ஓடும் பேருந்தில் வன்புணர்வு – இந்தியா ஒளிர்கிறது..!!

காலையில் ஒரு கப் டீயோடு சாவகாசமாய் பேப்பரை மேய்ந்துகொண்டிருக்கும்போது கண்ணில் பட்டிருக்கலாம் இந்தச் செய்தி.
ஓடும் பஸ்ஸில் மாணவி பலாத்காரம்...! டெல்லியில் பயங்கரம்! லோக்சபா, ராஜ்யசபாவில் இதுகுறித்து அமளி..! மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவரை பார்த்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர்..! குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு..! கடந்த வருடம் மட்டும் டெல்லியில் 572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்றும்,  மும்பையில் 239 பெண்களுக்கு இதே கொடுமை நேர்ந்துள்ளது என்றும் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது..!
படித்துவிட்டு எந்தவிதப் பதட்டமுமின்றி செய்தித்தாளை மடித்துவைத்துவிட்டு, வழக்கமான வேலைகளில் ஈடுபடச் சென்றுவிடலாம். நியாயம்தானே.. நமக்கேன் இதுபற்றியெல்லாம் கவலை?? நண்பர்களுடன் பேசும்போது, கசாப் தூக்கிலப்பட்டதைப் பற்றியும் பெட்ரோல் விலையேற்றம் பற்றியும் முடித்துவிட்டு, அவர்களில் யாரேனும் இதுபற்றிப் பேச்சையெடுத்தால் ஆமா.. நா கூட காலேல படிச்சேன். ரொம்பக் கொடுமையான செய்தி தான். இவனுகளையெல்லாம் சுட்டுக்கொள்ளனும்பா“ என்று, தன்னுடைய பொதுஅறிவின் பெருமையைப் பீற்றிக்கொள்ள ஒரு செய்தி கிடைத்தது. அது போதும். அதைத் தாண்டி இந்தச் செய்தியில் நம்முடைய பங்கென்று எதுவும் இருப்பதாய் நமக்குத் தெரிவதில்லை.
“நல்லவேளை அந்தப்பக்கம் தான் இந்தமாதிரி கொடுமையெல்லாம் நடந்திருக்கு. நம்மூர்ல நடக்கல“ என்று நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொள்வோம். எதிர் வீட்டில் டியூசன் படித்துக்கொண்டிருக்கும் உங்கள் பெண்ணும், கோவிலுக்குச் சென்று விபூதி கொண்டுவரும் உங்கள் மனைவியும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற நிம்மதியொன்று போதும் உங்கள் பெருமூச்சிற்கு.
பக்கத்து வீட்டில் தீப்பிடித்தால் ஓடிச்சென்று அணைக்கும் பதட்டத்தில், தீ தன் வீட்டிற்கு பரவிடக்கூடாது என்ற சுயநலம் எந்த அளவிற்கு உண்மையோ.. அதேயளவிலான உண்மை, இந்த மாதிரியான சம்பவங்களைக் கேள்விப்படும்போது அடுத்தநிமிடம் சகஜமாய் எடுத்துக்கொண்டு வழக்கமான வேலைகளில் ஈடுபடுவதிலும் இருக்கிறது. மனித மனம் எந்தளவிற்கு மறத்துப்போய்விட்டது என்பதற்கு இதைவிட சிறப்பானதொரு உதாரணத்தை சொல்லிவிட முடியாது.
வேலைக்குச் செல்லும் இடங்களில்.. படிக்கச் செல்லும் இடங்களில்.. வசிக்கும் இடங்களில்.. என்பதிலிருந்து முன்னேற்றமடைந்து தற்போது ஓடும் பேருந்திலேயே வன்புணர்வு நடக்க ஆரம்பித்துவிட்டது. வாழ்க்கை அந்தளவிற்கு நவீனமயமாக்கப்பட்டுவிட்டது போலும்!! இந்தியா வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சந்தோசமாக ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்..
ஒரு சக மனுஷியை.. தன்னைப்போலவே ரத்தமும் சதையுமான ஒரு உயிருள்ள உடம்பைக் கொண்ட ஒரு பெண்ணை.. காட்டுமிராண்டித்தனத்தைவிட கேவலமாய் அனுபவித்து, தூக்கி வீசியெறிந்த மிருகங்கள் வாழும் நாடு இது. இவர்களை மிருகங்கள் என்று சொன்னால் அது மிருகங்களை அவமானப்படுத்தும் சொல்லாகிவிடக்கூடும்.
ஒரு பெண்ணை, அவள் தன் மனைவியாகவே இருந்தாலும் கூட, அவளுடைய விருப்பம் இல்லாதபட்சத்தில் ஒரு கணவனாயிருந்தாலும் தொடுவதற்கு உரிமையில்லை என்கிறது நம் நாட்டு சட்டம். ஆனால் இந்தவகைச் சட்டங்கள் எந்தளவிற்கு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை இன்றைய சூழலில் செய்திகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த இரண்டு நாட்களில் மட்டும் வந்த செய்தியல்ல இது. ஆங்காங்கே நடந்தவையும், நடந்துகொண்டிருப்பவையும் தான் இவை. கைக்குழந்தையிலிருந்து 90 வயது அம்மையாருக்கு வரை, பாதுகாப்பில்லாத சமூகமாய் மாறிக்கொண்டிருக்கிறது என்பது அசிங்கமான, ஆணித்தரமான உண்மை.
பெண்களை, வெறும் புணர்வுக்காக மட்டுமே பார்க்கப்படும் பார்வை மாறுவதற்கு, இன்னும் எத்தனையாயிரம் ஆண்டுகளைக் கடக்க வேண்டுமென்று அனுமானிக்கவே முடியவில்லை.
கசாப் நிகழ்விற்கு தரப்பட்ட முக்கியத்துவமும் கண்டனங்களும் கூட, இது போன்ற சம்பவங்களுக்கு தரப்படவில்லை என்பது மறுக்கமுடியாத வேதனை. மனிதநேயம்.. பெண்ணியம் பற்றி வாய்கிழியப் பேசிய வலையாதிக்கர்களும் கூட, இது போன்ற சம்பவங்களுக்கு வாய்மூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. (மிகச்சிலரைத் தவிர) நமக்கென நாலு தத்துவம், இரண்டு கவிதையென தன் வழக்கமான பாணிகளை இப்போதும் கடைபிடிக்கும் பதிவர்களைப் பார்த்து உண்மையிலேயே பெருமைப்பட்டுக்கொள்வோம். கும்கி விமர்சனம் போடுவதில் காட்டும் பதட்டத்தில் ஒரு சதவிகிதமாவது, இதுபோன்ற சபவங்களுக்கான கண்டனங்களில் காட்டியிருந்தால் பாராட்டியிருக்கலாம்.
அடிவயிறு முழுக்க சேதப்பட்டு.. (இந்த வார்த்தையின் கற்பனையை நினைத்துப்பார்க்கும்போதே வயிற்றுக்குள் ஒரு வித உள்ளிழுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை)  மருத்துவமனையில் அபாயநிலையில் இருக்கும் அந்தப் பெண் போல, இன்னும் எத்தனையெத்தனையோ பெண்கள் இந்தநிமிடமும் போராடிக்கொண்டிருக்கலாம். வெளிச்சத்திற்கு வருவது பாதி சதவிகிதமாகவே இருக்கலாம்.
என்ன செய்யப்போகிறோம்??? எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது மனிதம்??
எப்படியும் இதை மறக்கடிக்க இன்னொரு பயங்கரம் நிகழும். காத்திருப்போம். மறப்பதற்காக..!!
.
.

Comments

வன்முறையிலும் உரிமை மீறல்களிலும்
டெல்லி தலை நகரமாகவே மாறி வருவது
அச்சமூட்டுகிறது.தாங்கள் சொல்லிச் சென்ற
விஷயம் எல்லாம் மிகச் சரி.எதையும் செய்தியாக
மட்டுமே பார்க்கும் மனோ பாவத்திற்கு நாம்
அடிமையாகிவிட்டோமோ என பயமாய் இருக்கிறது
மனம் சுட்டுப் போகும் பதிவு
அன்னை பார்த்துவிட்டு வந்தாராம். இன்னும் எத்தனை நாட்கள் மனத்தை அடித்துக் கொல்லும் செய்திகள் வருமோ. அமெரிக்கக் குழந்தைகள் செய்தியை இந்தச் செய்தி பின் தள்ளியது போல, அடுத்த செய்தி வரும்வரை ...
உண்மையிலேயே வருந்தத்தக்க நிகழ்வு! இனியும் இந்த நிகழ்வுகள் தொடராதிருக்க வேண்டும்! நன்றி!
///என்ன செய்யப்போகிறோம்??? எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது மனிதம்??///

மனிதமா...? அது
மண்ணுலகிலிருந்து
மறைந்து...
மாமங்காக் காலமானபின்
‘மனிதமெங்கே? மனிதமெங்கே?’ என
மனிதத்தைத் தேடுகிறீர்கள்?

மனிதனே
மறைந்துபோய்
மிருகங்கள் உலவும் நாட்டிலே..
‘மனித’த்தை தேடுகிறீர்கள்?

பகுத்தறிவு பாடகன்..
கலைவாணர் என்.எஸ்.கே.. பாடலைப் போல...

“எங்கே.. தேடுவேன்..? ‘மனிதத்தை’...
எங்கே தேடுவேன்...?

சந்திரமண்டலத்தில் சென்று ஒளிந்து கொண்டாயோ?

செவ்வாய் கிரகத்தில் மறைந்துவிட்டாயோ?” என

மறைந்துவிட்ட..
மறந்துவிட்ட
மறைக்கப்பட்ட
‘மனித’த்தை தேட வேண்டியதுதான்...

எல்லோரும் பாடுங்க...
“பாரதசமுதாயம் வாழ்கவே..
பாருக்கு பண்பாட்டைக் கற்றுத்தந்த
பாரத சமுதாயம் வாழ்கவே” என...

இந்நிகழ்வுகள்...
இந்தியாவின்
பண்பாட்டின்மீது தொடுக்கப்பட்ட
படையெடுப்புக்கள்?

இதிலிருந்து மீள்வது எப்போது?

அப்படி ஒரு மீட்சி இல்லையென்றே நினைக்கிறேன்...

காலம்தான் பதில் சொல்லும்..



ஆத்மா said…
கும்கி விமர்சனம் போடுவதில் காட்டும் பதட்டத்தில் ஒரு சதவிகிதமாவது, இதுபோன்ற சபவங்களுக்கான கண்டனங்களில் காட்டியிருந்தால் பாராட்டியிருக்கலாம்.
////////////////////////////////

நியாயமான ஆதங்கம்...
மனிதம் செத்துவிட்டது :(
//572 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், மும்பையில் 239 பெண்களுக்கு இதே கொடுமை நேர்ந்துள்ளது என்றும் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது..!///

இவைகள் வெளிச்சத்திற்கு வந்தவைகள் ஆனால் வாராமல் எத்தனை ஆயிரம் நபர்கள் பலாத்காரம் செய்யபடுகின்றனர். இப்போது தரப்படும் கல்வி எப்படி அதிகம் சம்பாதிக்க வழி வகைகளை க்ற்றுக் கொடுக்கின்றனவே தவிர மனித பண்பாட்டை கற்றுக் கொள்ள வழிவகை செய்யவில்லை பெண்ணை பெண்ணாக பார்க்க கற்றுக் கொடுக்கவில்லை பாட்டி தாத்தாக்களாவது கூட இருந்தால் நல்ல கதைகளை சொல்லி மனத்தை பதப்படுத்தி இருப்பாரகல் இந்த நவீன காலத்தில் பாட்டிகளை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டு டிவியை நடுவிட்டில் வைத்திருப்பதால் மனம் கெட்டு பெண்களை ஒரு போகத்திற்கான ஒரு கருவியாக நினைத்து இப்படி செயல்படுகின்றனர்..இப்படிபட்ட ஆண்களால் நல்ல ஆண்களும் தலை குனிந்து நிற்கின்றனர்....
சில பேர் சொல்லாம் இவர்களின் அம்மா மனைவி அக்கா தங்கச்சி அல்லது மகள்களை இவர்கள் கண்முன்னால் இப்படி பலத்காரம் செய்தால்தான் புத்திவரும் என்று சொல்லுகிறார்கள் ஆனால் இவர்களுக்கு புத்திவருவதற்க்காக அவர்கள் வீட்டு பெண்ணை காயப்படுத்துவது எந்தவிதத்தில் நியாம் அவர்களும் பெண்கள்தானே. அதனால் இந்த மாதிரி பண்ணும் ஆண்களின் உறுப்பை வெட்டி ஏறிய வேண்டும் அப்போதுதான் புத்திவரும்
சீனு said…
ஆணித்தரமான எழுத்துக்கள்... எழுதிகளின் வீரியம் நெஞ்சில் பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது
//என்ன செய்யப்போகிறோம்??? எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது மனிதம்??///

முதல் கேள்விக்குப் பதில்...

என்ன செய்யப்போகிறோம்? என்ற தங்கள் கேள்வியை சற்று மாற்றிக் கேட்டிருக்க வேண்டும் தாங்கள்...

இது ஏன்? எதனால்? என்று கேட்டுவிட்டு என்ன செய்யப்போகிறோம்? என்று கேட்டிருக்க வேண்டும்..

இப்போது ‘டெங்கு’ காய்ச்சல் வந்து ஓர் உயிரிழப்பு ஏற்பட்ட பின்.. அதிலிருந்து எப்படி தப்பிப்பது... எப்படி காத்துக் கொள்வது.. என்ற திட்டமிடலில்... கொசு என்றும்.. அதுவும் பகலில் கடிக்கும் கொசு என்றும்.. அது நன்னீரிலே உற்பத்தியாகுமென்றும்.. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்..
அதாவது கொசுமருந்து அடிப்பது.. தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றுவது.. நன்னீரில் மருந்திடுவது என அரசு முழுவீச்சில் அப்பகுதியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்கிறது.. பின்னர் அப்பகுதியில் “டெங்கு” போய்விடுகிறது...


அதைப்போல..

இச்சம்பவம் நடந்திட காரணம் என்ன என்பதை முழுவதும் ஆய்ந்து.. அதன் அடிவேரை... அப்பிரச்சினையின் சல்லிவேருடன்.. ஆணிவேரையும் தேடி பிடுங்கி எறிந்து அந்த இடத்தில் ஆசிட் ஊற்றினால்தான்..

இந்நிகழ்வுகளுக்கான காரணிகள் கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் மாநகரங்களிலிருந்தும் தலைநகரத்திலிருந்தும் தூக்கி எறியப்படும்... பிடுங்கி எறிந்து.. அவ்விடம் வெற்றிடமாக்கப்படும்

இந்நிகழ்வுகள் உருவாகும் மூலத்தை கண்டறிந்து.. அதனை அழிக்க வேண்டுமேயல்லாது...

இந்த ஒரு நிகழ்வில் மட்டும் மாட்டிய அந்த ஐந்துபேரை தூக்கு போடுவதிலேயோ.. மரணதண்டனை விதிப்பதிலேயோ எதிர்காலத்தில் இந்நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முடியாது..

இப்போது இந்தியா முழுமையும் சொல்வது அவர்களை உடனே தூக்கிலிடுங்கள்.. அவர்கள் தூக்கிலிட வேண்டியவர்களே அதில் எனக்கு மாறுபாடான கருத்தில்லை...

ஆனால்..

இதுபோன்ற நிகழ்வுகள் உருவாக என்ன காரணம் என்பதை ஆய்ந்து.. முழுஈடுபாட்டுடன் ஆய்ந்து.. அதற்கான காரணத்தை அறிந்து.. அதை முற்றிலும் பிடுங்கி எறிய வேண்டும்..

இது நடக்குமா?

நடக்காது என்றுதான் நினைக்கிறேன்...

பட்டுகோட்டையாரின் பாடல் வரிகளிலேயே சொல்கிறேன்...

“திட்டம் போட்டு திருடறக் கூட்டம் திருடிக் கொண்டேயிருக்குது.. அதைச் சட்டம் போட்டு தடுக்குறக் கூட்டம் தடுத்துக் கொண்டேயிருக்குது...
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது“

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்
சிவா said…
இந்திரா, உங்களது ஏக்கம் நியாயமானது தான்!!

டெல்லி முடிஞ்சதும் புதுச்சேரி வந்திருக்கு...அடுத்தது எந்த மாநிலமோ தெரியலை...ஆனா தமிழர்களின் உணர்வுகள் மழுங்கி போயிடுச்சுங்கிரதுக்கு தூத்துக்குடி மாணவியின் கொடுமையே உதாரணம். இவர்களின் காலதாமத தீர்ப்புகள் மேலும் இரண்டு பெண்களை வன்புணர்விற்கு கொண்டு சென்று இருக்கின்றது. யாரோ ஒரு சில காமுகர்களால் ஒட்டுமொத்த பெற்றோர்களும் பீதியில் இருக்கின்றார்கள் என்பதே உண்மை..

Popular posts from this blog

மரணவலி தரும் உன் மௌனம்..

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்