Kon-Tiki - என் பார்வையில்..
“கடலுக்குள் ஒரு சாகசப் பயணம்“ இந்த ஒற்றை வரியினுள் உயிர் பிழைப்பதற்கான விளிம்பு நிலை
சந்தர்ப்பங்கள் எத்தனை அடங்கியிருக்கிறது!! கடற்கரையில் அலைகளை வேடிக்கை பார்த்து
சிலிர்க்கும் அதே நேரம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. காற்றால் மட்டுமே இயங்கும்
மரத்தாலான படகு, சுற்றிலும் சுறாக்களும்
திமிங்கலங்களும் உங்களை விழுங்கக் காத்திருக்கின்றன. கொஞ்சம் உணவு, சில நண்பர்கள், அதோடு சுமார் 4000 மைல்களை கடந்தாக வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும்
கைவசம் இருக்கிறது. இது தான் Kon-Tiki.
பிரபஞ்சத்திற்கு அடுத்ததாக
ஆச்சர்யங்கள் நிறைந்ததெனில் அது கடல் தான். இன்னும் இன்னும் என எத்தனை தேடினாலும்
ஏதாவது கிடைத்துக்கொண்டே இருக்கும். அதுபோன்றதொரு சாகசப் பயணத்திற்கு நம்மை
இழுத்துச் செல்கிறது திரைப்படம். “Cast away”, “Life of Pi” திரைப்படங்கள்போல் வழி தவறி கடலுக்குள் மாட்டிக்கொள்வதாக அல்லாமல், திட்டமிட்டே ஒரு ஆராய்ச்சிக்கென தன் குடும்பத்தைப் பிரிந்து
மேற்கொள்ளும் பயணத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஸ்வாரஸ்யங்கள்.
படகின் அடிப்பகுதி கொஞ்சங்கொஞ்சமாய் கரைந்துகொண்டே வருவதாய்
கூறும்போது, இவர்கள் சீக்கிரம் கரை
சேர வேண்டுமே என்ற பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. ஒவ்வொரு முறையும் நீரில்
யாராவது தவறி விழும்போதெல்லாம் விழுங்க ஓடிவரும் சுறாக்கள் நம் இதயத்துடிப்பை எகிற
வைக்கின்றன. பின்னணி இசை கூடுதல் பலம்.
சாகசப் பயணங்களில் ஆர்வமுள்ளவரா நீங்கள்? Kon-Tiki நிச்சயம் உங்களை
கூட்டிச் செல்லும்.
# Kon-Tiki
(2012) (Norwegian)
Comments