மனிதனும் சுய விருப்பமும்..!
வாழ்க்கை..
லட்சியம்.. என்பதைத் தாண்டி, அபத்தமான ஆசைகளும் மனிதனின்
அடிமனதில் இருக்கக்கூடும். பொது இடங்களில் காதலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் செய்யும்
சில்மிஷங்கள் போல...! தனக்குப் பயன்படுகிறதோ இல்லையோ.. சில பொருட்களை எடுத்துவைத்துக்கொள்ளுதல்
(Kleptomania) போல..
ஆசைகள்
மற்றும் அதனை நிறைவேற்றிக்கொள்ள மனிதனின் முயற்சிகளைப் பற்றியும் சமீபத்தில் நண்பருடன்
வாதம் நடந்தது.
இயலும்
எனில், தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒருவனுக்கு சுதந்திரம் உண்டு. அது
அல்பத்தனமான ஆசையாக இருப்பினும்.. என்று அவர் கூறினார்.
எதிலுமே
சுய கட்டுப்பாடு வேண்டும். முடியும் என்பதற்காக முட்டாள்தனமானதையும் முயன்று
பார்க்கக்கூடாது. ஒரு முறை தற்கொலை செய்துபார்த்தால் என்ன? என்று கூட ஆசை
ஏற்படலாம். தன்னால் இயலும் என்பதற்காக அதை முயற்சித்துப் பார்ப்பது மடத்தனம் என்று
நான் கூறினேன்.
அவனுடைய
ஆசை அதுவெனில் விளைவுகளையும் அவன் தான் அனுபவிக்க வேண்டும். இது முட்டாள்தனம்
அல்ல. இது ஒருவகையான “அறிந்துகொள்ளும் தன்மை“. ஒரு சிலருக்கு சில விஷயங்களில்
ஒருவகை ஈர்ப்பு அல்லது த்ரில் தேவைப்படுகிறது. அதன்காரணமாக முயற்சி செய்கிறார்கள்
என்றார் அவர்.
பேச்சு
வளர்ந்து, இன்றைய குடும்ப வாழ்க்கை.. உறவுகளுக்கிடையே நெருக்கம் பற்றி திசை
மாறியது. கணவன் மனைவி உறவுகளுக்குள் பெரும்பாலும் நெருக்கம் இருப்பதில்லை என்றும்
அதைத் தாண்டிய ஒரு மூன்றாம் நபருக்கான தேடுதல்கள் அதிகரித்துள்ளதாகவும் பேச்சு
வந்தது.
கலாச்சாரம்,
பண்பாடு என்பதைத் தாண்டி, ஆணோ.. பெண்ணோ.. தனக்கு நல்லதொரு Care Taker தேவை
என்பதில் தனது தேடலைத் துவங்குகிறார்கள். அது திருமணத்துக்குப் பின், தன்
துணையிடம் கிடைக்காதபட்சத்தில் அடுத்தொரு நபருக்கான ஏக்கமாக மாறுகிறது என்றும், தனக்கான
புரிதல் கொண்ட நபரைப் பார்க்க நேரும்பொழுது அது உறவின் அடுத்த நிலையை அடைகிறது
என்றும் வாதம் செய்தார். இது தனிப்பட்ட அந்த மூன்று நபர்களுக்கான சுய
விருப்பத்தைப் பொறுத்தது என்றும், எண்பது சதவிகிதம் பேர் சமூகம் என்ற வட்டத்திற்குள்ளேயே
புதைந்து போகிறார்கள் என்றும் மீதியிருப்பவர்களே அதற்கான தடையைத் தகர்த்து, தன்
சுய விருப்பம் பற்றிய தெளிவிற்கு முன்வருகின்றனர் என்றும் கூறினார்.
இவருடைய கூற்று எந்த
அளவிற்கு சரியானது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இந்தக் கருத்துக்கள்
பற்றிய உங்களுடைய கருத்து ஏதேனும் உண்டா?
.
.
Comments
ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பது ஒருவரின் விருப்பம் ஆனால் பிறந்தது பெண் என்ன செய்வது விருப்பம் நிரைவேற வில்லை என்பதற்காக பிறந்த குழந்தையை கொலை செய்வதா அல்லது ஆண் குழந்தை இல்லாததால் விவாகரத்து செய்து கொள்வதா
சுய விருப்பத்திலும் புரிந்த்துனர்வு + விட்டுக் கொடுப்பு அவசியம்
ஏதோ எனக்குத் தெரிஞ்சது
கடினமான அல்லது கற்பனைக்கெட்டாத விஷயங்களுக்கு கருத்து சொல்லும் இந்த விஷயத்தில் ‘பம்முவது’ ஏன்? என்று புரியவில்லை...
அடுத்து...
//கணவன், மனைவி உறவுகளுக்குள் பெரும்பாலும் நெருக்கம் இருப்பதில்லை என்றும் அதைத் தாண்டி ஒரு மூன்றாம் நபருக்கான தேடுதல்கள் அதிகரித்துள்ளதாகவும் பேச்சு வந்தது///
நெருக்கம் இல்லாததற்கும் காரணம்...
‘அன்பு’ குறைந்து போனதுதான்... அத்துடன் ‘தான்’ எனும் அகந்தையும்... இவன விட்டால், இவள விட்டால் வாழவே முடியாதா? என்ற ‘ஈகோ’ அதிகமானதுதான்...
முற்காலத்தில்...
அதாவது தகவல்தொழிற்நுட்ப தாக்கம் இல்லாத காலத்தில்... கணவன், மனைவி, குடும்பத்தாரிடம் இருந்தது... ‘குடும்பம்’ பற்றிய நினைவு...
இன்று அது.. தகவல்தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாய்... அது தொலைக்காட்சி, அலைபேசி போன்ற முன்னேற்றத்தின் காரணமாய் டைவர்ட் ஆகி... வெளியுலகத்தை எட்டிப்பார்க்க துவங்கிவிட்டது. அத்துடன்.. “அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா” என்ற அடுத்தவரை அண்டியே இவர்களின் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்... இதுதான் இன்றைய எதார்தத்மான உண்மை...
அன்று கணவன் ஏசிவிட்டுச் சென்றாலும்.. அடித்துவிட்டுச் சென்றாலும்... அக்கணவன் மாலை வீடு திரும்பும்போது நலமுடன் திரும்ப வேண்டுமே என்ற அக்கறை மனைவிக்கும்.. “சே.. ஏசிவிட்டோமே” என்ற வருத்தம் கணவனிடமும் இருந்தது... இன்று தகவல்தொழில்நுட்ப காரணத்தினால்... அந்த அற்ப சந்தோஷங்கள்.. ‘மாநகரத்திலிருந்து மறைந்து போன சிட்டுக்குருவி’களாய் காணமாற் போய்விட்டது... (சிட்டுக்குருவி காணாமற் போனதற்கு மொபைல் போன் டவர்ஸ் கதிர்வீச்சு காரணம் என்கிறார்கள்)
என்று குடும்பத்திற்குள் ‘பகிர்வும்’ ’அன்பும்’ மறைந்து “ஈகோ” குடிபுகுந்ததோ அன்றே குடும்பம் என்ற அன்பின் சாரங்கள் சரியத் தொடங்கிவிட்டன...
“மூன்றாம் நபருக்கான தேடுதல்” என்ற எண்ணம் எதற்காக... எப்படி ஏற்படுகிறது... அன்று ‘கூட்டுக் குடும்பம்’ என ஒன்றிருந்தது... வீட்டில் பெரியவர்கள் இருந்தனர்... பெரியவர்களின் மேல் இருந்த பயத்தால் அல்லது அவர்களின் அன்பு பரிமாற்றத்தால் இந்த மூன்றாம் நபருக்கான தேடுதல் இல்லை... இப்போதுதான் ‘தனிக்குடித்தனம்’ என நமக்குள்ளே ஓர் தனி ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டோம்... அது ஜனநாயக ஆட்சியாக இல்லாமல்... எடுத்தேன்கவிழ்த்தேன் என்ற ‘சர்வாதிகார ஆட்சி’யாக மாறிப்போனதால்தான் இந்த “மூன்றாம் நபருக்கான தேடுதல்”...
அடுத்து... தொடரும்...
இன்றைக்கும் சில இடங்களில் கேள்விப்படுகிறோம்.. கணவன் அல்லது மனைவி இறந்த செய்தி அறிந்து... சிலமணிநேரங்களிலேயே.. அப்பிணத்தின் மீதே மனைவியும் அல்லது கணவனும் மரித்து போனதை...
இது எதைக்காட்டுகிறது?
அவர்களின் அன்பின் எல்லை... வெளிப்பாடு...
இதுபோல...
இன்று (நான் சொல்வது 2000க்குப் பின் திருமணம் செய்தவர்களைப் பற்றி)எத்தனை கணவன்மார்கள் அல்லது மனைவிமார்கள் இறந்தால்... அவர்கள்மீதே விழுந்து... அவர்கள் இணையர் மரித்துபோவார்கள் என்று சொல்ல முடியுமா?
அவர்கள் வாழ்ந்ததுதான் வாழ்க்கை...
அன்பின் உச்சம்...அதுதான் குடும்பம்... எப்படி ஆண்மான் தண்ணீர் குடிக்கம் என்று பெண்மானும்... பெண்மான் தண்ணீர் குடிக்கட்டும் என்று ஆண்மானும் உதடுகளை குடிப்பதுபோல் அசைத்ததோ.. அந்த “விட்டுக் கொடுத்தலும்” - “அன்பின் பரிமாற்றமும்” மறைந்துபோனதே.. இந்த நபருக்கான தேடுதல்...
இப்படி...
உலகினுக்கே நாகரிகத்தைக் கற்றுத்தந்த பாரத பண்பாட்டில்... சீர்கேடு ஏற்பட்டு... சமுதாயச் சீர்குலைவு ஏற்பட்டால்... அப்புறம் திருமணம் எதற்கு... திருமணபந்தம என்ற உறவு எதற்கு.. யார் வேண்டுமானாலும் யாரோடும் வாழலாம் என்ற மிருகத்தைவிட கேவலமாய் வாழ..
தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்த “ஆறாம் அறிவு” தேவையே இல்லையே...
ஓரறிவே போதுமே...
யாரோடும்.. யாரும்... எப்போதும்.. என.. வாழ்தலுக்கு...
சமூகம் ஒழுக்கம் என்பதைவிட...
தனிமனித ஒழுக்கம் தேவை...
அதுவும்
தன்னைத்தான் சுயபரிசோதனையில் நாம் நம்மை ஆட்படுத்திக் கொண்டால்தான் இச்சமூகசீர்கேடுகள் மறையும்...
இதெல்லாம் நடக்காது என்று நன்றாகத் தெரியும்...
ஏனெனில்...
கல்லாத நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையைவிட..
கற்றுப் பேரறறிவு பெற்ற நாம் வாழும் வாழ்க்கை சிறந்ததில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர் என்றே எண்ணுகிறேன்...
நம் தாயும் தந்தையும் அன்புடன் நடத்திய குடும்பத்தை...
நாம் நடத்துவதுமில்லை... நடத்தப்போவதுமில்லை.. இது அப்பட்டமான உண்மை...
காரணம்...
நாம் கற்றோர்... அறிவாளிகள்... புத்திசாலிகள் எனும் மமதை நமக்குள் இளம்பிராயத்திலே திணிக்கப்படுவதால்...
அதோடு...
குடும்பத்திற்குள் ‘அன்பு’ மறைந்து ‘ஆதிக்கம்’ அதிகமானபின்... அங்கு ஏது வாழ்க்கை?
கடினமான அல்லது கற்பனைக்கெட்டாத விஷயங்களுக்கு கருத்து சொல்லும் இந்த விஷயத்தில் ‘பம்முவது’ ஏன்? என்று புரியவில்லை...//
பயமோ பம்மலோ காரணமில்லை முரளி.
வாக்குவாதம் செய்யவோ ஆராய்ச்சி செய்யவோ இந்த வாதம் பொருத்தமானதல்ல என்பதே என் எண்ணம். கலாச்சாரம் பண்பாடு என்பதில் அடிஆழத்தில் கிடப்பவர்களும், தன் சுயவிருப்பம்.. வாழ்க்கை எல்லோருக்கும் இருக்கிறது.. என்ற சிந்தனை கொண்டவர்களும் சரி விகிதத்தில் இருப்பதுதான் இதற்கு காரணம். சரி தவறு என்பது இங்கு வாக்குவாதமே அல்ல. அவரவர் சூழ்நிலையும், பிரச்சனைகளின் அடித்தளமுமே இது போன்ற முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. அது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கீழ்த்தரமாகவோ, கேலிக்குறியதாகவோ தோன்றலாமே தவிர, பாதிக்கப்பட்டவர்களின் மனதே அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. தீர்மானிக்க வேண்டும்.
அதனாலேயே இதில் ஆராய்வதற்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தேன்.
‘பம்முவது’ என்ற வார்த்தையை நான் பயன்படுத்தியதற்கு காரணம்.. உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் நடந்த உரையாடல் மட்டுமே போட்டுவிட்டு... ‘கழுவுற மீன்ல நழுவுற மீனா’ நீங்க நழுவினததான் சொன்னேன்...
எதற்கும் ஓர் எல்லை... முடிவு... வேண்டுமல்லவா... அம்முடிவு மற்றவர்களுக்கு தவறாய்த் தெரிந்தாலும்... ‘தனக்குச் சரியெனப்பட்டதை பட்டவர்த்தனமாய்’ நீங்கள் எத்தனையோ முறை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.. எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அதிலிருந்து பின்வாங்கியதே இல்லை நீங்கள்... இதனை சில பதிவுகளின் பதில்களே சொல்லும்... அதனால்தான்... இக்கேள்வி...
//கலாச்சாரம் பண்பாடு என்பதில் அடிஆழத்தில் கிடப்பவர்களும், தன் சுயவிருப்பம்.. வாழ்க்கை எல்லோருக்கும் இருக்கிறது.. என்ற சிந்தனை கொண்டவர்களும் சரி விகிதத்தில் இருப்பதுதான் இதற்கு காரணம்.///
கலாச்சாரமும்... பண்பாடு காத்தலும் தவறா?
ஒழுக்கமுடன் ஊருடன் ஒத்துப்போவது தவறா?
தான் செல்வது மட்டுமே.. சரியான பாதை என்று சொல்வது சரியா...
அவர்களும் சேர்ந்ததுதான் சமூகம் அல்லவா?
அவர் மட்டுமே கெடுவதால்.. அந்த சமூகத்திற்கு ‘சீர்கேட்டசமூகம்’என பெயரிட்டழைக்கப்படுகிறதே... அது சரியா?
அதற்காக அவர்கள் சொல்லும் நொண்டிச் சாக்குகள் சரியா?
///அவரவர் சூழ்நிலையும், பிரச்சனைகளின் அடித்தளமுமே இது போன்ற முடிவுகளுக்கு வழிவகுக்கிறது. அது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கீழ்த்தரமாகவோ, கேலிக்குறியதாகவோ தோன்றலாமே தவிர, பாதிக்கப்பட்டவர்களின் மனதே அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.///
‘தனிமரம் தோப்பாகாது’ நண்பியே...
அவரவர் வாழ்க்கையை நிர்ணயிப்பதும்.. தீர்மானிப்பதும் அவரவர் உரிமை. இதில் மாறுபாடான கருத்தில்லை... ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள்.. சமூகத்தை பாதிகும்போதுதான்.. சமூக பிரக்ஞ்சை உள்ள அனைவருக்கும் வலிக்கும்...
அதோடு...
தாங்கள் செய்யும் தப்புகளுக்கும்.. தவறுகளுக்கும்.. ‘சூழ்நிலை’ எனும் ஒரு பொய்யைச் சொல்லி தப்பிப்பது என்ன நியாயம்? அதைப்போலவே.. பிரச்சினைகளின் அடித்தளம் என்று காரணம் சொல்கிறீர்கள்.. பிரச்சினைகளை சந்தித்து (தன்னையும்.. தன்னைச் சார்ந்த சமூகத்தையும் பாதிக்காத வகையில்) போராடி நல்தீர்வு காண்பதுதான் வாழ்க்கை... அவன் மட்டுமே வெற்றி பெற்ற மனிதன் அல்லவா? தான் செய்த தவறுகளுக்கும்.. தப்புகளுக்கும்.. ‘சூழ்நிலை என்றும், பிரச்சினைகளின் அடித்தளம்’ என்றும் சொல்லி தப்பிப்பதும்... அதனால் இச்சமூகத்திற்கு கேடு விளைவிப்பதும் எந்தவகையில் நியாயம்? இப்படி இவர் செய்வதால்... இவரைப் பார்த்து நான்கு பேர்... அந்நான்கு நாற்பதாகி... நானூறாகி.. நாலாயிரமாகி... தொடர்ந்து... பின்னொருநாள் இச்சமூகமே சீரழிந்துவிடுமே?
இதெல்லாம் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை...
அடுத்த பதிவில் “இந்தியா ஒளிர்கிறது” என்று எழுதிய இந்திரா அவர்கள்...
தங்கள் பதிலில் கடைசி வரையில்...
///பாதிக்கப்பட்டவர்களின் மனதே அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. தீர்மானிக்க வேண்டும்// என்றும்...
அழுத்தம் திருத்தமாக...
ஆணித்தரமாக...
//தீர்மானிக்க வேண்டும்// என்று சொல்லியிருக்கிறீர்களே...
மன்னிக்கவும்...
இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது?
காரணம்..
இச்சமூக சீர்கேட்டிற்கு நானும் ஓர் காரணியாகக் கூடாது ஒரு சல்ஜாப்பை சொல்லி...
மனிதன் வாழவேண்டும்..
எப்படி?
“இப்படித்தான் வாழவேண்டும்” என்பது ஒரு வழி...
“எப்படியும் வாழவேண்டும்” என்பது மற்றொரு வழி...
இதில்..
என் முன்னோர்கள் நடந்து வந்த... கடந்து வந்த...பாதையில்தான் நானும் “இப்படித்தான் வாழவேண்டும்” என்ற முதல்வழியிலேயே எனது வாழ்க்கைப் பயணமும் தொடரும்...