உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. கேட்கலாமா?


உங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. கேட்கலாமா?
துணையை இழந்து தனியே வாழும் ஒரு பெண்ணை உங்கள் வாழ்வின் Companionனாக ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?”
ஆம் எனில் இன்னொரு கேள்வி..
காதலை அல்லது கணவனை இழந்து தனியே போராடும் உங்கள் மகளோ சகோதரியோ.. அல்லது தோழியோ இருப்பின் அவர்களுக்கென இன்னொரு வாழ்வை அமைத்துத் தர முயற்சிப்பீர்களா?”
ஆம் எனில் உங்களுக்கான என் கடைசி கேள்வி..
உங்கள் அம்மா அல்லது அப்பா, அதே சூழ்நிலையில் உங்கள் கண்முன் தனியே வாழ்ந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு இன்னொரு Companion தேவை என்பதை அட்லீஸ்ட் உணர்ந்தாவது இருக்கிறீர்களா??”
இக்கேள்விக்கு பெரும்பாலும் நீங்கள் புருவம் சுளிக்கலாம் அல்லது மௌனமாயிருக்கலாம். இதற்கு பெரும்பாலான.. அல்லது ஒட்டுமொத்த பதிலும் இல்லைஎன்பது தான் நிதர்சனம்.
ஒரு முறை அப்பாவின் காதல்என்ற குறும்படத்தை தற்செயலாக காண நேர்ந்தது. மனைவியின் முன்னாள் காதலன் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்ததும், இறுதி மரியாதை செலுத்த அவளை அழைத்துச் செல்லும் கணவனின் கதாப்பாத்திரத்தை, அவர்களுடைய மகன் வாயிலாக சொல்லும் குறும்படம் அது. சுமாரான நடிப்பு என்றாலும் கதைக்கரு மிகவும் அழுத்தமானது. இதில் அப்பாவின் காதல் என்ற தலைப்பு தான் Highlight.
இன்றைய காலகட்டத்தில் ‘Ex’ காதல்களைப் புரிந்துகொள்ளும் தம்பதிகள் அதிகம். ஆனால் இப்பதிவில் முன்வைக்கப்படும் சந்தேகம் அது சார்ந்ததல்ல. ஒருவேளை அந்த மகன் கதாப்பாத்திரத்தில் நம்மை நிறுத்திப் பார்ப்போமெனில் நமது நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்? ஒரு மகனாய், மகளாய் நம் அம்மாவின் இன்னொரு காதலை எப்படி எடுத்துக்கொண்டிருப்போம்?
பொதுவாக, அப்பாவைக்கூட நாம் கண்டுகொள்வதில்லை, அவருக்கு எத்தனை காதல் வேண்டுமனாலும் இருந்திருக்கலாம். எத்தனை துணையை வேண்டுமானாலும் நிர்ணயித்துக் கொள்ளலாம். நான் என் அப்பாவுடன் பேசுவதில்லைஎன்ற ஒற்றை பதிலில் நம் கோபத்தை வெளிப்படுத்தி நமக்கான நியாயத்தை புதுப்பித்துக் கொள்கிறோம் தானே!
ஆனால் நம் அம்மா..? அப்பா இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரையே உருகி உருகி காதலிப்பவள், குடும்பத்தையே உலகமாய் கருதுபவள், அழும்போது ஆறுதல் சொல்பவள், பிள்ளைகளுடன் ஃப்ரெண்ட்லியாக அரட்டை அடிப்பவள். வேறென்ன? அதிலும் அப்பா இல்லாத வீடு எனில், தனியே போராடி குழந்தைகளை ஆளாக்கும் கதாநாயகி. தியாகச் சுடர். தைரியமான பெண்மணி. ஒரு அம்மாவிற்கென நாம் வகுத்து வைத்திருக்கும் Graph இதுதான். அம்மா என்பவள் எப்போதும் வரையறைக்குட்பட்ட கலாச்சார கட்டுப்பாட்டுக் குப்பைகள் நிறைந்தவளாகத்தான் இருக்கவேண்டுமென நாமாய் நிர்ணயித்துக்கொண்டுள்ளோம். இது எத்தனை அபத்தமானது!
‘M.குமரன் S/o மஹாலஷ்மிதிரைப்படத்தைப் பார்த்து நம்மில் எத்தனை பேர் அம்மா-மகன் உறவைப் பற்றி சிலாகித்திருப்போம்? நதியா கதாப்பாத்திரம் எத்தனை பேருக்கு தன் அம்மாவை நினைவுபடுத்தியிருக்கிறது? “ஒரு பொம்பளை.. தனியா நின்னு எல்லாத்தையும் சமாளிச்சு பிள்ளைகளையும் ஆளாக்கியிருக்குறாஎன்ற அவளைப் பற்றிய கைதட்டல்களுக்கு பிள்ளைகளாக எத்தனை பெருமையுடன் நம் காலரைத் தூக்கிவிட்டிருப்போம்?
எல்லாம் சரி தான். ஆனால் இங்கு தனியே வாழும் தன் தாய் அல்லது தந்தைக்கு இன்னொரு வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர தயாராய் இருப்பவர்கள் அல்லது அவர்களாக அறிமுகப்படுத்தும் இன்னொரு துணையை ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகள் எத்தனை பேர்? சமுதாயத்தை விட்டுத் தள்ளுங்கள். கணவனை இழந்த தாய், நட்பாய்கூட ஒரு ஆணிடம் பேசுவதை எந்த பிள்ளைகளும் (பெரும்பாலும்) விரும்புவதில்லை. Companionship, தன் மீதி வாழ்நாட்களை பகிர்ந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படும் துணை. அது sexual relationship என்பதாகவும் இருக்கலாம். அந்த இன்னொரு relationship, தன் தாய் / தந்தைக்கு எந்த அளவிற்கு தேவை என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவப்பட்ட மகன் / மகள் எத்தனைபேர்?
புரிதலில் பிடித்திருந்தாலும் தன் பிள்ளைகளுக்காக, அவர்கள் அந்த உறவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்ளமாட்டார்களோ என்ற பயத்தினாலேயே நிறைய பெண்கள் தனக்கென புதிதாக வரும் இன்னொரு துணையை புறக்கணிக்கிறார்கள்.
கணவனை இழந்த மகளையும் சகோதரியையும் பார்த்து பொங்கியெழும் போராளிகள் கூட, சிறுவயதிலேயே கணவனை இழந்து தனியே வாழ்ந்துவரும் தன் தாய் பற்றி எப்போதும் யோசிப்பதில்லை. தன் தாயின் நிலையை நன்கு புரிந்தவன் ஆதலால் அதுபோன்ற ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகிறானே தவிர, தன் தாய் கடைசிவரை அதே மனோரமா ஆச்சியாகத்தான் இருக்க வேண்டுமென நிர்ணயிக்கின்றான்.
இதைக் கேட்ட சில தோழிகளும் கூட, “அம்மாவுக்கு வரன்கள் தேவை என்று விளம்பரம் தரச்சொல்றீங்களா? ப்ராக்டிக்கலா முடியாதே இந்திரா. அதுவுமில்லாம அவள் அந்தக்காலத்துப் பெண்ணாச்சே. நமக்குப் புரியிறது இருக்கட்டும். முதல்ல அவளுக்கே இதுமாதிரியான பேச்சுக்கள் புரியுமா?” என்று முகம் சுளிப்பதைப் பார்த்திருக்கிறேன். என் கேள்வியின் உள்ளர்த்தம் அதுவல்ல.
நேத்து வீட்டுக்கு வந்தார்ல ஒரு Uncle.. அவரைப் பத்தி நீ என்ன நினைக்கிற?“ என்று தன் பிள்ளையிடம் தயக்கமாய், ஆர்வமாய் கேட்கும் அம்மாக்களின் கேள்விகளை புரிந்துகொள்வதற்கும்,. அடுத்தமுறை அவரைபார்க்கும்போதெல்லாம் அனிச்சையாய் முகம் திருப்பிக்கொள்ளாமல் இருப்பதற்கும், “அவர்எண் கொண்ட தொலைபேசி அழைப்பைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் வெறுப்பை தூக்கி எறிவதற்கும் நாம் கடக்க வேண்டிய தூரம் எப்போதும் தொலைவாகவே இருக்கிறது.
வாழ்வின் மீதி நாட்களை பகிர்ந்துகொள்ள தனக்கென ஒரு நட்பு எல்லோருக்கும் அவசியம் தேவை. அதில் செக்ஸ் என்பது அவரவர் விருப்பம். Teenage பையனைப் பொறுத்தவரை, ‘தன் அம்மா யாரோ ஒரு அம்பளையிடம் பேசுறா.. ஏதோ தப்பான உறவுஎன்ற அருவறுப்பு தான் தோன்றுமேயொழிய நிச்சயம் அதற்கான புரிதல் ஏற்படுவதில்லை. நாற்பத்தி ஐந்து வயதுத் தாயின் தனிமையை இருபத்தி ஐந்து வயதிலும் கூட பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதுதான் so called ‘the ugly truth’.
தன் தவறை உணர்ந்து, சாரதா டீச்சரைத் தேடச் சொல்லும் இயக்குநர் வசந்தின் அனுகதாப்பாத்திரம் எத்தனை வீடுகளில் இருக்கக்கூடும்? இன்னொரு உறவை அவளுக்கு ஏற்படுத்தித் தரவில்லையெனினும், அவளாய் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய உறவை புரிந்து கொள்ள நமக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகும்?
அப்பாவின் replacement சாத்தியப்படாவிட்டாலும், நம் அம்மாவின் நல்லதொரு நண்பனாக, அவளின் துணையாக, அவளாய் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் நாம் தடுக்காமல் புரிந்துகொண்டாலே போதும்.
உங்கள் முற்போக்கு சிந்தனையை முதலில் வீட்டிலிருந்து ஆரம்பியுங்கள். அவசியப்படாவிட்டாலும் உங்கள் அம்மாவிடம் இப்பதிவு பற்றி பேசவாவது முயற்சியுங்களேன்.
.

Comments

முகத்தில் அறையும் உண்மைகள். அறிவு சரி என்று சொல்லும் மனது ஏற்றுக் கொள்ளாது என்பதே உண்மை.சிந்திக்க வைக்கும் பதிவு. இந்த மாறுதல்கள் நடக்க இன்னும் அரை நூற்றாண்டாவது ஆகும்

Popular posts from this blog

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..