'மசால் தோசை 38 ரூபாய்' - வா.மணிகண்டன்



எழுத்துக்கள் பற்றியோ, எழுதியவர் பற்றியோ எந்தவித முன் அபிப்ராயங்களும் இல்லாமல் ஒரு படைப்பை கையாளுவது நன்றாகத்தான் இருக்கிறது. 

மசால் தோசை 38 ரூபாய்பற்றிச் சொல்வதற்கு முன் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்பற்றி ஒரு நிகழ்வைச் சொல்லியாக வேண்டும். 2015 மதுரை புத்தகக் கண்காட்சியில் கையில் எடுத்துவைத்துக் கொண்டு பணத்தை கொடுப்பதற்குள் மேடம்என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். தான் தேனியிலிருந்து வருவதாகவும் லிண்ட்சே லோஹன் பிரதிகள் தீர்ந்துவிட்டதாகவும் இந்தப் புத்தகத்தைத் தனக்கு கொடுக்க முடியுமாவென்றும் கேட்டபடி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நிறைய வாசிப்பவர் போலும். மறுப்பின்றி கொடுத்துவிட்டாயிற்று. அதன்பிறகு மாரியப்பனின் மனைவிக்கு ஹாய் சொல்லும் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. ஒரு புத்தகத்திற்காக ப்ளீஸ்என்றதை அன்றைக்கு தான் கேட்டேன்.

மசால் தோசை 38 ரூபாய் - தொகுத்திருக்கும் விடயங்கள்.. எழுத்து நடை.. இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாய் என்னைக் கவர்ந்தது கடைசியில் குறிப்புகளுக்கென விடப்பட்டிருக்கும் கோடிட்ட மூன்று வெற்றுத்தாள்கள் தான். வாசிப்பாளனுக்குத் தரப்படும் அடிப்படை முக்கியத்துவம் என்பது இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஆங்காங்கே அடைப்புக் குறியிட்டு கிறுக்கிவைக்கும் பழக்கமுள்ள என்போன்றவர்களுக்கு இது பேருதவியாக அமையும்.

நான் எழுதுறது தான் கட்டுரை, படிச்சா படி படிக்கலைனா போஎன்ற மனப்போக்கு வா. மணிகண்டனுக்கு சுத்தமாக இல்லை என்பதே இங்கு பெரிய ஆறுதல் தான். வாசிப்பவனின் புரிதலில் தான் பிசகுஎன்கிற சமாளிப்பைக் கையிலெடுத்துக் கொண்டு மார்தட்டிக்கொள்ளாமல், மிக எளிய நடையில் தன் தொகுப்புகளை முன்வைத்து, ஒரு எழுத்தாளராக சாமான்யனின் வாசிப்புப் பழக்கத்தைத் தட்டிக்கொடுத்திருக்கிறார். நான்காவது வரியிலேயே புரிந்துவிடும் நிகழ்வின் வர்ணனைகளை பத்து வரிக்கு எழுதி சரி விஷயத்துக்கு வாங்கஎன்பதாய் எந்தப் பத்தியும் அயர்ச்சியூட்டவில்லை. குறிப்பாய், புரியாமல் நெற்றி சுருக்கி திரும்பத் திரும்ப வாசித்து முகம்சுழிக்கவைக்கும் பயமுறுத்தல்கள் அறவே இல்லை.

ஒரு புத்தகத்திலிருந்து உருவாகும் புதிய தேடல்கள்தான் அதன் வெற்றி. சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்ள விளையும் முன்னெடுப்பு படைப்பின ஆளுமையை அடுத்த தளத்திற்குக் கொண்டு சேர்க்கும். மப்பூட்டான் இலைகள்பற்றி கூகுள் செய்து பார்ப்பதுபோல. 

அதிகபட்சமாய் மெனக்கெட்டுப் புரிந்து கொண்டதெனில் எல்லா வாகன ஓட்டிகளும் கருணை பொங்க அந்தப் பெண்மணியின் உடல் மீது ஏறிவிடாமல் ஹிவடிவத்தில் வளைத்துச் செல்கிறார்கள்என்பதுதான். வாகனத்தின் கண்கள் வழியே அவ்வளைவுகளில் ஓட்டிப் பார்த்துக் கொண்டேன். மற்றபடி ஆடைகளின் நிறம், வளையல்களின் எண்ணிக்கை, ‘காலை மடக்கி நீட்டிஉடல்மொழி என்று நான்கு பக்க விளக்கங்களை எந்தப் புள்ளியிலும் அநாவசியமாய் திணிக்காமல் இருந்ததற்கே கூடுதலாய் நன்றி சொல்லியாக வேண்டும்.

இதைவிட என்னை வேறு மாதிரி இன்சல்ட் செய்திருக்க முடியாது. காரணம், அப்பொழுது எனக்குத் திருமணம் ஆகியிருந்தது. பெரியவன் என்று நம்பி திருமணமே செய்து விட்டார்கள். ஆனால் இன்னமும் இந்த போலீஸ்கார்ர் என்னை பொடியனாக நினைக்கிறார் என்பதுதான் பெரிய டார்ச்சராக இருந்தது“ – உடன் பயணிக்கும் பக்கத்து இருக்கைக்காரராய் வெகு இயல்பாயிருக்கிறது இந்தச் சலிப்பு.

யாரை எப்படி ஏமாற்ற வேண்டும். எந்த இடத்தில் என்ன பொய்யைச் சொல்ல வேண்டும் போன்ற சூட்சுமங்கள் கைவரப் பெற்றவர்களாக மாறியிருக்கிறோம்”, ”தனக்கான அத்தனை சிறகுகளையும் கத்தரித்துக் கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதைப் போன்ற வதை உலகில் வேறு எதுவும் இல்லை” – எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கும் Standstill-ன் யதார்த்தம் இங்கு தான் நிகழ்கிறது.

அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்து மண்டைக்குள் புழு நெளிவதாய் பாசாங்கு செய்யும்போதும் சரி, கிள்ளத் துழாவும் பாப்பாத்திக் கிழவியின் விரல்களுக்கு சதை கொடுக்கும் அப்பாவை பார்த்துக் கொண்டிருக்கும்போது சரி, ஒவ்வொரு அனுபவத்தின் வழியேயும் உணர்வுகள் மிகச் சரியாய் கடத்தப்பட்டிருக்கிறது. தவிர ஆங்காங்கே இழையோடியிருக்கும் humour மணிகண்டனின் மற்ற நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை நிச்சயம் எழுப்பும். 

ஒரு பயணத்தில், ஒரு தேநீர் மாலையில் என ஆசுவாசமாய்ப் படிக்க தாராளமாய் சிபாரிசு செய்யலாம். Like a warm up.

# மசால் தோசை 38 ரூபாய்
வா. மணிகண்டன்

யாவரும் பதிப்பகம்

Comments

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..