லாக்கப் – சாமான்யனின் குறிப்புகள்..


சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு இழுத்துச்செல்லப்பட்ட நான்குபேர், காவல் நிலையத்தில் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தார்களென எழுத்தாளர் மு.சந்திரகுமாரின் பார்வையிலிருந்து எழுதப்பட்ட உண்மைச் சம்பவங்கள் அடங்கிய புத்தகம் இது.
சில புத்தகங்கள், வாங்கிவிட்ட காரணத்துக்காகவே வேறுவழியின்றி படிக்கப்படும். சில, பாதி கூட தாண்டாது. லாக்கப் படிக்கும்போதே, பிடிபட்ட நால்வருடன் நம் பயணமும் ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொருமுறை சிறையின் கதவுகள் திறப்பதாய் படிக்கும் வினாடிகளில், அடி வாங்கப்போகிறார்களே என இதயத்துடிப்பு கணிசமாய் கூடுவதை என்னால் உணரமுடிந்தது.
1983ல் குண்டூரில் ஒரு காவல் நிலையத்தில் ஆரம்பிக்கிறது கதை. எங்கோ நடந்த கடைத் திருட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்ட ரவி, மொய்தீன், நெல்சன் மற்றும் குமார் (சந்திரகுமார்) ஆகியோரை சிறையில் அடைத்து, தவறை ஒத்துக்கொள்ளும்படி அடித்து சித்திரவதைப்படுத்துவது தான் முழுக்கதையும். மொழி தெரியாத ஊரில், போதுமான தண்ணீரோ சாப்பாடோ கிடைக்காமல், மலம் கழிக்க இயலாமல், லட்டியால் விளாசும் அடிகளை வாங்கி அலறும்போதெல்லாம்.. ஒவ்வொரு முறை சிறைக்கதவு திறந்து கைதிகள் வெளிவந்து மலம் கழித்துவிட்டு உள்செல்லும்போதெல்லாம் பிருஷ்டத்தில் அடி விழுகும். அதிலும் சம்மட்டி அடி என்பதை கண்முன்னே கொண்டு வந்திருக்கும் அவர் எழுத்துக்கள். பாதங்களை மேல் நோக்கி ஜன்னலுடன் பிணைத்துக்கட்டி, பின்கழுத்தும் தலையும் மட்டும் தரையில்படும் நிலையில், பாதம் சீல் பிடிக்கும் அளவுக்கு அடித்துத் துவைக்கும் இன்ஸ்பெக்டர் மேல் நமக்கே கொலைவெறி உண்டாகிறது.
சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கும் நால்வரையும் பிரித்து, ஆலோசனை சொன்னதற்காக பின்கைகள் கட்டிவைத்து அடிக்கும்போது மயங்கிவிடும் குமாரின் வார்த்தைகள் இவை.. “ஆணுறுப்பில் உதைத்தால் வலி தாங்காமல் மயங்கி விழுந்துவிட்டேன். தேய்த்துவிட முடியாமல் கைகள் கட்டப்பட்டிருந்த்தால், மெதுவாய் மணலைக் குவியலாக்கி குப்புறப்படுத்தபடி, உடலின் அழுத்தத்தை கொடுத்தேன். நிர்வாணமாய் கிடந்தபடி வலியில் முனங்க ஆரம்பித்தேன். என்னிடம் சுவாசம் மட்டுமே இருந்தது“.
பத்துக்குப் பதினொன்று அறையில் இருபத்தியொரு பேர் உட்கார்ந்தவாரே தூங்கியதாகவும், ஒருவேளை விடுதலையாகிவிட்டால், இன்ஸ்பெக்டரை எப்படியெல்லாம் பழிவாங்கலாமென யோசித்ததாகவும், அவர் வண்டியில் ப்ரேக்கை கழட்டி விடப்போவதாக கூறுவதாகவும் யதார்த்தமாய் எழுதியிருப்பார்.
கடைசிவரை அறைகுறை தெலுங்கில், “தெரியலங்க சார்.. நாங்க தப்பு பண்ணலங்க சார்“ என்றவாரே அத்தனை அடிகளையும் வாங்கும் குமார், கடைசியில் வேறுவழியின்றி கோர்ட்டில் ஒத்துக்கொண்டு, 1983 செப்டம்பர் 27ம் நாள் விடுதலையாவதாய் முடித்திருப்பார்.
“லாக்கப்-சாமான்யனின் குறிப்புகள்“
மு.சந்திரகுமார்
நந்தினி பதிப்பகம்
விலை: 70 ரூபாய்
.
.

Comments

sam said…
“லாக்கப்-சாமான்யனின் குறிப்புகள்“
மு.சந்திரகுமார் பற்றி நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். புத்தகம் சென்னையில் எங்கும் கிடைக்கவில்லை. பதிப்பக தொலைபேசி எண் இருந்தால் பகிர முடியுமா. நன்றி.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..