Life is Beautiful - என் பார்வையில்..!


முன்வழுக்கை, ஒட்டிய கன்னங்கள், சற்றே குள்ளமாய் ஒடிசலான உருவம்.. இதுவே Life is Beautiful படத்தின் நாயகன் Roberto Benigniயின் தோற்றம். சராசரிக் கதாநாயகனுக்குரிய எந்தவிதமான ஹீரோயிசமுமின்றி படம்முழுக்க நம் மனதில் நிறைந்து நிற்கிறார். ஆரம்பித்த முதல் நிமிடத்திலிருந்து இவர் முகத்திலிருக்கும் புன்னகை, இறுதிவரை சற்றும் குறையாமல் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. (படத்தினை எழுதி இயக்கியவரும் இவரே..!).

வாழ்க்கையை, எந்த சூழலிலும் பாஸிடிவ்வாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது திரைப்படம். காதலன், கணவன், தகப்பன் என முப்பரிணாமத்தையும் அழகாய் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

ஒரு காட்சியில், இசைநாடகம் நடந்துகொண்டிருக்கும் அரங்கத்தில் பால்கனியிலிருக்கும் காதலியை, கீழிருந்து திரும்பிப் பார்த்துக்கொண்டிருப்பார் ஹீரோ. அப்போது, நாயகனுக்கு பக்கத்து இருக்கைப் பெண் இவரை முறைத்ததும், எனக்கு வலதுபக்க காது தான் கேட்கும். அதனால் அவ்வாறு திரும்பி உட்கார்ந்திருப்பதாக கூறி சமாளிப்பார். ஹய்ய்ய்யோ... செம சீன் அது.

இருவரும் காதல் வயப்படும்போது, நாயகியின் நிச்சயதார்த்த விழா என்று கூட யோசிக்காமல், சாப்பாட்டு டைனிங் டேபிளின் அடியில் இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி அழகான கவிதை.

இரண்டாம் உலகப்போருக்கான காலகட்டத்தில் படம் நகர்கிறது. காதலித்த பெண்ணையே மணந்து, மனைவி, மகனுடன் சந்தோசமாய் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, யூதர்களுக்கான கைதி முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் அனைவரும். மனைவி பெண்கள் முகாமிலும், மகனுடன் (அருகிலேயே) ஆண்களுக்கான முகாமிலும் கைதிகளோடு கைதிகளாய் அடைக்கப்படுகின்றனர். அந்த சூழ்நிலையிலும், ஒரு தகப்பனாக தன் மகனுக்கு தைரியமூட்டும் வகையில், நடப்பதனைத்தும் விளையாட்டு எனவும், அதில் ஜெயிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்குவார்களெனவும், ஒவ்வொரு சம்பவங்களையும் விளையாட்டாய், குழந்தைகள் பாஷையில் புரியவைப்பது ரசனை..!

சிறுவன் Giorgio Cantarini, தந்தையின் ஒவ்வொரு விளக்கத்திற்கும் வெளிப்படுத்தும் முகபாவனைகள் அழகோ அழகு. ஒரு காட்சியில் முகாமின் அதிகாரி, ஜெர்மன் மொழியில் சிறையின் விதிமுறைகளை கூறும்போது, அதை Roberto Benigni மொழிபெயர்ப்பார். அதிகாரியின் சைகையின்படியே, விளையாட்டின் விதிமுறைகளாக, குழந்தைகள் அழக் கூடாது“, “ஜெயிப்பவர்களுக்கு நிஜமான Tank பரிசாக வழங்கப்படும்முதலியவற்றை பதறாமல் கூறுகையில், சிறுவனுடன் சேர்ந்து நாமும் கவனித்துக்கொண்டிருப்போம்.

முகாமில் நடக்கும் சர்வாதிகாரம், கொடுமைகள், கொலைகள் அனைத்தையும் தாண்டி, தந்தை-மகனுக்கான உறவினை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார் இயக்குநர். சிறையில் தன் மனைவியை ரகசியமாய்ப் பார்க்க வந்து, பின் காவலனிடம் சிக்கி, கொல்வதற்காக அழைத்துச்செல்லப்படும் நிமிடத்தில்கூட, சிரித்துக்கொண்டே வீரநடை போடுவது மனதினை அழுந்தச் செய்கிறது. முடிவில், அவர் இறந்துவிடுவதை நம்பமுடியாமல், மீண்டும் ஏதேனுமொரு காட்சியில் தோன்றிடுவாரோ என கடைசிவரை தேடிக்கொண்டிருந்தேன்.

இறுதிக்காட்சியில், சிறுவன் வெளியே வருகையில் Tank ஒன்றின்மீது போர்வீரன் ஏறிவருவதைப் பார்த்து, தந்தை கூறியபடியே தனக்கு பரிசு கிடைத்துவிட்டதாய் சந்தோசமாய் கூச்சலிடும்போது, நம்மையும் அறியாமல் நிம்மதிப்பெருமூச்சு உண்டாகிறது.

முற்பாதியில் வரும் பெரும்பாலான நகைச்சுவை காட்சிகளை யூத் படத்தில் காப்பியடிக்காமல் இருந்திருக்கலாம். ஹூம்ம்..

பிரச்சனைகளால் மனம் தளர்பவர்களுக்கு நிச்சயம் Life is Beautiful ஒரு உற்சாக டானிக் தான்.

.

Comments

நல்லதொரு ரசனை... தொடருங்கள்...

வாழ்த்துக்கள்...
kadhaikkalam said…
உங்கள் கிறுக்கல்களைப் படித்துவிட்டு எப்படி காரி துப்ப முடியும். அருமை.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..