நான், நீங்கள், அவர்கள்..!

குஷி திரைப்படம் வெளியான தருணம் அது. தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பும் காட்சிகள் ஸ்வாரஸ்யமாய் இருக்கும். ஒரு சாயந்திர வேலையில் அம்மா, அப்பா, மாமா சகிதம் வரவேற்பறையில் பார்த்துக்கொண்டிருந்த காட்சி அது. விஜய் தொலைபேசியில் தன் அம்மாவிடம் ஐ லவ் யூசொல்லிக்கொண்டிருப்பார். நான் வெகு சாதாரணமாய் மாமாவின் பக்கம் திரும்பி விஜய் மாதிரி நீங்க உங்க அம்மாகிட்ட ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களா மாமா?“ என்றேன். அதற்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று இப்போதும் எனக்கு நினைவில்லை. மாறாக அடுப்படியில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பாட்டியின் (மாமாவின் அம்மா) அழுகைச் சத்தம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
என்ன ஏதேன எங்களுக்குப் புரியும் முன்னமே விருவிருவென வெளியே வந்தவள் எத்தாத்தன்டி வார்த்தை சொன்னா கேட்டியா? இதையெல்லாம் கேட்டுகிட்டு நா உயிரோட இருக்கணுமா?” என்று கத்த ஆரம்பித்தாள். நான் திரும்பவும் அதையே சொன்னேன். ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களானு தானே கேட்டேன். வேற என்ன தப்பா கேட்டேன்?“. மறுபடியும் ஆங்காரமாய் கத்த ஆரம்பித்தவளை அன்று முழுவதும் ஆளாளுக்கு சமாதானம் செய்து கொண்டிருந்தனர். அவளுக்குப் புரியல.. சின்னப்பொண்ணு தானே. விடுங்கம்மாஎன்று அம்மா சொன்னதன் காரணம் அப்போது எனக்குப் புரியவேயில்லை.
இதற்கு முன் ஒரு பதிவில் எழுதிய ஞாபகம், கணவன் / மனைவி கூட ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ சொல்லிக்கொள்வதில்லை என. தன் அன்பை வெளிப்படுத்த லவ் யூஎன்ற வார்த்தை போதுமாயிருக்கிறது சிலருக்கு. ஆனால் அதையும் இன்னாரிடம் தான் கூற வேண்டுமென தனக்குத் தானே வரையறுத்து வைத்துள்ளார்கள்.
வைரமுத்துவை மிகப் பிடித்த நண்பருக்கு அவர் பற்றிய உரையாடல் வீடியோவை வாட்சப்பில் பகிர்ந்தபோது, பதிலுக்கு உணர்ச்சிவசமாய் நண்பர் அனுப்பிய லவ் யூ இந்திராவுக்கு சந்தோசம் தவிர வேறு என்ன அர்த்தம் இருந்துவிடப் போகிறது? ஒரு சின்ன ஸ்மைலியுடனான நன்றி அந்நட்பை இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லுமே தவிர நிச்சயம் படுக்கைக்கு அல்ல.
நாம் வெகுசாதாரணமாய் எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் இன்னொருவருக்கு அதிமுக்கியமாய் தோன்றலாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்து கடந்து செல்லலாமேயொழிய கோபப்பட்டு காயப்படுத்துவது அநாவசியம். என்ன இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்காங்க?? நீ கோபப்படாம எடுத்துச் சொல்லி கிண்டல் பண்ணிகிட்டு இருக்க..?” என்ற கேள்விக்கு எதுக்கு கோபப்படணும்? தன்னால புரிஞ்சுகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. ஃப்ரீயா விடுஎன்ற என் பதில் எப்போதும் தயாராய் இருக்கும். பாலச்சந்தர் பட ஹீரோயின்கள் போல தன்னைச் சுற்றி நெருப்புவளையத்தை ப்ரயோகித்துக்கொண்டே இருப்பது சாத்தியமில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் அதிர்ச்சியடைந்து ஒப்பாரி வைக்காத திடம் வாய்த்திருக்கிறது.
உணர்ச்சி வசத்தில் வெளிப்படும் சின்னச்சின்ன வார்த்தைகளை வைத்து உறவுகளையோ நட்பையோ எடைபோடாதீர்கள். அவ்வார்த்தைகளுக்கென நீங்கள் வரையறுத்து வைத்திருக்கும் அர்த்தங்களை அவர்கள் அறிந்திடாமல் கூட இருக்கலாம்.
லவ் யூ மச்சீஸ்.. 
.


Comments

// லவ் யூ மச்சீஸ்.. //

உசுப்பேச்தி உசுப்பேத்தியே ஒருத்தரையும் உறங்க விடமாட்டீங்களே...

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..