கையாலாகாதவர்கள்..!

“உனக்கென்ன.. அரசாங்க அலுவலகத்துல வேலை. போய்ட்டு வர்றதுக்கு ஸ்டாஃப் பஸ் வேற. 9 மணியிலிருந்து 5 மணிவரைக்கும் கம்யூட்டர் முன்னாடி உக்காந்து ஒப்பேத்திக்கிட்டு கிளம்புவ. குடுத்துவச்ச மகராசி..“
நிறையபேர் அடிக்கடி இப்படி சொல்வதை கவனிச்சிருக்கேன். அரசாங்க அலுவலகம் என்றாலே ஏதோ வெட்டிப்பொழுது போக்கிட்டு பொழுதைக் கழிப்பவர்களென பொதுவான கருத்து இருக்கு. அங்கேயும் மாங்கு மாங்குனு வேலை பாத்துகிட்டு, சிடுசிடுக்கும் மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லிகிட்டு நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தற்காலிகப் பணியாளர்கள்னு ஒரு வகை அரசாங்கத்துல இருக்குங்குறது பரவலா வெளியிலருந்து பாக்குற யாருக்கும் தெரியிறது இல்ல. அதாவது கம்மியான சம்பளத்துலயோ அல்லது தினக்கூலி அடிப்படையிலயோ ஆயிரக்கணக்கான நபர்கள் வேலை பாக்குறாங்க. அதிகபட்சமாய் மூவாயிரம் கூட சம்பளம் வாங்க இயலாத இவர்கள், நாட்கள், மாதங்கள் என்பதைக் கடந்து, பல வருடங்களாய் தங்கள் பணி நிரந்தரமாகுமென கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். இதில் சாதாரண துப்புறவு தொழிலாளர்ல ஆரம்பிச்சு, டிரைவர், ப்ளம்பர், கார்பென்டர், பியூன்.. என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
(எனக்குத் தெரிந்து சில அரசாங்க அலுவலகத்தில்) பணி நிரந்தரமாக, குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் பூர்த்தியாக வேண்டுமென்பது விதிமுறை. ஆனால், என் தோழி ஒருவருக்கு 17 வருடங்கள் கழித்தே அரசாங்கத்தில் பணி நிரந்தரமாகியிருக்கிறது. “இதுக்கு முக்கியமான காரணம் பணம் தான். முன்னாடியெல்லாம் யார் பணம் குடுத்து வேலைக்கு முயற்சி பண்றாங்கனு இருந்துச்சு. இப்ப யார் அதிகம் குடுத்து முயற்சி பண்றாங்கனு மாறிடுச்சு“ என்று வருத்தமாய் அவர் கூறக் கேட்டிருக்கிறேன்.
அதிலும், அலுவலகத்தில் மற்ற ஊழியாகள் மத்தியில் தற்காலிக பணியாளர்களுக்கு எந்த அளவு மரியாதை கிடைக்கும் என்பது கேள்விக்குறியே..!
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பணி தொடர்பான கோரிக்கைகளும் விண்ணப்பங்களும் அறிவிக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பது நடைமுறை. உள்ளிருக்கும் தற்காலிகப் பணியாளர்களுக்கு அதில் முன்னுரிமை வழங்கப்படும். அனுபவம், படிப்பு அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுவார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில், அவர்களுக்குள்ளும் வசதி படைத்தவர்கள் எனும் ஒரு வகையிருக்கிறது.. அதில் சீனியர் ஜீனியர், படிப்பு எல்லாமே அடிபட்டுப்போய்விடுகிறது.
இவர்கள் அல்லாமல், சம்பந்தமே இல்லாமல் வெளியிலிருந்து யாராவது சிபாரிசு என்ற பெயரில் வருவதுமுண்டு. இதில் கடைசி ஆயுதமாய் சிலர் தங்கள் ஜாதிகளையும் உபயோகிக்கிக்கலாம். தங்கள் ஜாதிப் பயலுகளைத் தான் வேலைக்கு சிபாரிசு செய்வேன் என்கிற தரமான மனிதர்களும் இருக்கிறார்கள். இப்பெருங்கூட்டத்தில் நேர்மையாய் உண்மையாய் யாரேனும் அதிகாரிகள் இருந்தாலும் மற்றவர்களின் ஆதிக்கத்தில், ஏதும் செய்ய இயலாது ஒதுங்கிக்கொள்கிறார்கள்.
எப்போதாவது போனால் போகிறதென இரக்கப்பட்டு, இருபது, பதினைந்து, பத்து வருடங்கள் வேலை பார்த்தவங்களை அப்படியே, அதே பணியில் நிரந்தரமாக்க மேலிடத்திலிருந்து ஆணை வரலாம். அதிகபட்சமாய் அவர்களுக்குரிய சம்பளமாக நிர்ணயிக்கப்படுவது வெறும் 6000 ரூபாயே. உள்ளிருக்கும் படிக்காதவர்கள் அல்லது பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்தவர்களுக்கு இது தவிர வேறு போக்கிடம் இருப்பதில்லை.
பட்டப்படிப்பு மற்றும் பிற தொழில்நுட்பப் படிப்புகள் கையிலிருக்கையில், தேவையான வருடங்கள் முடிந்தபின்னும் (சீனியாரிட்டி போய்விடுமென்கிற கவலையில்) வெளியேயும் போக முடியாமல், பொருளாதார சிக்கலில் உள்ளேயும் இருக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பதை கண்கூடாய் பார்க்கலாம். நண்பர் ஒருவர் பன்னிரெண்டாண்டு காலம் தற்காலிகப் பணியிலிருந்து,  விரக்தியில் ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
“தனியார் அலுவலகத்துக்கு போயிருந்தா இந்நேரம் கைநிறைய வாங்கியிருக்கலாம். பேசாம இந்த வேலையை விட்டுட்டு வெளில வந்துடுங்க“ என்று பல குடும்பத்தில் தினமும் பாடம் நடக்கும். அடுத்த மாசம் வந்துடும்.. இன்னும் மூணே மாசம் தான்..னு சொல்லிச் சொல்லியே தங்களைத் தாங்களே வேறுவழியின்றி ஏமாற்றிக்கொள்கிறார்கள். அரசாங்கத்தில் தற்காலிகப் பணியாளர்களாய் இருப்பது கிட்டத்தட்ட புலிவாலைப் பிடித்த கதைதான்.
வருடத்திற்கு ஓய்வு பெறும் நபர்களைக் கணக்கில் கொண்டு, பதிலாக இவர்களை நிர்ணயித்தாலே உள்ளிருக்கும் பணியாளர்களை ஓரளவுக்காவது திருப்திப்படுத்திடலாம். சொந்தக்காரன், ஜாதிக்காரன், பணம் அதிகமாய் கொடுப்பவன்.. என ஆளாளுக்கு வைத்திருக்கும் பட்டியல்களில், வேலைக்கான தகுதியை மட்டுமே வைத்திருக்கும் நிறைய ஊழியர்களின் நிலை பரிதாபத்துக்குரியதுதான்.
கேவலம் பணம் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்குது.
.
.

Comments

//கேவலம் பணம் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்குது.//

கூடவே சுற்றியுள்ள சமூகமும்!
யாராவது லஞ்சம் கேட்டா மொபைல் போன்ல வீடியோ எடுத்து அனுப்புங்க. தூக்கிடலாம்!
ராஜி said…
அரசாங்க வேலைன்னாலே நோகாம நோன்பு கும்பிடுறதுன்னு நினைச்சுட்டிருந்தவங்களுக்கு அதில் இருக்கும் மைனச் பாய்ண்ட்கள் இப்ப புரிஞ்சிருக்கும் இந்திரா, பகிர்வுக்கு நன்றி!!
நீங்கள் கூறுவது உண்மை. இப்போதெல்லாம் அரசு வேலை மிகக் கடினமானதே.பலரும் தற்காலிகமாக வேலை செய்து கொண்டு இப்போதும் நிரந்தரம் ஆகும் என்று காத்துக் கொண்டிருப்பது உண்மையே! மேலதிகாரிகளால் அடிமையாக நடத்தப் படுவது பல துறைகளில் உண்டு. நிரந்தர அடிப்படை பணியாளர்களை வேலை வாங்குவது எளிதல்ல . தகவல் உரிமை சட்டம் வந்த பின் அதை கண்டபடி பயன்படுத்துவோர் அதிகரித்து விட்டனர். சகட்டு மேனிக்கு ஒரு 10 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி 10 ஆண்டுகள் 20 ஆண்டுகளுக்கான இல்லாத தகவல்களை எல்லாம் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள்.அந்த நேரத்தில் பணியில் இருப்பவர்களே முந்தையகாலக்கட்டத்திற்கும்பதில் சொல்ல வேண்டி இருக்கிறது.இதனை முறைகேடாக பயன்படுத்துபவர்ர்களே அதிகம் உள்ளனர்.
தலைப்பு கையாலாகாதவர்கள் என்று இருக்கவேண்டும். tansliteration method டைப் செய்வதால் இது போன்ற பிழைகள் ஏற்பட்டு விடுகிறது.
Unknown said…
அக்கரைக்கு இக்கரை பச்சைதான்....

நல்ல பதிவு

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..