செல்போன்..

“என்னக்கா இந்நேரம் வந்துருக்கீங்க?“
சட்டை பட்டனை போட்டுக்கொண்டே கேட்ட பக்கத்துவீட்டு சாரதியிடம் தயங்கியபடி விஷயத்தை சொன்னேன். சிரிப்பா ஏளனமாவெனப் புரிந்துகொள்ள முடியாதபடி புன்னகைத்தான்.
“இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்கக்கா. கண்டுக்காம விட்ருங்க“
சொன்னவனை நிமிர்ந்து பார்த்தேன். இவனுக்கு நான்பட்ட அவமானம் புரியவில்லை.
“உன்னால எனக்கு உதவ முடியுமா முடியாதானு மட்டும் சொல்லு“
“ம்ம் சரிங்கக்கா. உங்களுக்காக பண்றேன். ஆனா எனக்கென்னவோ இது தேவையில்லாத வேலைனு தோணுது.“
கடைசி வார்த்தையை கவனிக்காதவளாய் “எட்டு மணிக்கு வாங்கிவச்சுடுவேன். சரியா காலேல எட்டரைக்கு பஸ் ஸ்டாண்ட் வந்துடு.“ என்றவாறு வீடுவந்து சேர்ந்தேன். இரவு முழுக்க தூக்கமே வரவில்லை.
ச்சே.. எல்லாம் அந்த சந்திராவால் வந்தவினை. 
நான்குநாட்களாக வேண்டுமென்றே சீண்டிக்கொண்டிருந்தவள் இன்று நேரடியாகவே பேசிவிட்டாள். இருக்கட்டும். நாளைக்கு நான் யார்னு காட்டுறேன்.
மறுநாள் சரியாய் ஏழு மணிக்கு செல்லதுரை வீட்டுக் கதவை தட்டினேன். அவர் மனைவியின் பலத்த சிபாரிசு என்பதால் அதிகம் கேள்வி கேட்காமல், பொருள் பத்திரம் என்றும் சாயந்திரம் ஒப்படைத்துவிட வேண்டுமென்றும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். “சரிங்கண்ணே.. சாயந்திரம் பத்திரமா கொடுத்துடுறேன்“ என்றேன். என் தலையாட்டலில் திருப்தியடைந்தவராய் என் கையில் ஒருவழியாய் ஒப்படைத்தார்.
என் வாழ்நாளில் நான் தொட்டுப்பார்க்கும் முதல் செல்போன் அதுதான். லேண்ட்லைன் போனைக்கூட அதிகம் தொட்டுப்பார்த்திடாத எனக்கு இது மிகப்பெரிய பொக்கிஷம் தான். கிட்டத்தட்ட சந்திராவினுடையதைப் போன்றே இருந்ததில் கூடுதல் சந்தோசம். கைநடுங்க, பாதுகாப்பாய் கைப்பையில் வைத்துப் பூட்டினேன். மறக்காமல் அதன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டேன்.
“இதோ பாரும்மா, ருக்மணி சொன்னாங்குறதுக்காகத்தான் குடுக்குறேன். சின்ன கீறல் கூட விழாம சாயந்திரம் ஒப்படைக்கணும். ஜாக்கிரதை“ கிட்டதட்ட எச்சரிக்கை செய்தாரென்று தான் சொல்லவேண்டும். சரியென்பதுபோல் பவ்யமாய் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். எதையோ சாதித்ததாய் பெருமித உணர்வுடன் “வரேங்கண்ணே“ என்பதாய் தலையாட்டிவிட்டு நடையில் வேகம் கூட்டினேன். மணி எட்டு நாற்பது, தூரத்தில் சாரதி நிற்பது தெரிந்தது. இனி பேருந்து ஏற வேண்டியதுதான். பேருந்திற்குக் காத்திருக்கும் நேரத்தில் சுருக்கமாய்..
விற்பனைக்கான பயிற்சி வகுப்பில் எனக்குப்பின் சேர்ந்தவள் சந்திரா. என் குறிப்புகளை கடன்வாங்கி, வராத வகுப்புகளை நிரப்பிக்கொண்டிருந்தாள். இதுதான் செல்போன் என்பதே அவள் கையிலிருந்த வஸ்துவைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். கருப்பாய், மஞ்சள் வெளிச்சத்துடன், மேற்புறம் உருண்டையாய் ஏதோ நீட்டிக்கொண்டிருந்த அந்த கணமான பொருளை இரண்டுநாட்களாய் அடக்கிவைத்த ஆசையில் தொட்டுப்பார்க்க, எரித்துவிடுவதாய் சீறி அசிங்கப்படுத்திவிட்ட சந்திரா முகத்தில் இன்று கரியைப் பூச வேண்டும். அதற்குத் தான் கெஞ்சாய் கெஞ்சி இந்த..
“அக்கா ஸ்டாப் வந்துடுச்சு எந்திரிங்க“ 
இறங்கி நடந்தோம்.
“டேய் சாரதி.. சொன்னது ஞாபகமிருக்குல்ல? பத்தரைக்கு வகுப்பு ஆரம்பிக்கும். சரியா பதினொரு மணிக்கு இந்த நம்பருக்கு பூத்லருந்து போன் பண்ணு. அந்த சந்திராவுக்கு முன்னாடி சொந்தக்காரங்க கிட்ட பேசுற மாதிரி பேசுவேன். ரெண்டே நிமிஷம்தான்.  அப்புறம் நீ உன் காலேஜ் கிளம்பிடு.“ தலையாட்டினான்.
திட்டம் செயல்படப்போகும் மகிழ்ச்சியில் வகுப்பினுள் நுழைந்து சந்திராவைத் தேடினேன். இடப்புறம் மூணாவது வரிசையில் தென்படவே, திருப்தியாய் வலப்புறம் இரண்டாவது வரிசையில் என் இருக்கையில் அமர்ந்தேன். கைப்பையை தொட்டுப்பார்த்தேன், அதன் உச்சி தட்டுப்பட்டபோது பதட்டத்துடனான சந்தோசம் கிடைத்தது. சந்திராவை ஏளனமாய் பார்த்தபடியே கடிகாரத்தை நோக்க ஆரம்பித்தேன்.
வகுப்பு ஆரம்பித்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள். சர்வ அமைதியில் என் இதயத்துடிப்பை உணர முடிந்தது. மணி பதினொன்றை நெருங்க எனக்குப் பதட்டம் ஆரம்பித்தது. எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க, சத்தமாய் போனில் பேசவேண்டுமென நினைத்துக்கொண்டேன். உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது.
11:00
11:03
11:05
படுபாவி.. என்ன பண்ணிகிட்டு இருக்கான்? எங்க போய்த்தொலைஞ்சான்?
11:07
11:08
சாரதியை சாபமிட ஆரம்பித்தேன். எடுத்த முயற்சியெல்லாம் வீணாய்ப்போன கோபம் தலைக்கேறியது.
11:09
பெரிதாய்.. சத்தமாய்.. சந்திராவின் ஆணவத்திற்கு சங்கொலியாய்.. என் கைப்பையில் மணி அடித்தது.
ஒட்டுமொத்த வகுப்பும் ஒருசேர திரும்பிப்பார்க்க என் பார்வை சந்திராமீது மட்டும்.
என்னைப் பார்க்கிறாள் என்று ஊர்ஜிதப்படுத்தியபடி, பதட்டம் வெளிப்படாதவாறு, நிதானமாய் கைப்பையைத் திறந்து போனை எடுத்தேன். எல்லோர் முகத்திலும் ஆச்சர்யம்.. “செல்போனா? பார்ர்ர்ரா சொல்லவேயில்ல.. எப்ப வாங்கின?“ கேள்விகளைப் லட்சியம் செய்யாது பகட்டாய் சந்திராவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே அதன் மஞ்சள் திரையைப்பார்த்தேன். சட்டென நினைவுக்கு வந்தது.
இதில் எந்த பட்டனை அழுத்திப் பேசுவாங்க..!!??
வியர்வை எட்டிப்பார்க்க, யோசித்துக்கொண்டே சந்திராவைப் பார்த்தேன்.
அவளுக்குத் தெரிந்திருக்குமோ??!!

.

Comments

வீம்பையும் சங்கடத்தையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்
முதல் முதலாய் செல்போன் உபயோகிக்கும் வீம்பு கொண்ட ஒரு பெண்ணின் மனநிலையை அழகாக சித்தரித்தது கதை! வாழ்த்துக்கள்!
பெருமைக்கு மாவு இடித்த
கதையாக ஆச்சே,,!
இயல்பான...
எதார்த்த பதிவுதான்...

இது
எல்லோருக்குமுள்ள
ஏக்கம்தான்...

அதைச் சொன்ன விதம் அருமை..

இதெல்லாம்
எனக்கு சாதாரணமப்பா...
காரணம்...

சென்னை மாநகரில்
பெரும்பான்மையோர்... இப்படி
பெருமைக்கு
வாழ்ந்து வருகின்றனர்...

தனக்காக வாழாமல்..
பக்கத்து.. அக்கத்து வீட்டுக்காரர்களுக்காக வாழ்ந்து வருகிறார்கள்...

பெருமைக்கு...
1000 ரூபாய் கொடுத்து
கார கடனில் வாங்கி...
கார் கடன் கட்ட முடியாம...
கொடுத்தவன்
ரௌடிகளோடு வந்து
அவனையும்..
அவன் வீட்டில் உள்ள பெண்களையும்
இஷ்டத்துக்கு பேசிட்டு போறத
பார்த்துகிட்டுதான் இருக்கே...

நீ யோக்யமான்னு என்ன கேட்றீங்களா?

என் இறக்கைகள்
பனைமரம் உயரத்திற்குதான்
பறக்கும் என்றால்...

நான்...
நெல்லிக்காய் மரம்
உயரத்திற்குத்தான்
பறப்பேன்...
பறக்கிறேன்...

இன்னைக்கும்...
ஒயிட் போர்டு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில்தான்...

முழுப்பணம் அளித்து
ஒரு டூ வீலர்... ஏன்..
கார் வாங்ககூட வசதி இருக்கு...

இருந்தாலும்...

நா...
பெருமைக்கு
வாழை இலைல
விளக்கெண்ணைய தடவி
குப்பைல போடுற ஆள் அல்ல...

இதை
என் தந்தை கற்றுத்தந்த பாடம்...

வாழ்த்துக்கள்... நண்பி...

நட்புடன்...
காஞ்சி முரளி
vimalanperali said…
ஆணவம் அறிவை செயலிகச்செய்துவிடும்,
நல்ல கதை வாழ்த்துக்கள்.
ezhil said…
இயல்பாய் அழகாய் மனச்சங்கடத்தை வெளிப்படுத்திய கதை....
Unknown said…
ரொம்ப லேட்.2007 ம் வருடம் என்றால் நம்பலாம்.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..