”The Day My God Died“ - குழந்தைகளுக்குக் காத்திருக்கும் பாலியல் தொழில் - ஒரு ஷாக் ரிப்போர்ட்



அவன்.. உங்களுக்கு நன்கு பரிச்சயப்பட்டவனாக இருக்கலாம். உங்கள் நம்பிக்கைக்குரியவனாக, நவநாகரீகமானவனாகவும் இருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு பொம்மைகளும், சாக்லேட்களும் அடிக்கடி வாங்கிக்கொடுத்து நன்கு விளையாடிக்கொண்டிருக்கலாம். யாருக்குத் தெரியும்... அவனே கூட, ஒரு அசிங்கமான செயலை உங்கள் குழந்தைகளிடம் நிகழ்த்தும் தருணத்திற்காக காத்துக்கொண்டிருக்கலாம்.
‘The Day My God Died’ – இது பாலியல் தொடர்பான ஒரு டாக்குமென்டரி ரிப்போர்ட் (NDTV-ல் ஒளிபரப்பப்பட்டது). மும்பை பகுதிகளில் பாலியல் தொழில் நடக்கும் இடங்களுக்கு, Spy Camera கொண்டுசெல்லப்பட்டு படமெடுத்து காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோப்பின்படி, பாலியல் தொழிலில் அதிகம் சிறுமிகள் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர், குறிப்பாக ஏழு முதல் பதின்மூன்று வயதுள்ளவர்கள் என்ற அதிர்ச்சியான தகவல் சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதுபற்றிய செய்திகள் நம் காதுகளை எட்டியிருப்பினும், சம்மந்தப்பட்ட காட்சிகளை நேரடியாகப் பார்க்கும்போது வேதனையளிக்கிறது. (ஒரு சிறுமியை எருமைமாடு மாதிரி ஒருவன் தூக்கி அணைத்து முத்தமிடும் காட்சி, சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஒப்பனை செய்து அங்குமிங்கும் உலவவிடும் காட்சி..).
அனுராதா கொய்ராலா – இவர் சமூகப் பணிகளுக்காக 2006, ஆகஸ்ட் 26-ல் உயரிய சர்வதேச விருதான Peace Abbey Courage of Conscience Award விருதுக்காகவும், சி.என்.என். இணையத்தளம் மூலமாக 2010ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட தன்னைப் போன்ற பெண்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘Maiti Nepal’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். பாலியல் தொழிலுக்கு அடிமையாக்கப்பட்ட ஏறத்தாழ 12 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்ட சமூகப் போராளி இவர்.
இவருடைய Maithi Nepal மூலமும் இந்த டாக்குமெண்டரி ரிப்போர்ட்டின் மூலமும் ஒரு சில பெண்கள் தங்களுடைய கடந்த கால வாழ்க்கைப் பற்றி கூறும்போது, தங்களுக்கு நன்கு தெரிந்த உறவினர்களே திரைப்படத்திற்கும் கடைகளுக்கும் கூட்டிச்செல்வதாகச் சொல்லி ஏமாற்றித் தங்களை விற்றுவிட்டதாகவும், ஆரம்ப நாட்களில் தங்களைத் துன்புறுத்தி கற்பழிப்பு செய்ததாகவும் பதிந்துள்ளனர். ஒரு நாளைக்கு இருபதுநபர்கள் வரை வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்றும், ஒத்துழைக்காத பட்சத்தில் மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு அடித்துத் துன்புறுத்தி, கைகால்களைக் கட்டிப்போட்டபடி வாடிக்கையாளர்களை அனுப்புவர் என்றும் கூறினர். இதெல்லாம் நடந்தபோது அவர்களுக்கு ஏழு முதல் பன்னிரெண்டு வயது என்று சொன்னது.. நிச்சயம் யாரையும் பாதிக்காமல் இருக்காது.
தரகர்கள், இடமாற்றம் செய்பவர்கள், லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் செல்லும் காவலர்கள், சிறுமிகளை ஏலமெடுத்துத் தனித்தனி குழுவாகப் பிரித்துவைத்து வியாபாரம் செய்யும் நபர்கள் என்று இந்த அவலத்துக்குத் துணைபோகும் கேவலமான மிருகங்களின் பட்டியல் அதிகம். அதிலும் சிலர், வறுமையால், கடன்தொல்லையால் என தாங்களே முன்வந்து சிறுமிகளை ஒப்படைத்துவிடுவார்களாம். சகித்துக்கொள்ள முடியாத ஜென்மங்கள்..
இம்மாதிரி, கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் சிறுமிகளுள் எண்பது சதவீதத்தினருக்கு HIV பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மீட்கச்சென்ற குழுவினரிடம் சிறுமிகளுள் சிலர், “இது என் வீடு, என்னை நலமாக கவனிக்கினறனர். நான் நன்றாகப் படிக்கிறேன்“ என்று சொல்ல, பிறகு விசாரித்ததில் இவ்வாறு சொல்லும்படி சிறுமிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுவது தெரியவந்தது. சுவர்களுக்குள் கண்ணுக்குப் புலப்படாத குகை போன்றவைகளில் ஒத்துழைக்காத சிறுமிகளை நாட்கணக்கில் அடைத்துவைத்து சித்திரவதை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு, குறிப்பிட்ட இடங்கள் என்றில்லாமல் பல மாநிலங்களிலிருந்தும் சிறுமிகளை கடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இது பெரும்பங்கு வகிக்கின்றது. இதில் ஈடுபடும் தரகர்கள், சம்மந்தப்பட்ட சிறுமிகளின் உறவினர்களையோ, தெரிந்வர்களையோ ஆசைகாட்டி வழிக்குக்கொண்டுவருகின்றனர்.
இந்த ஆபத்திலிருந்து நம் வீட்டுக் குழந்தைகளைக் காப்பாற்ற ஒரே வழி, அவர்களுக்குப் புரியும் வகையில் நாம் எடுத்துச் சொல்வதுதான். Good touch Bad touch முறைகளை சொல்லிக் கொடுப்பது, எது நடந்தாலும் பெற்றவர்களிடம் மனம்விட்டுப் பேசப் பழக்குவது போன்றவை பலன் தரலாம். குழந்தை என்ன சொன்னாலும் பெற்றவர்கள் அலட்சியம் செய்யாமல் காது கொடுத்து, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்க வேண்டும். அநாவசியமாக யாருடனும் நெருக்கமாகப் பழகவிடக் கூடாது. நண்பர்களானாலும் உறவினர்களானாலும் எதிலுமே ஒரு முன்னெச்சரிக்கை பெற்றோர்களுக்கு வேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளை அவ்வப்போது கவனித்துக்கொள்வது நமது கடமை.
அதையும் மீறி ஏதேனும் தவறு நிகழ்ந்துவிடின், அவர்களை அதட்டி பயமுறுத்தாது தன்னம்பிக்கையூட்டி அன்பாக அரவணைக்க வேண்டும். இளம் வயதில் மனதில் பதியும் பல காயங்கள், வளர்ந்தாலும் வடுக்களாகத் தங்கிவிடலாம். அதற்குப் பெற்றோர்களே காரணமாகிவிடக் கூடாது.
.
.

Comments

நல்பதிவு...!

மிருகம் மனிதனாகியது "பரிணாம வளர்ச்சி"யால் என்கிறோம்...!

அந்த மனிதன் "மிருக"மாவது "எந்த வளர்ச்சி"...???????????????????????

ஒருவேளை...!

வட்டப்பாதையில்

வளர்ந்த

வளர்ச்சி...!

வட்டத்தின் ஓர்பாதிதான் இந்த "மனிதம்" எனும் பரிமாண வளர்ச்சியோ...!

வட்டத்தில் மறுபாதி நோக்கிய பயணமா........????????????

விடை தெரியா வினாக்கள்....!
கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் சிறுமிகளுள் எண்பது சதவீதத்தினருக்கு HIV பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.// மனதை நெகிழ செய்தது...
MARI The Great said…
பெண் குழந்தைகளை பெற்றுக்கொண்டவர்கள் வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டுதான் திரியவேண்டும் என்று சொல்வார்கள், இந்த பதிவின் ஒவ்வொரு வரியும் அதைத்தான் உணர்த்துகிறது!
கடவுள் தானே கொடுரமானவர்களையும் படைத்தது. பின் அதற்கு ஏன் அந்த தலைப்பு வைத்தார்கள்.

Popular posts from this blog

உன் கோபங்களைக் காதலிக்கிறேன்..

பெண்களைக் கவர சில டிப்ஸ்

மரணவலி தரும் உன் மௌனம்..