“கழுகு“ வலைதளத்தில் வெளியான என்னுடைய பதிவு..பெண்களா...?? சதைப்பிண்டங்களா..??
(“கழுகு“ வலைதளத்தில் வெளியான என்னுடைய பதிவு..)
என் அலுவலகத்தில் இரண்டு நாளைக்கு முன் ஆடிட் நடந்தது. சென்னையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு வந்திருந்தனர். அதில் ஒரு பெண்ணும் இருந்தார். நடுத்தர வயதுடைய, மதிக்கத்தக்க தோற்றத்துடையவராய் தெரிந்தார். அன்று அலுவலகம் முழுவதுமே காலையிலிருந்தே பரபரப்பாய் இருந்தது. எல்லா ஃபைல்களையும் பரிசோதித்து ஒவ்வொன்றாக சரிபார்த்தனர். அதிலிருந்த சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்தனர். அந்தப் பெண்மணி கொஞ்சம் கோபப்படுபவர் போல.. தாள்களில் இருந்த தவறுகளை எடுத்துக்காட்டி திட்டிக்கொண்டிருந்தார். பின் ஒருவழியாக ஆடிட் முடிந்து ரிப்போர்ட் கொடுத்தாயிற்று.
இதெல்லாம் எல்லா அலுவலகத்துலயும் நடக்குறது தானேனு நெனைக்கலாம். நான் சொல்ல வந்தது அன்று நடந்தது பற்றியல்ல.. அவர்கள் சென்றபின் வந்த அடுத்தநாள் பற்றியது. ஆடிட் முடிந்த மறுநாள் மதியம் எல்லா பணியாளர்களும் அவரவர் கேபின்களில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பணியாளர் மெதுவாக ஆடிட் பற்றி பேச்செடுக்க, பின் அதுபற்றி உரையாடல் தொடர்ந்தது. நானும் இன்னொரு மேடமும் பக்கத்து கேபினில் அமர்ந்திருந்த்தை அவர்கள் கவனிக்கவில்லையா அல்லது சட்டை செய்யவில்லையா என்பது தெரியாது. அவர்கள் பேசியதிலிருந்த முக்கியமான பேச்சுகள் இது தான்...
நேத்து ஆடிட்ல பயங்கர தீணி போல.. அந்த நீலாம்பரி செம கட்டையா இருக்காளே..
ஆம்பளைங்க நாம இருக்கும்போது அவ என்னமா கத்துறா பார்த்தியா? திமிரு ஜாஸ்தி..
திமிர விடுடா.. அவ ஸ்ட்ரக்ச்சர் சூப்பர்ல.. இந்த வயசுலயும் சிக்குனு இருக்கால்ல.. இத்தனை நாள்ல எத்தன பேரு மடங்குனாய்ங்களோ.. ம்ம்ம்..
அடப்போடா.. இவ இப்டி கோவமா கத்திகிட்டே இருந்தா புருஷன் கூட பயப்புடுவான்
அட நீ வேற.. இந்த மாதிரி பொம்பளைங்க தான்டா சீக்கிரம் மசிஞ்சிடுவாளுக.. நீ வேணும்னா பாரு.. ரெண்டு தடவை பேசினா போதும்.. ஈசியா முடிச்சிடலாம். எழுதி வச்சுக்க..
இன்னும் சிரிப்பொலியும் கேவலமான பேச்சுக்களும் நீண்டுகொண்டே போனது. எல்லாமே அந்தப் பெண்ணைப் பற்றியது தான். நான் பொறுக்க முடியாமல் அவர்களைத் திட்டுவதற்கு எழுந்தேன். உடனே என் பக்கத்தல் அமர்ந்திருந்த ஒரு மேடம், என் கையைப் பிடித்து இப்ப நீ திட்டிடலாம், அவங்களும் அமைதியாயிடுவாங்க. ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு உன்னைப் பத்தி இதே மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க.. நா நிறைய அனுபவப்பட்ருக்கேன். பேசாம இரு. அது தான் நல்லதுனு குரல் தாழ்த்தி சொன்னாங்க. இதைக் கேட்டதும் நான் என்ன செய்ய முடியும்? எழுந்து வெளிய போய் விட்டேன்.
பெரும்பாலும் பெண்கள் பற்றி, வெளியுலகத்தில் ஆண்கள் பேசுவது இப்படித்தான். ஒரு சிலர் வேண்டுமானால் நான் ரொம்ப ஜென்டில் மேன்னு காலரைத் தூக்கி விட்டுக்கலாம். ஆனா நாலைந்து ஆண்கள் சேர்ந்துட்டா அவங்களோட பொழுதுபோக்கு பேச்சுக்கள் இப்படித்தான் இருக்கு. பொழுதுபோக்காக, விளையாட்டாக, சும்மா, சகஜம்.. என்று ஆயிரம் அர்த்தங்கள் சொன்னாலும் இது போன்ற பேச்சுக்கள் ஆண்களோட வக்கிரத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் காட்டுவதோட மட்டுமில்லாம குறிப்பிட்ட பெண் மீது அவர்களுக்கு இருக்கிற பொறாமை குணத்தையும் அப்பட்டமா காட்டுது.
பொதுவாகவே பெண்கள் என்றாலே வெறும் சதைப்பிண்டங்களா தான் பார்க்கப்பட்றாங்க. ஒரு பெண்ணைப் பார்க்கிற ஆணோட பார்வையே இதை சொல்லிடும். ஏற இறங்கப்பார்க்கும் கீழ்த்தரமான பார்வைக்கும் முகத்தை மட்டும் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இவர்கள் ஸ்ட்ரக்ச்சர்என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தமே கொண்டுவந்துவிட்டனர். பொதுவாய் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் என்னதான் இழுத்துப்போர்த்திக்கொண்டு வந்தாலும் ஆண்களின் பார்வைகள் தவறான இடங்களைத் துலாவுவதை தவிர்க்க முடிவதில்லை.
நண்பர் ஒருத்தரோட வலைப்பூவில் பெண்களுக்கு இணையத்தில் கொடுக்கப்படும் மதிப்பைப் பற்றிய விவாதம் நடந்தது. அதிலும் கூட, நிறைய ஆண்கள் தங்களோட அதிகார குணத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். இணையத்தில் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக இருப்பதில்லை என்ற பேச்சில் தொடங்கி, எங்கெங்கோ வாதம் சென்றுவிட்டது. அதிலும் ஒரு சிலரோ பொண்ணுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது, கத்துக்குட்டிங்க.. உடல்லயே ஆணுக்கு சமமா இருக்குறது கிடையாது. இதுல எங்க சமுதாயத்துல சமமா இருக்கப்போகுதுங்க..என்று சம்மந்தமில்லாமல் என்னென்னவோ பினாத்தினார்கள். சமூகத்தில் சமநிலை என்பதும் உடலில் சமநிலை என்பதும் ஒன்றில்லையே.. மட்டப்படுத்துவதே நோக்கமாக கொண்டிருப்பதால் எதுவேண்டுமானாலும் பேசலாம் போல.
என்னதான் நட்பாகப் பேசினாலும், குறிப்பிட்ட பெண்ணின் போன் நம்பர் கிடைத்துவிட்டதைப் பெருமையாக தம்பட்டம் அடிக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைவிட, அந்த நம்பரை தனக்கும் தரும்படி கெஞ்சும் ஆண்களும் இருக்கிறார்கள். தினமும் அந்தப் பெண்ணிடம் என்ன பேசப்பட்டது என்று பகிரப்படுவதும் பெரும்பாலான ஆண்களின் நட்பு வட்டாரத்தில் வழக்கமாக இருப்பதுண்டு.
ஆண்களின் நோக்கங்களுக்கேற்ப நடக்கும் பெண்களை மட்டும் இவர்கள் குறிவைப்பதில்லை. கண்ணியமான, சாதாரண நட்புடன் பழகும் பெண்களையும் கூட இந்த நோக்கத்தில் தான் பெரும்பாலும் பார்க்கின்றனர்.
அது போன்ற ஆட்களிடம் உன் தாயும் பெண்தானேஎன்று பழைய்ய்ய்ய வசனமெல்லாம் பேசமுடியாது. தண்ணி தெளித்து, தவிர்த்து தான் விடமுடியும்.
பெண்பால் மீதான ஆணின் இனக்க்வர்ச்சி இயற்கையின் ஏற்பாடாயினும் அது அவ்விதமாக இல்லாமல் தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஆற்றாமையின் வெளிப்பாடாக, வக்கிரமாக, விரசமான வார்த்தைகளாக, வந்து விழுவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது
பெண்கள் என்பவர்கள் வெறும் சதைகள் மட்டுமல்ல. ஆண்களைக் கவரும் வஸ்த்திரமும் அல்ல. தங்களுடைய வக்கிரங்களையும் அதிகாரங்களையும் திணிக்க ஏதுவாக இருக்கும் பிராணிகளும் அல்ல. அவர்களும் உணர்வுகள் இருக்கும் சாதாரண மனிதர்கள் என்ற பார்வை நம் சமூகத்தில் இருப்பதேயில்லை. இந்த நிலை என்று தான் மாறுமோ தெரியவில்லை.
.

Comments

பெண்களின் நிலையை கூறிய விதம் உண்மையே . வாழ்த்துக்கள்
vinu said…
ஐயையோ பூச்சாண்டிப் பதிவு!
SURYAJEEVA said…
whoever are being targeted are not mentally matured, if a male approach them and point out their wrongs then he is labelled as nerd... so when the mental maturity comes over these kind of silly problem will be over.

ஆனால் ஒரு வகையில் சிலவற்றை ஆண்களால் தவிர்க்க முடியாதோ என்று தான் எனக்கு தோன்றுகிறது...
Marc said…
நல்ல தொரு சாட்டையடி.அருமை பதிவு வாழ்த்துகள்.
SELECTED ME said…
நான் இங்கு இல்லை!
Unknown said…
பெண்களும் உணர்வுகள் இருக்கும் சாதாரண மனிதர்கள் என்ற பார்வை நம் சமூகத்தில் விரைவில் வரும் என்று நம்புவோம்
தங்கள் இப்பதிவில் குறிப்பிட்டதை முற்றிலும் ஏற்றுகொள்கிறேன் என்று பொய்யைச் சொல்ல விரும்பவில்லை...!

மனிதன் பிறந்தபோதே "ஆதிக்க"மும் பிறந்தது என்பது மறுக்கமுடியாதது...!

அதோடு...
எப்போதும் நேரில் ஒரு மாதிரியும்...
பின்னால் ஒரு மாதிரியும் பேசுவது..
சிலருக்கு... சாரி...! பலருக்கு.... அதிலும் பெரும்பாலோருக்கு இயல்பான ஒன்றுதான்...!

எப்போதும் நான் சொல்வது...!

"மிருகத்தின் பரிணாம வளர்ச்சி மனிதன்" என்ற பிராய்டின் கூற்றை நாம்
ஒப்புக்கொள்கிறோம் என்றால்...
ஏற்றுக் கொள்கிறோம் என்றால்...

மனிதர்களின் (அது ஆணாய், பெண்ணாய் இருந்தாலும்) ஆழ்மனதில் இன்னும் "மிருகம்" ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது...!

அது அவ்வப்போது
சிந்தனையாய்...
வார்த்தைகளாய்...
செயலாய்...
வெளிப்பட்டு... வெளிபடுத்திவிட்டு...
மீண்டும் ஆழ்மனதில் உறங்கச் சென்றுவிடும்...!

இதிலிருந்து நான் விடுபட்டுவிட்டேன் என்று
இவ்வுலகில் உள்ள யாரேனும் சொல்கிறார்கள் என்றால்...
அவன் முனிவனானாலும், அமைச்சனானாலும், கூலியானானாலும்
அவர்கள் சொல்வது "பொய்"...!

எனவே...!
நீங்கள் கேட்ட இந்த வசனங்களை பேசியவர்களைப் போல பெரும்பான்மையோர் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை...!
ஒரே நாள் ஆடிட்டா.... அட, கொடுத்து வச்சவங்கதான்...!
இயல்பான பார்வையும் பேச்சும் கொண்ட ஆண்கள் மிகச் சிலரே. அவை பெரும்பான்மை ஆக வேண்டும் என்ற உங்களின் ஆதங்கம் மிகச் சரி. என்று மாறும் இந்நிலை? காத்திருப்போம்!
மேடம்...!

இன்று காலையில் நாளிதழில் முக்கிய செய்திகளில் ஒன்று...!

சென்னை, சவுகார்பேட்டையில், 37 வயது - திருமணமான - தான் குருவாய் இருந்து கல்வி கற்றுதரவேண்டிய பள்ளி ஆசிரியை ஒருவர் , தன்னிடம் இந்தி பயிலும் +1 மாணவனை காமித்து sorry .... காதலித்து (?), இழுத்துக் கொண்டு பாண்டிச்சேரி, கோவை,சேலம், நாக்பூர், டெல்லி, சிம்லா என ஊர் சுற்றி வந்து, இறுதியில், ஊர்சுற்ற காசில்லாமல் சென்னை வந்து போலீசில் மாட்டிக்கொண்டு, "அந்த சிறுவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன், அவனுக்கு 21 வயது ஆகும்வரை காத்திருப்பேன் என போலீசில் வாக்குமூலம் அளித்து சென்னை புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பது....

"சதைப் பிண்டமா? இல்லையா?

இப்போது தங்கள் பதிவின் தலைப்பை படியுங்கள்?

இந்நிகழ்வை நான் ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள்மீது குற்றம்சாட்டுவதற்காக அல்ல...!

நான் மேலே சொன்ன
"மனிதர்களின் (அது ஆணாய், பெண்ணாய் இருந்தாலும்)
ஆழ்மனதில் இன்னும் "மிருகம்" ஒளிந்துகொண்டுதான் இருக்கிறது...!

அது அவ்வப்போது சிந்தனையாய்... வார்த்தைகளாய்... செயலாய்...
வெளிப்பட்டு... வெளிபடுத்திவிட்டு... மீண்டும் ஆழ்மனதில் உறங்கச் சென்றுவிடும்...!///

அந்த "மிருகம்" எல்லோர் ஆழ்மனதிலும் உண்டு...!

அது
நல்லது, கெட்டது,
அசிங்கம், அவமானம்,
உறவு, பகை, என்று
எதுவும் அது அறியாது...

அறியாமேலே
சொல்லிவிட்டு,
செயலை செய்துவிட்டு
உள்ளுக்குள் சென்று மறைந்துகொள்ளும்...!
மீண்டும் எழும்...!

அந்த மிருகம் எழும்போது...
அதன் சொல்லுக்கு, செயலுக்கு அடிபணியாமல், நிதானித்து செயல்படுபவன்தான்(பவள்தான்) "மனிதமுள்ள மனிதன்"....!
Unknown said…
ஆண்கள் குணம் அப்படித்தான் இருக்கின்றது முன்னொருகாலத்தின் அப்படி நண்பர்களுடன் நான் பழகியுள்ளேன்.
நான் பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்
Praveen said…
இந்த நிலை என்று தான் மாறுமோ தெரியவில்லை//

There is no possibility till the change in the Media(Particularly in Cinema/TV)

Popular posts from this blog

நீ அழையாத என் கைபேசி..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மஞ்சள் நீராட்டு எனும் மடத்தனம்..