6174 - சுதாகர் கஸ்தூரி
“நீங்கள் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் “நீங்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் இருக்கும் பதற்றத்தின் மைக்ரோ வேறுபாட்டை உங்களால் உணர முடிகிறதா?
விண்கல் ஒன்று வானத்தில் தெரிகிறது என்பதைவிட விண்கல் ஒன்று, இரண்டு நாட்களில் பூமியைத் தாக்கப்போகிறது எனும்போது கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொள்ளும் தானே? சொல்லப்படும் தொனியின் தன்மையைப் பொருத்தே ஒரு விஷயம் அதன் ஸ்வாரஸ்யத்திற்கான சதவீதத்தைப் பெறுகிறது. இதுதான் Calculate the Target வகையறா.
கையிலெடுத்திருப்பது அறிவியல் புனைவு எனும்போது, காலம் குறித்தான கணக்கீடு இருக்கும்பட்சத்தில் கதை நிச்சயம் வேகமெடுக்கும். இத்தனை மணிக்கு வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்ற பதற்றத்தில், காலங்காலமாக கடைசி இரண்டு வினாடியின்போது Defuse செய்யும் திரைப்பட டெக்னிக் இந்த முறையைச் சார்ந்ததுதான்.
கடைசியாக தமிழில் அறிவியல் புனைவுக்கதையை எப்போது வாசித்தீர்கள்?
Fritz Leiber எழுதிய ‘A Pail of Air’-ன் தமிழாக்கமான “ஒரு வாளி ஆக்ஸிஜன்“ தான் கடைசியாக நான் வாசித்த ஸ்வாரஸ்யமான அறிவியல் புனைவுக் குறுங்கதை. (கவனிக்க, ‘ஸ்வாரஸ்யமான’).
தன் வட்டப்பாதையிலிருந்து வேறொரு புதிய நட்சத்திரத்தால் ஈர்க்கப்பட்டு சூரியனிலிருந்து விலகி பால்வெளிக்கு வெளியே இழுத்துச்செல்லப்படும் பூமிக்கோளில், உயிர்பிழைக்கப் போராடும் ஒரு குடும்பத்தின்Survive தான் கதை.
மிகச்சிறிய குறுங்கதைதான், எனினும் அது சொல்லியிருக்கும் சூரியன் அற்ற அடர் இருள், கரண்டியில் அள்ளி சேமித்துவைக்கும் உறைந்த ஆக்ஸிஜன், சக மனிதர்கள் இருக்கிறார்களா என்ற தேடல்.. என ஒவ்வொரு காட்சியும் நம் கண்முன் நிறுத்தப்பட்டிருக்கும். அதுவும் ஒரு சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்டிக்கும் கதையென்பதால் இன்னும் எளிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
”நீருக்காக பனியை கரண்டி கொண்டு அள்ளும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். மேலாகவும் எடுத்துவிடக்கூடாது. கார்பன் டையாக்சைடு இருக்கும். அடுத்தது நைட்ரஜன், இதுதான் அதிகமாக இருப்பது. அதற்கு மேல் ஆக்சிஜன். அதன்பின்பு ஹீலியம். ஒரு நல்ல விசயம் என்னவென்றால், இந்தக் காற்று வகைகள் எல்லாம் தனித்தனி அடுக்குகளாக அருமையாக அமைந்து இருக்கின்றன. வெங்காயத்தைப் போல.. சிரித்தபடி சொன்னார் அப்பா. அந்த வெங்காயம் என்பது என்னவோ.. எனக்குத் தெரியாது”.
பொதுவாக புனைவுக்கதைகளுக்கு இருக்கவேண்டிய சிறப்பம்சமே, நம் கற்பனைத் திறனுக்குத் தீனி போடுவதுதான். சுஜாதா எழுதியது தவிர்த்து, நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய அறிவியல் புனைவுக்கதைகள் தமிழில் மிகச்சொற்பமே.
‘6174’ நூலும் இதுபோன்ற ஒரு Science fiction தான்.Treasure Hunt என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் கதை. ஆனால் அந்த Treasureஎன்னவென்பதில் தான் எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி தேர்ந்திருக்கிறார். Lemurian Seed Crystalகல்லைத் தேடிப் புறப்படும் குழுவின் பயணத்தில் புதிர்களும் கோலங்களும் தனக்கான ஒவ்வொரு முடிச்சையும் விடுவிக்க, ‘பிரமிட்’ எனும் பிரம்மாண்டம் கொஞ்சங்கொஞ்சமாய் நம் கண்முன் வடிவம்பெருகிறது.
‘எண்’ மற்றும் ‘மொழி’ ஆகிய இரண்டு கூறுகளைக் கொண்டு மனித இனத்தின் அசாத்திய வளர்ச்சிகள் பற்றி நிறைய பேசியிருக்கிறது.
ஆரம்பத்தில் சில பக்கங்களுக்கு நான்லீனியர் சாயல் இருந்தாலும் காலத்தையும், கதாப்பாத்திர அமைப்புகளையும் தெளிவாகப் புரிந்துகொண்டோமெனில் கதைக்களத்தில் தாராளமாய் பயணிக்க ஆரம்பிக்கலாம்.
பிரிந்துபோன காதலர்கள் பல வருடங்களுக்குப் பிறகு குழுவில் இணைந்து தேடலைத் தொடர்கிறார்கள் என்பதாய் சொல்லப்பட்டிருந்தாலும், எங்குமே காதல் வசனங்களோ பிரிவுக்கான புலம்பல்களோ கொஞ்சங்கூட இல்லை. கதையின் போக்கு பிசகாமலிருக்க இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ஒரு லெமூரியனின் கோபம் எப்படியிருக்குமென வாசிப்பவர்களை உணரவைத்திருக்கிறது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஏராளமான தகவல்கள். லெமூரியர்கள், துங்குஸ்கா, எண்புதிர்கள், செய்யுள்கள், படிகவியல், பிரமிடுகள் என கூகுளுக்கு வேலை கொடுக்க வேண்டிய அவசியம் கதை நெடுக ஏராளமாய் கொட்டிக்கிடக்கின்றன. குழப்பமான புதிர் பற்றி கதாப்பாத்திரங்களே சந்தேகம் எழுப்பி அதன்மூலம் நமக்கும் புரியும்வகையில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
தேடப்படும் விஷயங்களைவிட, தமிழில் பிராமி (பிரம்மி) எனப்படும் வட்டெழுத்துக்கள், செப்பேடுகள் பற்றிய ஆங்காங்கேயான தகவல்களும், அதுதரும் புதிர்களும் கூடுதலாய் ஆர்வத்தை தூண்டுகின்றன. புத்தகம் முடித்தவர்கள் முதல்வேலையாய் இணையத்தில் லெமூரியர்கள் மற்றும் பிராமி பற்றி தேடிப்பார்க்கக்கூடும். குறைந்தபட்சம் ‘6174’ என்ற பெயர்க்காரணம் பற்றியாவது.
குழப்பமான புதிர்களை படம்போட்டு பாகம் குறித்திருக்கும் சாமர்த்தியம், பெரும் ஆறுதல்.
# ஒரு வாளி ஆக்ஸிஜன் – (தமிழாக்கம்) - வினையூக்கி செல்வா
# 6174 - சுதாகர் கஸ்தூரி
Comments