பல்புகள் பலவிதம்..
உள்ளூர்
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்த நாட்கள் அவை. அங்க நேரடி
ஒளிபரப்பெல்லாம் கிடையாதுங்குறது பெரும் ஆறுதல். மதியம் 12:30 மணி
செய்திக்கு 10:30க்கு ஷூட்டிங் ஆரம்பிக்கும். சாயந்திரம் 7:00 மணி
செய்திக்கு 4:30க்கு உள்ள
இருக்கணும். சாயந்திர செய்தியையே நைட் 10:00 மணிக்கு
மறுஒளிபரப்பு செய்வாங்க. கிரிக்கெட் செய்திகள் “இந்தியா வெற்றி“ “இந்தியா
தோல்வி“னு ரெண்டு விதமா எங்களை வாசிக்க சொல்லி எடுத்து வச்சுக்குவாங்க. ரன் பற்றிய
விபரங்கள் காட்சிகளுக்குப் பின்னணியா வாசிக்குறதால அதை மட்டும் 9.45க்கு அங்கயிருக்குற
டெக்னீசியன் யாராவது பேசி ரெக்கார்ட் பண்ணிக்குவாங்க.
அன்னைக்கு
நல்ல மழை. மாலை செய்திகள்னு ஷூட்டிங் கிளம்பிகிட்டு இருந்தேன். TVS-50ல போறதால 4:15க்கு
வீட்லருந்து கிளம்பினேன். போகப் போக மழை ஜாஸ்தியானதால ஒரு கோவில்ல வண்டியை
நிறுத்திட்டு வெய்ட் பண்ணினேன். அங்கயே மணி 4:30. அப்போ செல்போன்
புழக்கத்துல இல்லாத சமயம். டைரக்டருக்கு தகவல் சொல்லியாகணும். தாமதமாகும் பட்சத்துல
இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே சொல்லணும்னு கண்டிசன். வர்றவரைக்கும் இன்னொரு
வாசிப்பாளரோட பகுதியை எடுத்துகிட்டு இருப்பாங்க. வணக்கமெல்லாம் கடைசில
கோர்த்துக்குவாங்க.
அந்த
தெரு முக்குல ஒரு சைக்கிள் கடைக்குப் பக்கத்துல காய்ன் போன் இருந்துச்சு. போன்
பண்ணி சொல்லிடலாம்னு வண்டியை பூட்டி சாவியை எடுத்துகிட்டு ரோடை க்ராஸ் பண்ணி
நடந்தேன். கடை முன்னாடி கொஞ்சம் தண்ணி தேங்கி இருந்துச்சு. தாண்டிப்
போயிருக்கணும். என் கெட்ட நேரம்.. நெனஞ்சுகிட்டே கொஞ்சமாத்தானே தேங்கிக் கிடக்குனு
காலை வச்சேன். அவ்ளோ தான்.
என்ன
நடந்துச்சுனு புரியிறதுக்குள்ள என் முழங்கால் வரைக்கும் தண்ணிக்குள்ள போயிட்டேன். அங்க
ஒரு சாக்கடை இருந்துச்சாம். காலை வெளிய எடுக்க முடியல. கையை ஊனி எழுந்திருக்கவும்
முடியல. அழாத குறையா முழிச்ச என்னை சைக்கிள் கடைப் பையன் வந்து கை கொடுத்து
தூக்கிவிட்டான். ஒரு செருப்பு தண்ணில அடிச்சுட்டு போயிடுச்சு. இன்னொரு
செருப்பையும் வேற வழியில்லாம அங்கயே கழட்டிவிட்டுட்டு அந்தப் பையனுக்கு நன்றி
சொல்லிட்டு சகதியோட காய்ன் போனை நெருங்கும்போது தான் தெரிஞ்சது.. நான் பர்ஸ
எடுக்காம வெறும் வண்டி சாவியை மட்டும் எடுத்துட்டு வந்திருக்கேன்னு.
வேற
என்ன பண்ண!! திரும்ப அந்த சைக்கிள் கடைப் பையன்கிட்டயே ஒரு ரூபாய் கடன் வாங்கி
டைரக்டருக்கு போன் பண்ணி மழைல மாட்டிகிட்டதை சொன்னேன். வழக்கம்போல திட்டிட்டு “வந்து
தொலை“ன்னு போனை வச்சுட்டார். சாக்கடைல விழுந்துட்டேன்னு சொன்னா மானம் போகும்னு
மறைச்சுட்டேன். ஆனா விதி வலியதாச்சே..! கரெக்டா போன் பண்ணிட்டு வண்டிகிட்ட வரவும்
மழை குறைஞ்சிடுச்சு. அடிச்சுப்பிடித்து வண்டியை எடுத்துகிட்டு யூனிட் போய்
சேர்ந்தேன். மணி 4:50.
அடிக்குற
மாதிரி ஆவசேமா வந்த டைரக்டர் முழங்காலுக்கு கீழ சாக்கடையும் சகதியுமா செருப்பு கூட
இல்லாம வந்து நின்னவளைப் பார்த்துட்டு திட்றதோட விட்டார். “ஏற்கனவே லேட்டு.. புடவையை
சுத்தம் பண்றேன்னு டைம் எடுக்காத.. டேபிள்க்கு பின்னாடி தானே உக்காரப்போற..
மேக்கப் மட்டும போட்டுட்டு சீக்கிரம் வந்து உக்காரு“னு கேமராமேன் விரட்ட, வேற
வழியில்லாம காலை மட்டும் கழுவிட்டு வந்து உக்காந்தேன். சாக்கடை நாத்தத்தை முகத்துல
காட்டாம செய்தி வாசிக்க ஆரம்பிக்க, ரெண்டு மணி நேரம் அந்த அறையே கமகமகமனு
இருந்துச்சு. பக்கத்துல உக்கார்ந்த இன்னொரு செய்தி வாசிப்பாளருக்கு மூச்சடைப்பே
வந்துடுச்சு பாவம். ஷூட்டிங் முடிஞ்சதுதான் ஜோலி.. அவனவன் ஆக்சிஜனுக்காக கதவை
தள்ளிகிட்டு வெளில ஓடுனானுக. மறக்க முடியாத ஷூட்டிங் அது :D
அதுலருந்து
இன்னைக்கு வரைக்கும் மழைல தேங்கிக்கிடந்த தண்ணியைக் கண்டாலே பயம். வாத்து மாதிரி நடந்து
போவேன்.
Comments