அபர்ணா..


பர்மிஷன் சொல்லிவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினாள் அபர்ணா. கணவன் சரவணனுக்கு போன் செயலாமா என்று யோசித்தவள், வேண்டாமென முடிவெடுத்தவளாய் கைப்பையை எடுத்துக்கொண்டு அலுவலகப் படிகளில் இறங்க ஆரம்பித்தாள். லேசாக ஆரம்பித்த வலி இப்போது அடிவயிறு முழுதும் பரவ ஆரம்பித்திருந்தது. பெண்களுக்கேயுரிய வேதனைதானென்றாலும், திருமணமான இந்த ஆறு வருடங்களில் ஒரு மாதம் கூட தவறாமல் வந்துவிடும் வலி என்பதால் அபர்ணாவுக்கு கூடுதல் வேதனை.
ஆரம்பத்தில் ஜாடையாக சொல்லிக்காட்ட ஆரம்பித்த மாமியார், இப்போதெல்லாம் முகத்துக்கு நேராகவே பழிக்க ஆரம்பித்துவிட்டார்.  கோயில் வேண்டுதல்களில் ஆரம்பித்து, மருத்துவப் பரிசோதனை வரை எல்லாம் பார்த்தாயிற்று. இருவருக்குமே எந்தக் குறையுமில்லை என்ற மருத்துவரின் வார்த்தையால் அவர்களின் நம்பிக்கை இன்னும் குறையவில்லை.
நிறுத்தத்திற்கு நடந்துவரவும், பேருந்து வந்ததும் ஒருவழியாய் உள்ளே ஏறினாள். அன்றைக்கு ஏதோ முகூர்த்தநாள் போல.. கூட்டம் அதிகமாய் நெரிக்க, கம்பியைப் பிடித்தபடி தளர்வாய் நின்றுகொண்டாள். இன்னும் அரைமணிநேரம் பயணம் செய்தாக வேண்டும். மனதிற்குப் புரிந்தாலும் உடம்பால் முடியுமா என்று தோன்றவில்லை. இடுப்பிலிருந்து பாதம் வரை நரக வேதனை தர, பல்லைக் கடித்தபடி தனக்கே கேட்காதவாறு முனக ஆரம்பித்தாள்.
சடக்கென ஏதோ ஒரு கை, தன்மேல் படருவதை உணரவே சட்டெனத் திரும்ப, ஒரு தாடிக்காரன் பல்லிழித்தான். “பாஸ்டர்ட்“ என்று சொல்லியபடி அவனை முறைக்கவும் மெதுவாய் நகர்ந்து நின்றுகொண்டான்.
பயணங்களில் இது மட்டும் மாறவே மாறாது.. அபர்ணாவுக்கு அலுப்பாய் இருந்தது. வலியின் வேதனையை விட, ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமடைவது தான் வெறுப்பாயிருந்தது. உடனே சரவணனைப் பார்க்க வேண்டும்போலிருந்தது. ஒவ்வொருமுறையும் அவள் இப்படி சோர்ந்துவிடும் போதெல்லாம் அவன்தான் ஆறுதல் சொல்வான். தன் தாயிடம் கூட இவளுக்காக வாதம் செய்வதுண்டு. தன் கணவனை நினைக்கும்போது அபர்ணாவுக்கு அதீத பெருமை ஏற்படும். ஆறு வருடங்கள்... வேறு யாராவதாக இருந்தால் இதையே சாக்காக வைத்து விவாகரத்து வரைக்கும் போயிருக்கலாம். ஆனால் சரவணன் இவளிடம் சின்னதாக வருத்தப்பட்டுப் பேசியது கூட கிடையாது. குபுக்கென கண்ணீர் எட்டிப்பார்க்க, அவரசரமாய் நிதானித்துக்கொண்டாள். அது ஆனந்தமா, வேதனையா என்று தனித்துப் பிரிக்க முடியாத ஒன்று.
கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைய, ஏதோவொரு வெறுமை சூழ்ந்துகொண்டது. இனி மூன்று நாளைக்கு இந்த வருத்தத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். அடுத்தாற்போல, மீண்டுமொரு எதிர்பார்ப்பு துளிர்விடும். அபர்ணாவுக்குப் பழகிவிட்டதாயினும் உள்ளுணர்வு இன்னும் பழகவில்லை.
மாமியார், தன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருக்கிறாளென்பது ஒரு சின்ன ஆறுதல். இருந்திருந்தால் இவளைப் பிச்சுப்புடுங்கியிருப்பாள். தளர்வாகக் குளியலறைக்குச் சென்று குளித்து உடைமாற்றிக்கொண்டு, தலையைத் துவட்டக்கூட எண்ணமின்றி படுக்கையில் சாய்ந்தாள். மதியத்திலிருந்து அனுபவித்த அவஸ்தை.. படுத்ததும் கொஞ்சம் பரவாயில்லாது தோன்றியது. சரவணன் பக்கத்திலிருந்தால் மெதுவாக கால்களை அமுக்கிவிட்டிருப்பான். தன் முகவாட்டத்தைப் புரிந்துகொண்டு ஆறுதலாய்ப் பேசுவான். கணவனின் வரவுக்காக அபர்ணாவின் மனது ஏங்கியது.
அடிவயிற்றைப் பிடித்தபடி புரண்டுகொண்டிருந்தவள் எப்போது தூங்கினாளென்று தெரியவில்லை. சரவணனின் வருகை முழிப்பை ஏற்படுத்த, மெதுவாகச் சென்று கதவைத் திறந்துவிட்டு, மறுபடியும் வந்து படுத்துக்கொண்டாள்.
உணர்ந்தவனாய் மனைவியின் அருகில் சென்று “என்னாச்சு அபி?“ என்றதும், திரும்பிப் படுத்திருந்தவள் திரும்பாமலேயே “பீரியட்“ என்றாள்.
“ஷிட்..!! மாசம் தவறாம இந்த சனியன் வேற..“
அதிர்ந்தவளாய் உழுக்கி எழுந்தாள் அபர்ணா.. கொஞ்சமாய் குறைந்த வலி மீண்டும் உடல்முழுக்கப் பரவியது. அவளுடைய அதிர்ச்சியைப் புரிந்தவனாய்த் தொடர்ந்த சரவணன்...
“ஸாரி அபர்ணா.. நானும் மனுஷன் தான். எத்தனை நாளைக்குத்தான் மத்தவங்களோட கேலிப் பேச்சுக்கள் காதுல விழுகாத மாதிரி நடிக்குறது? அலுவலகத்துல மறைமுகமா ஆண்மையில்லாதவன்னு கிண்டல் பண்றாங்க அபி. செத்துடலாம் போலயிருக்கு. ஒவ்வொரு மாசமும் நா இப்படி ஏமாந்து உக்கார்ந்துகிட்டு இருக்குறதுல அர்த்தமேயில்ல. எங்கம்மா சொல்றத ஆரம்பத்துல தட்டிக்கழிச்சிருந்தாலும், இப்ப அது நியாயம்னு படுது. என்கிட்ட எந்தக் குறையுமில்லங்கும்போது நா ஏன் இந்தப் பழிச்சொல்லை சுமக்கணும்? பேசாம வேற கல்யாணம் செய்துக்கலாம்னு முடிவெடுத்துருக்கேன். ஆயுசு முழுக்க நமக்கு நாமதான் குழந்தைனு சொல்லி நம்மள நாமே ஏமாத்திக்க என்னால முடியாது. நீ இத சுயநலமா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்ல. உன் கணவன் ஆம்பிளைதான்னு நிரூபிக்க எனக்கொரு சந்தர்ப்பம் கொடுப்பனு நெனைக்கிறேன்.. உனக்கிதுல உடன்பாடு இல்லேனாலும் எனக்கு வேற வழி தெரியல. மன்னிச்சிடு..பேசிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் எழுந்து சென்றுவிட்டான்.
அபர்ணா அழவில்லை.. அழவும் தோன்றவில்லை. காலையிலிருந்து அனுபவித்த வலி மறைந்து புதிதாய் ஒரு வலி அவளுக்குள் ஊடுருவியது.
இரவு முழுக்க அப்படியே சிலை போன்று உட்கார்ந்திருந்தவளை கொஞ்சமும் சட்டை செய்யாது திரும்பிப் படுத்துக்கொண்டான் சரவணன். இது அவளுக்கு எத்தனை அதிர்ச்சியானது என்பது அவன் அறிந்ததே.. நெடுநேரத்திற்குப் பின் உறங்கிப்போனான்.
அதிகாலைக்கெல்லாம் விழிப்பு வர, மனைவி பக்கம் தயக்கமாய்த் திரும்பியவன் அதிர்ச்சியாய் எழுந்து அந்தக் கவரைப் பிரித்தான்.
“இப்போதும் நான் நேசித்துக்கொண்டிருக்கும் சரவணனுக்கு, சராசரியான எந்தவொரு கணவனுக்கும் தோன்றும் வருத்தம் தான் உங்களுடையதும். நீங்களும் சராசரியானவர்தான் என்பதைப் புரிந்துகொள்ள இத்தனை நாளானதை எண்ணி சிறு வருத்தம் தானே தவிர அதில் எனக்குத் துளியளவும் கோவமில்லை. இனி நாம் சேர்ந்து வாழ்வதிலோ, மறுபரிசீலனை செய்வதிலோ எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை. நல்லதொரு தாம்பத்யம் என்பது உடல் சார்ந்ததல்ல, மனதைச் சார்ந்தது. அத்தகுதியை நாம் இழந்து நீண்ட நேரமாகிவிட்டது. இனி உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காத தூரத்திற்கு செல்கிறேன். தற்கொலைக்குத் துணிவில்லையெனினும் கண்காணாமல் தனித்துவாழத் துணிந்துவிட்டேன். என்னால் உங்களுக்கு ஏற்பட்ட பழிச்சொல்லுக்கு என்னை மன்னிக்கவும்.
பின்குறிப்பு: இக்கடிதத்துடன் இரண்டு வருடங்களாய் உங்களுக்கே தெரியாமல் ரகசியமாய் நான் பாதுகாத்து வந்த மருத்துவப் பரிசோதனை சான்றிதழை வைத்துள்ளேன்.
------- அபர்ணா
கடிதத்தைப் படித்தவனின் கண்கள் அனிச்சையாய் சான்றிதழைப் பார்க்க, ஆண்மைதன்மை என்பதற்கு நேராக 94 சதவிகிதம் சாத்தியமில்லை என் எழுத்துக்கள் பளிச்சிட்ட.
.
.

Comments

செம ட்விஸ்ட்....நன்றாக இருக்கறது...
Unknown said…
அபர்ணா

ஒற்றைச்சொல்லின் சொல்வதென்றால்
வாழ்க்கைக்கும் வலிகளுக்கும் பழக்கப்பட்டவள்..
பழிகளை தன் வலிகளாய் சுமக்க கற்றுக்கொண்டவள்...

எப்போதும் தன் சார்பிலே யோசிக்கும் இனத்திற்கு
இப்படித்தான் எல்லாமே வந்து சேர்கிறது....
ஏற்கனவே படித்த கதையம்சமென்றாலும்
என் தோழியின் எழுத்தில் கூடுதல் வீரியம் கண்டேன்.....


நல்லதொரு தாம்பத்யம் என்பது உடல் சார்ந்ததல்ல, மனதைச் சார்ந்தது

இதை இருமனமும் நினைக்கும் பட்சத்தில் திருமண பந்தமென்பது இனிக்கும் ஒரு உணர்வாய் தான் இருக்கும் என்பது என் எண்ணம்...

வாழ்த்துகள் இந்திரா....
“அபர்ணா“ அருமையான கருவுள்ள கதை. வாழ்த்துக்கள். இந்திரா மேடம்.

கதையில் “இருவருக்குமே எந்தக் குறையுமில்லை என்ற மருத்துவரின் வார்த்தையால் அவர்களின் நம்பிக்கை இன்னும் குறையவில்லை.“ என்பதை எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
கருத்து தவராயின் மன்னிக்கவும்.
அருமையான கதை
இந்த முடிவுதான் மிகச் சரியானதாகவும் படுகிறது
மனத் தொட்ட கதை
தொடர வாழ்த்துக்கள்
Praveen said…
Marana Adi - Aanathikka manobavathirkku

SUPER
MARI The Great said…
ஒரு நல்ல மனைவியை இழந்துபுட்டயே பங்காளி!

நான் சரவணனை சொன்னேன்!
சீனு said…
நல்ல கதை சலிப்பு தட்டாமல் எழுதி உள்ளீர்கள்... வார்த்தைகளின் கோர்வையை வெகுவாய் ரசித்தேன்
Anonymous said…
இருவரிக் கருவை...
ஓர் கதையாக வடித்து..
அதனை சுவையுடன்... த்ரில்லிங்குடன் எழுதியுள்ள விதம் அருமை...

நல்ல கதைதான்...

ஆனா...
அன்னியோன்னியமாய் இருந்த தம்பதியருக்குள் இரகசியம் மறைக்கப்பட்டதாய் சொல்வது சன் டிவி சீரியல்ல வர்ரமாதிரி ஒதைக்குது...



முடிவில் 'பக்'...

கதை தானே... கொஞ்சம் மாற்றி இருக்கலாம்...

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..