடகடவெனக் குடித்தான். மெல்லிய சிரிப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். குடித்து முடித்தவன் சட்டெனச் சென்று பாத்திரத்தை கழுவிக் கொண்டு வந்தான். ஈரக்கையை சட்டையில் துடைக்கும்போதுதான் கவனித்தேன். அக்குளில் கீற்றாய் ஒரு கிழிசல்.
“வேற சட்டை எடுக்கலாம்ல.. எப்படிக் கிழிஞ்சிருக்க பாரு“ என்று உரிமையாய் கோவப்பட்டேன். உடனே அவன் “விடுங்கக்கா தக்கிறதுக்கே காசில்ல. இதுல எங்குட்டு புதுச்சட்டை எடுத்தாற?“ என்றான் இருக்கைத் தூசியைப் பார்த்தவாறே. இவன் பதில் இதுவாகத்தான் இருக்குமென்று எனக்கும் தெரியும். இருந்தும் அவனுடைய இந்த நிலைமைக்காக பரிதாபத்தைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லையெனக்கு. புதுச்சட்டையாவது வாங்கலாமெனும்போது வீட்டு வாடகையும் மளிகை பாக்கியும் கண்முன் வந்து பயமுறுத்தியது.
முடிந்தளவு அவனிடம் வேலை சொல்வதை குறைத்துக்கொள்வேன். அவனுக்காக என்னால் செய்ய முடிந்தது அது மட்டும் தான். ஆனாலும் என் குறிப்பறிந்து செல்வமாகவே முன்வந்து வேலை செய்வான். கோப்புகளை தூக்கி நகர்த்தவும், கேன்டீனில் அவசரத்துக்கு சாப்பாடு வாங்கி வரவும் தண்ணீர் பாட்டிலில் நீர் நிரப்பவும் என அவனே உரிமையெடுத்து உதவுவான். “அக்கா“ என்ற உரிமை பிடித்துவிட்டமையால் எனக்கும் பழகிவிட்டது.
அன்று விடுப்பு எடுத்திருந்தேன். அழைத்த அலைபேசியை எடுத்தவுடன் “அக்கா“ என்ற செல்வத்தின் குரலில் மகிழ்ச்சியும் துள்ளலும் கேட்க, “என்னடா.. இந்நேரம் போன் பண்ணியிருக்க? ஏதாவது பிரச்சனையா?“ என்றேன். அவனுடைய மாமா வந்திருப்பதாகவும், அவன் படிப்பிற்கு அவர் உதவுவதாக வாக்களித்தாகவும், அதனால் அவன் ஊருக்கு செல்வதாகவும் கூறி வைத்தான்.
எப்படியோ.. அவன் படிக்க முடியவில்லையே என்ற என் வருத்தம் அகன்றது. சந்தோசமாய் மறுநாள் அலுவலகம் செல்ல, புதிதாய் ஒரு வயதானவர் எடுபிடி வேலைக்கு சேர்ந்திருந்தார். “அக்கா“ என்றழைத்த குரலின் வெறுமையை உணர்ந்தவாறு பணியில் மூழ்கினேன்.
ஒரு கோப்பை மேலாளரிடம் தரச்சொல்லி அவரை அழைத்தேன். “இந்தா பாரு பாப்பா.. ஏதோ போறாத காலம். அந்தப் பொடியன் இல்லனு அவசரத்துக்கு நா வந்திருக்கேன். நீயெல்லாம் என்கிட்ட வேலை சொல்ற வேலை வச்சுக்காத“. சொல்லிவிட்டுச் சென்றவரை கோபமாயப் பார்த்தவாறு விருவிருவென மேலாளரிடம் சென்றேன்.
“ஏன் சார் இந்த மாதிரி சோம்பேறிகளையெல்லாம் வேலைக்கு வச்சு எங்க உயிரை வாங்குறீங்க? பேசாம செல்வம் மாதிரியான சின்னப் பையன்களையே போடுங்க. அவங்க தான் சொல்ற வேலையை எதிர்த்துப்பேசாம செய்வாங்க. இந்தாள் ஓவரா பேசுறான்“ என்று கத்திவிட்டு என் இருக்கைக்கு வந்து சேர்ந்தேன். கோபம் தணியவேண்டி தண்ணீர் குடித்தேன்.
செல்வத்தின் படிப்பை ஏற்ற மாமாவின் மேல் ஏனோ கோபம் வந்தது.
.
.

Comments

கதையின் திருப்பம் துணுக்குற வைத்தது ..
ezhil said…
பல நேரங்களில் இப்படித்தான் நம் சுய நலங்கள் முன் நிற்கிறதோ? இதை மாற்றிக்கொள்ளும் மனப்பக்குவம் வளர்த்துக்கொள்ள வேண்டும்...
மனிதர்களின் யதார்த்த நிலையைச் சொல்லும்
அருமையான கதை.துவங்கி சொல்லிப் போனவிதமும்
முடித்த விதமும் மிக மிக அருமை.
வாழ்த்துக்கள்
மாமாவை பாராட்டும் / வாழ்த்தும் மனது வர வேண்டும்...
Dino LA said…
ரசித்தேன்...
வணக்கம்

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்