CITY LIGHTS - என் பார்வையில்..
கடைவீதிகளில்
பெரிய பெரிய ஜவுளிக்கடைகள் அமைந்திருக்கும் தெருக்கள் அருகில், ஆள் அரவமற்ற
கட்டிடமாய் சிறிய சிறிய துணிக்கடைகளையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அக்கடைகளின்
வாசலில் யாராவது வடிக்கையாளர்கள் வருகிறார்களா? வரமாட்டார்களா..! என
எதிர்பார்த்தபடியே குத்தவைத்து காத்திருக்கும் கடைப் பையன்களை சில நேரம் நாம்
கடந்திருப்போம். அதுபோல் ஒரு பையனை நினைவுபடுத்தும் வகையில் ஓர் அப்பாவி
கதாப்பாத்திரத்தில் மிகச்சகஜமாய் பொருந்திப் போகிறார் ராஜ்குமார் ராவ்.
கடை
வாசலில் குத்தவைத்துக் காத்திருக்கும் அவருடைய மேனரிசம் கடைசி வரையிலும் ஒவ்வொரு
காட்சியிலும் பிரதிபலிக்கிறது. திருடச் சொல்லி வற்புறுத்தும் நண்பனை எதிர்க்க
முடியாத சூழலிலும், தன் மனைவி க்ளப்பில் நடனமாடும் வேலை செய்கிறாள் எனத் தெரிய வரும் காட்சியிலும்
குத்தவைத்து அழும்போது மனதை நிறைக்கிறார். அதிலும் அந்த க்ளைமேக்ஸ் காட்சியில்
பார்ப்பவர்களின் ஒட்டுமொத்த பரிதாபங்களையும் அள்ளிக்கொள்கிறார்.
தொழிலில்
எவ்வித வருமானமுமின்றி கடன் தொல்லைகள் அதிகரிப்பதால் நகரத்திற்கு குடும்பத்துடன்
புலம்பெயரும் ஒரு சாமான்யனின் வாழ்க்கையில் நடக்கும் துயரங்களை தொகுத்திருக்கிறது City Lights. சொந்த படைப்பு என
மார்தட்டிக்கொள்ளாமல், ஆரம்பக்
காட்சியிலேயே ”Metro
Manila" திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதை எழுத்துவடிவமாக போடும் அந்த
பெருந்தன்மை இங்கு எத்தனை இயக்குநர்களிடம் இருக்குமெனத் தெரியவில்லை.
படம்
பார்த்து முடித்ததும் முதல் காரியமாக அனைத்துப் பாடல்களையும் டவுன்லோட் செய்தேன்.
அவ்வளவு அழகான, மனதை வருடும் ரம்மியான பாடல்கள்.
குடும்பத்தின் மீது அதீத அன்பு வைத்திருக்கும் ஒரு சராசரி மனிதன்,
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டதன் காரணத்தினால் அவர்களின் எதிர்காலத்திற்காக
எடுக்கும் உச்சகட்ட முடிவு தான் இத்திரைப்படம்.
# CITY LIGHTS (Hindi)
.
Comments