ம(னி)தம்??!!



நண்பர் ஒருவரின் வலைப்பூவில் சமூக அக்கறையுள்ள பதிவொன்றை எழுதியிருந்தார் (அப்படித்தான் நினைத்தேன்). ஸ்வாரஸ்யமாகவும் விழிப்புணர்வுத் தகவலாகவும் இருந்ததால் படிக்க ஆரம்பித்தேன். எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. ஆனால் கடைசியில் அவர் சொன்ன தகவல்.. மொத்தப் பதிவின் யதார்த்தத்தையும் கெடுத்துவிட்டது. அவர் தன்னுடைய மதம் பற்றிய பெருமையுடன் பதிவை முடித்திருந்தார். பதிவில் குறிப்பிட்டிருந்த தகவல்களுக்கும் அவருடைய முடிவுரைக்கும் யாதொரு தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்பதிவை படித்த போது நான் கொண்டிருந்த ஆர்வம், அதை படித்து முடித்தபின் அதிருப்தியையே கொண்டுவந்தது.
அவருடைய பதிவில் “சத்யமேவ ஜெயதே“ நிகழ்ச்சி பற்றி கூறியிருந்தார். அமீர்கான் பற்றி விமர்சனம் செய்திருந்தார். மருத்துவத் துறை மற்றும் பிற துறைகளை முன்வைத்து அலசும் அமீர், அந்நிகழ்ச்சியில் திரைப்படத் துறையைப் பற்றியும் விமர்சிக்கலாமே என்ற கேள்வியை முன்வைத்தார். தன்னுடைய துறை சார்ந்த அவலங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதிலுள்ள களைகளை அகற்ற முனையலாமே என்றும் எழுதியிருந்தார். மேலும் தவறுகளை சுட்டிக்காட்டும் நிகழ்ச்சிக்குழுவினர், அதற்கான வேர்களை சரிசெய்யும் பணிகளையும் மேற்கொள்ளலாமே என்றும் கேட்டிருந்தார்.. இது நிச்சயம் பாராட்டுக்குரியதே..
ஆனால் இறுதியில் அமீர்கானின்  மதத்தை குறிப்பிட்டு, இம்மதத்தில் இருந்துகொண்டு இவருக்கு ஏன் இதெல்லாம் தெரியவில்லை?? மனைவி அல்லாத பிற பெண்களுடன் சினிமாவில் முத்தமிட்டு நடனமாடுவதும் அதை உலகிற்கு திரைப்படம் மூலம் காட்டுவதும் தன் மதத்திற்கு எதிரானது என்று அமீருக்கு தெரியாதா? இப்படி மதத்திற்கு எதிராக செயல்படும் இவர் அத்துறையை விட்டு மனம் திருந்தியவராக இதுவரை செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டவராக இன்றே வெளியேறி விட வேண்டும்...! செய்வாரா அமீர்கான்..? 'சமூக தீமையை எதிர்க்கும் மனிதன்' & 'மதம்' என்று இரண்டிலும் தன்னளவில் நேர்மையில்லாத அமீர்கான், இனியாவது திருந்துவாரா..? என்று என்னென்னவோ கூறி முடித்திருந்தார்.
எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை.. நிகழ்ச்சிக்கும் மதத்திற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? சமூக விழிப்புணர்வு பற்றிய விஷயங்களில் மதத்திற்கு என்ன வேலையிருக்கிறது? சமுதாய அக்கறையையும் தாண்டி, தங்களுடைய மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது, மக்களின் அறியாமையையே காட்டுகிறது.
இந்தப் பதிவை படித்துவிட்டு, இவரோ.. இவர் சார்பான மதத்தினரோ வாக்குவாதம் செய்யலாம். நான் இந்தப் பதிவை எழுதக் காரணம், குறிப்பிட்ட இவருடைய மதம் பற்றி மட்டுமல்ல.. பொதுவாக எல்லா மதங்களையும் முன்வைத்துத்தான். அது இந்துவாகவோ கிறிஸ்த்துவமாகவோ இஸ்லாமாகவோ ஏன்.. பௌத்த மதமாகவோ கூட இருக்கலாம். மக்களைப் பற்றியும், சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பற்றியும் விமர்சனம் செய்வதற்கு, அதை சரிசெய்ய தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு, குறிப்பிட்ட மதத்தினை சார்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.. அப்படி செய்பவர்களைப் பாராட்டுவதற்கு, அந்த மதங்களை முன்வைக்க வேண்டிய அவசியமும் இல்லையே..
மதம் பற்றிய மனிதரின் நம்பிக்கை அவரவர் மனதைப் பொறுத்தது. அதை சமூக விழிப்புணர்வில் ஏன் திணிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி..
ஒருவர் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டவோ, நல்லது செய்தால் அதைப் பாராட்டவோ மதம் தேவையில்லையே.. மனதும் கொஞ்சம் மனிதமும் இருந்தாலே போதுமானது. அதைவிடுத்து, நல்லவை செய்பவர்களை “என் மதக்காரன்.. அதனால் நல்லவன்“ என்றும், தவறு செய்பவர்களை “என் மதத்தில் இருந்துகொண்டு இப்படி செய்கிறானே.. இவன் மத துரோகிஎன்றும் மத அடிப்படையில் எதற்காக விமர்சிக்க வேண்டும்?
இதுபோன்ற ஒருசிலரின் அதிகப்பிரசங்கித்தனங்கள், ஒட்டுமொத்தமான தவறான கண்ணோட்டங்களை ஏற்படுத்தி விடுகிறதே..  சக மனிதனை, அவன் செய்யும் செயல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டுமே தவிர, எந்த மதத்தில் இருக்கிறான் என்பதை வைத்து எடைபோடுவது முட்டாள் தனம்.
இவர்கள், தங்களின் மதப் பிரச்சாரங்களை எதற்காக சமூக அக்கறை என்ற போர்வையில் செய்திட வேண்டும்? வெளிப்படையாகவே செய்துவிட்டுப் போகலாமே..
நமக்குத் தேவை, மதங்கள் அல்ல.. மனிதம் தான். நாலு நாள் பட்டினி கிடப்பவனிடம் நம் மதங்களின் பெருமை பிதற்றல்கள் செல்லுபடியாகாது.. அவனுக்குத் தேவை அப்போதைக்கு அவன் பசிதீர்க்கும் உணவு மட்டுமே. அதைத் தருபவன் தான் அந்த நிமிடத்தில் அவனுடைய இறைவன். இது பலருக்குப் புரிவதில்லை.
மீண்டுமொருமுறை நினைவுபடுத்துகிறேன்.. இந்தப் பதிவு, குறிப்பிட்ட ஒரு மதம் என்றில்லாமல், எல்லா மதங்களையும், மதப்பிரச்சாரம் செய்பவர்களையும் முன்வைத்து எழுதப்பட்டது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு, பதிவின் உட்பொருளைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
.
.

Comments

Unknown said…
இந்த பதிவுலகத்திலையும் அதைத்தாண்டிய சமூகத்தளங்களிலும் படித்த இளைஞர்கள் பலரும் இது போன்று தன் மதத்தை முன் நிறுத்தி எழுதுவதும், அதை எதிர்பவர்களை விமர்சிப்பதும் தினம் தினம் நடந்துகொண்டு தான் இருக்கிறது, கல்வி மனிதனின் பண்பட்ட அறிவை வளர்க்கத்தான் அன்றில் இன்னும் நாம் சாக்கடைப்புழுக்களாய் மாற அல்ல, மிகச்சரியாய் சொன்னீர்கள் எமக்கு அன்பு மட்டுமே மதம்.. அன்பை போதிப்பவர் அல்லாவாய் இருந்தாலும் ஆண்டவனாய் இருந்தாலும் ஆறுமுகமாய் இருந்தாலும் எமக்கு ஒன்று தான்... அன்பின் போர்வைக்குள் உயிர்களை பார்த்தால் எத்தனை சுகமாய் இருக்கும்.... சமீபத்தில் நடக்கும் அத்தனை விவாதங்களையும் அதற்கு பின்னான மதப்போர்வைகளையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்... இறுதியாய் படித்த இளைஞர்கள் பலரிடம் தான் முற்போக்கு சிந்தனைகள் செத்துக்கிடக்கின்றன........... பதிவின் இறுதிவரிகளின் அழுத்தம் மிக அருமை... பிரமித்தேன் இந்திரா...
டீவீ பார்ப்பது தப்புன்னு அவுங்க மதம் சொல்லுது. அந்த தப்பை பண்ண அவர் அமீர்கானை குறை சொல்வது நகை.
மதம் பற்றிய மனிதரின் நம்பிக்கை அவரவர் மனதைப் பொறுத்தது. அதை சமூக விழிப்புணர்வில் ஏன் திணிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி.///
சரியான கேள்விங்க! ஆனால் பதில் கிடைக்கிறது தான் கஷ்டம்.
மதத்துக்கும் மனிதத்துக்கும் உள்ள இடைவெளியை ரொம்ப அழுத்தமா சொல்லியிருகீங்க அக்கா!
மதமென்னும் பேய் பிடிக்காதிருக்கட்டும் !
மதங்கள் சொல்வது எந்தக் காலத்துக்கும் பொருந்தும் என்று நினைப்பது தவறு.எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த மதம் சொல்லும் அத்தனை விஷயங்களையும் பின்பற்றுபவர் யாருமில்லை.
ஸலாம் சகோ.இந்திரா,
எனது பதிவை படித்தமைக்கும் இங்கே மறைமுகமாக விமர்சித்தமைக்கும் மிக்க நன்றி சகோ..!

ஒரு விஷயம் கோர விரும்புகிறேன் சகோ.இந்திரா..! மற்ற மதங்கள் போல, "வாழ்க்கை வேறு; மதம் வேறு" என்று ஒரு முஸ்லிம் வாழவே முடியாது சகோ.இந்திரா..!

"இதை இப்படி செய்..
அதை அப்படி செய்..
அதை அப்படி செய்யாதே...
இதை இப்படி செய்யாதே...
இதெல்லாம் உனக்கு கூடும்...
அதெல்லாம் உனக்கு கூடாது...
என்று... ஒரு முஸ்லிமின் வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் அவர் பிறக்கும் முன்னரும்... அவர் இறந்த பின்னரும்.. இஸ்லாம் அவர் கூடவே வரும்..!

நான் ஒருவருக்கு ஓர் அறிவுரை சொன்னால்... எந்த விஷயத்தை பற்றி நான் சொன்னேனோ
அதை நான் என்னளவில் கடைபிடிப்பவனாக இருக்க வேண்டும்..! அதுவே நேர்மையான செயல் அல்லவா சகோ.இந்திரா..? இல்லையேல் அது போலிதானே சகோ.இந்திரா..? போலித்தன்மையை இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை..!

'அமீர்கான் செய்வது தவறு' என்று நான் சொல்ல இந்தியாவில் சட்டம் ஏதும் எனது சார்பாக இல்லையே சகோ.இந்திரா..! அவர் திருந்த அவரின் மதம் ஒன்று மட்டுமே எனக்கு அஸ்திரம்..! அதனால்...அந்த பதிவுக்கு அதுவே சரியான முடிவு சகோ.இந்திரா..!

அவர் திருந்த வேறு ஒரு சரியான-தெளிவான வழி உங்களிடம் இருந்தால் தாராளமாக முன்மொழியுங்கள்..! எனது பதிவில் இஸ்லாம் தொடர்பான பாராவை தூக்கி விட்டு... உங்கள் முன்மொழிதலை அங்கே என் பதிவில் நீங்கள் அனுமதித்தால் பேஸ்ட் பண்ணவும் நான் தயார் சகோ.இந்திரா..! நமக்கு சமூக அக்கறை கொண்ட ஆமீர்கான் இனி திருந்தினால் நல்லதுதானே..! :-))
//இது நிச்சயம் பாராட்டுக்குரியதே..
//

---தங்கள் பாராட்டுக்கு மிக்க மன்றி சகோ.இந்திரா.

//மனைவி அல்லாத பிற பெண்களுடன் சினிமாவில் முத்தமிட்டு நடனமாடுவதும் அதை உலகிற்கு திரைப்படம் மூலம் காட்டுவதும்//

---இதையெல்லாம்... 'சரியான செயல்' என்று ஒருபோதும் கூறவே மாட்டீர்கள் என்று மனதார நம்பித்தான் மேலே உள்ள பின்னூட்டம் போட்டுள்ளேன் சகோ.இந்திரா..!
சீனு said…
// நமக்குத் தேவை, மதங்கள் அல்ல.. மனிதம் தான்.//
ஒரு வாசகம் என்றாலும் நெத்தியடி போல் சொல்லியுலீர்கள்.
//ரேவா //

உங்கள் புரிதலுக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.
வருகை தொடரட்டும்.
//வால்பையன்//

புரிதலும் கண்ணோட்டமும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.. அதனாலோ என்னவோ..
(நண்பரின் பதிவில் உங்கள் பின்னூட்டங்கள் படித்தேன். அவருடைய பதிலும் படித்தேன்.)
அவரவர் செயல் அவரவர்க்கும் நியாயமாய்ப்படுவது நியதி போல.
//யுவராணி தமிழரசன் said...

சரியான கேள்விங்க! ஆனால் பதில் கிடைக்கிறது தான் கஷ்டம்.
மதத்துக்கும் மனிதத்துக்கும் உள்ள இடைவெளியை ரொம்ப அழுத்தமா சொல்லியிருகீங்க அக்கா!//

கருத்துக்கு நன்றிங்க.
//இராஜராஜேஸ்வரி said...

மதமென்னும் பேய் பிடிக்காதிருக்கட்டும் !//

சரியாய் சொன்னீங்க. நன்றி தோழி.
//T.N.MURALIDHARAN //


வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
//~முஹம்மத் ஆஷிக் citizen of world~ //


நண்பரின் வருகைக்கு நன்றிகள். அடுத்தவர் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்லணும் என்று நினைப்பவள் அல்ல நான். நான் கூறியதுபோல தங்கள் பதிவில் உள்ள கருத்துக்களுடன் ஆரம்பத்தில் ஒத்துப்போன நான், இறுதிக் கருத்தில் வேறுபடுகிறேன். நிகழ்ச்சி பற்றிய விமர்சனங்களும், ஆலோசனைகளும் தாங்கள் சொன்னபடி முற்றிலும் சரியே.. ஆனால் அதற்கு மதத்தினை முன்வைத்துப் பேசியிருந்ததுதான் யதார்த்தத்திலிருந்து விடுபட்டுவிட்டது. உங்கள் நம்பிக்கை உங்களுக்கு. அது தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் பொதுவான, சமூக அக்கறையுள்ள கருத்துக்களில் எதற்காக திணிக்க வேண்டும் என்பது தான் என் கேள்வி.
//அவர் திருந்த அவரின் மதம் ஒன்று மட்டுமே எனக்கு அஸ்திரம்..//
இது சரியான பதில் அல்லவே.. ஒரு மனிதனை திருத்த மதம் எனும் ஆயுதம் தேவையற்றது.
//அவர் திருந்த வேறு ஒரு சரியான-தெளிவான வழி உங்களிடம் இருந்தால் தாராளமாக முன்மொழியுங்கள்..// உங்கள் பதிவில் மதம் சார்ந்த வரிகளை எடுத்துவிட்டு படியுங்கள். அதுவே போதும். தவறுகளை சுட்டிக்காட்டுதல் இருக்கலாம். ஆனால் எதன் அடிப்படையில் என்பதில் கவனம் தேவை.

//இதையெல்லாம்... 'சரியான செயல்' என்று ஒருபோதும் கூறவே மாட்டீர்கள் என்று மனதார நம்பித்தான் மேலே உள்ள பின்னூட்டம் போட்டுள்ளேன் சகோ.இந்திரா..! //

நான் ஏற்கனவே உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். மதம் தவிர.. அமீர்கான் மட்டும் தான் இப்படி பிற பெண்களுடன் ஆட்டம் போடுகிறாரா? இந்து, கிறிஸ்டியன் ஹீரோக்களும் சினிமா உலகில் உண்டுதானே.. நல்லது நினைப்பவர்கள் தங்கள் மதம் சார்ந்தவர்களை மட்டும் வழிநடத்திச் செல்லாமல், பொதுவாக மனிதர்களைத் திருத்த வேண்டும் அல்லவா? மதம் விடுத்து, மனிதத்தைப் பார்ப்போம்.
மதத்தை முன்நிறுத்தாமல் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.. சகோதரி என்ற முறையில் என் முதல் ஆதரவு கட்டாயம் உங்களுக்குத் தான்.

வருகை தொடரட்டும் சகோ..
கருத்திற்கு நன்றி.
:-)
//சீனு said...

// நமக்குத் தேவை, மதங்கள் அல்ல.. மனிதம் தான்.//
ஒரு வாசகம் என்றாலும் நெத்தியடி போல் சொல்லியுலீர்கள்.//


நன்றி சீனு..
வருகை தொடரட்டும்.
நமக்குத் தேவை, மதங்கள் அல்ல.. மனிதம் தான். நாலு நாள் பட்டினி கிடப்பவனிடம் நம் மதங்களின் பெருமை பிதற்றல்கள் செல்லுபடியாகாது.. அவனுக்குத் தேவை அப்போதைக்கு அவன் பசிதீர்க்கும் உணவு மட்டுமே. அதைத் தருபவன் தான் அந்த நிமிடத்தில் அவனுடைய இறைவன். இது பலருக்குப் புரிவதில்லை.// என்னுடைய ஆதங்கத்தை தங்கள் வரிகளில் கண்டேன் .
Unknown said…
என் வாழ்க்கையில் மதம் என்ற பேச்சுக்கே இடமில்லை அதையும் தாண்டி வாழ்பவள் நான்..

மதம் என்பது நம்பிக்கையின் பொருட்டு மனிதன் தனக்கு தானே உருவாக்கி கொண்டது ....

அருமையான கருத்துக்கள்....

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

மரணவலி தரும் உன் மௌனம்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்