6174 - சுதாகர் கஸ்தூரி
“நீங்கள் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் “நீங்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சாகப்போகிறீர்கள்“ என்பதற்கும் இருக்கும் பதற்றத்தின் மைக்ரோ வேறுபாட்டை உங்களால் உணர முடிகிறதா? விண்கல் ஒன்று வானத்தில் தெரிகிறது என்பதைவிட விண்கல் ஒன்று, இரண்டு நாட்களில் பூமியைத் தாக்கப்போகிறது எனும்போது கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொள்ளும் தானே? சொல்லப்படும் தொனியின் தன்மையைப் பொருத்தே ஒரு விஷயம் அதன் ஸ்வாரஸ்யத்திற்கான சதவீதத்தைப் பெறுகிறது. இதுதான் Calculate the Target வகையறா. கையிலெடுத்திருப்பது அறிவியல் புனைவு எனும்போது, காலம் குறித்தான கணக்கீடு இருக்கும்பட்சத்தில் கதை நிச்சயம் வேகமெடுக்கும். இத்தனை மணிக்கு வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்ற பதற்றத்தில், காலங்காலமாக கடைசி இரண்டு வினாடியின்போது Defuse செய்யும் திரைப்பட டெக்னிக் இந்த முறையைச் சார்ந்ததுதான். கடைசியாக தமிழில் அறிவியல் புனைவுக்கதையை எப்போது வாசித்தீர்கள்? Fritz Leiber எழுதிய ‘A Pail of Air’ -ன் தமிழாக்கமான “ஒரு வாளி ஆக்ஸிஜன்“ தான் கடைசியாக நான் வாசித்த ஸ்வாரஸ்யமான அறிவியல் புனைவுக் குறுங்கதை. (கவனிக்க, ‘ ஸ்வாரஸ்யமான ’).